Saturday 8 December 2018

அம்பேத்கர்ரைப் பாதுகாப்போம்!!


                         அம்பேத்கர்ரைப் பாதுகாப்போம்!!


       எதற்காக இம் முழக்கம்? யாரிடமிருந்து அவரைப் பாதுகாக்கா வேண்டியுள்ளது? அரசியல், பண்பாட்டரம்க்கினில் அரங்கினில் பிராமணிய வாதிகளென அழைக்கப்படும் சனாதானிகளிடமிருந்து / நால் வர்ணக் கோட்பாட்டாளர்களிடம் இருந்து பாதுகாக்கவேண்டியுள்ளது. அவர்களின் தாக்குதல்களில் இருந்தல்ல, அவர்களின் அரவணைப் புகளில் இருந்து.
அவர்களின் அரவணைப்பு முயற்சிகளில் என்ன தப்பு? அவர்களே பேசட்டும்.
அவர்; இந்தியக் குடியரசின் யாப்பை ஆக்கியவர்;
அவர்; இந்திய நிதி மூலதனத்தின் செயற்படுநெறியை வகுத்தளித்தவர்;
அவர்; கௌதம புத்தரைத் தொடர்ந்து, பெண் அடக்குமுறைக்கெதிராக கருத்தியல் போராட்டம் நடத்தியவர். இப் போராட்டம் இல்லையேல் பார்ப்பனியப் பெண்கள் இன்னமும் அடிமைகளாகவே இருந்திருப்பர்.
                 தெற்காசிய முழுமையும் கம்யூனிஸ்டுகளின் வசம் போய்விடுமோ என்ற அச்சத்தில் “சுதந்திர இந்திய அரசாங்கத்தை” இந்தியர்களுக்குப் பரிசாக அளித்த, பிரித்தானிய அரசுடனான நட்பைப் பாதுகாப்பதில் குறிப்பிடக் கூடியளவு பங்காற்றியவர்.
                         இவ் அம்பேத்காரை நாம் எம்மவரென உரிமை கொண்டாடுவதில் தப்பேதும் உண்டோ? மிதவாத பிராமணியவாதியான ஜவர்லால் நேருவும், அம்பேத்கரும்  நண்பர்களாக இருந்துள்ளதையும் தீவிர பிராமணிய வாதிகளாகிய நாம் அம்பேத்கருடன் நட்புக்கொள்ள முனைவதையும் வேறு படுத்திப்பார்ப்பது ஏன்?

        இக் கேள்விகள் நியாயமானவையே. இவை ஆக்கபூர்வமான, வளர்திசைத் தன்மை மிக்ககேள்விகளே. ஆனால், இக்கேள்விகளைக் கொண்டு அம்பேத்கரை பிராமணியவாதியாக அல்லது பிராமணிய வாதிகளின் நண்பனாக ஆக்க முற்படுவது அங்கிகரிக்க முடியாதது.

யார் இந்த அம்பேத்கர்? மீழவும் தொகுப்போம்:


1.   1) தான் இந்துவாகச் சாகமாட்டேன் எனப் பகிரங்கப் பிகடனம் செய்தவர், தன்னோடு பல்லாயிரக்கணக்கானோரை இணைத்து பௌத்த மதம் மாறியவர்.

2.     2 ) புத்தரைப் போன்றே இவரும் நான்கு வேதங்களையும் ஏற்க மறுத்தவர்.

3.  3)   நால் வர்ணக் கோட்பாடுதான் இந்திய சமூகத்தில் நிலவும் பெண் அடக்குமுறைக்கான பிரதான காரணமென்பதையும், பெண் அடக்கு முறையின் இருத்தல்தான் நால்வர்ண கோட்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்குகின்றது என்பதையும் கௌதமபுத்தர் புரிந்து கொண்டதைப் போல் அம்பேத்கரும் புரிந்து கொண்டிருந்தார். 

                   சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட அந்நிய மதங்களை நாடாமல் பௌத்த நெறியை நாடியதற்க்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். புகுத்தப்பட்ட இரு பெரும் மதங்களும் பெண் அடக்குமுறை விடயத்தில் பிரமாணியத் துவத்திற்கு சளைத்தவைகளல்ல. மூன்றும், ஆண்மேலாதிக்கம் எனும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகளே. 
   
4.  4) பிராமணியத்துவத்தால் மடைமாற்றம் செய்யப்பட்டு தோற்றுவிக் கப்பட்ட பௌத்த மதங்கள் இரண்டுக்கும்(ஹினாயான, மஹாயான) எதிரான கருத்தியல் போராட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்தவர். மூல பௌத்தமே உண்மையாதெனப் பறைசாற்றி, அதை வழர்க்க முற்பட்டவர்.

5.   5) தலித் உரிமைகளைக் கருத்தில் கொண்டு அம்மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை முன்வைத்தவர். இதை மறுத்த காந்தியுடன் வெளிப்படை யானதோர் அரசியல் போராட்டம் நடத்தியவர். இது தலித் தேசியத்தைப் பற்றிய அம்பேத்கரின் சிந்தனையில் இருந்து உருவான திட்டமேயாகும். காந்தி இதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டார். ஆகவே தனது உயிரைக் கொடுத்தாவது இதை எதிர்க்க முடிவெடுத்தார்.

6.     6) சுய ராஜ்யப் போராட்டக் காலத்தில் அப்போராட்டத்தை ஏற்க்க மறுத்தவர். அச் சுராஜ்யம் சதுவர்ணக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தாகவே இருக்கும் என்பதே அவர் கூறிய காரணமாகும். இதனால், இப் போரட்டக் காலத்தில் இந்திய தேசியக் காங்கிரஸுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அதுவும் பிரமாணித்துவ கட்சிதான் என்பதை அவர் நன்கு புரிந்திருந்தார்.

7.       7)         காங்கிரஸுடன் தன்னை இனங்காட்டிக் கொள்ளாதவர் மட்டுமல்ல. இஸ்லாமியரின் தேசிய உரிமை தொடர்பான விடயத்தில், சவாக்கர் அணியினரால் முன்வைக்கப்பட்ட “இரு தேசம் ஒரு நாடு” எனும் அரசியல் கோட்பாட்டை எதிர்த்தவர். இந்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிற மதப்பிரிவினரை மதிக்காத ஒரு தேசிய இயக்கம், ‘இரு தேசம் ஒரு நாடு” எனக் கூறுவது ஒரு ஏமாற்றே என விழக்கியவர். ஆகவே,  ஜின்னாவின், ‘இரு தேசம், இரு நாடு” எனும் கோரிக்கைக்காகவே வாதாடினார்.

  8) தனது அனைத்து நடவடிக்கைகளிலும் தலித் தேசியத்தை முன்வைத்தவர். தலித் தேசியத்தை ஒரு மொழிவளித் தேசியமாகவோ, பிரதெச வழித் தேசியமாகவோ உருவாக்க முடியாது.         ஏனெனில் அம்மக்கள் திரளுக்கென குறிப்பிட்டதொரு மொழியோ, குறிப்பிட்ட  தொரு பிரதேசமோ இல்லை.       
    ஒரு பொது மதவளித் தேசியமாகவும் உருவாக்க முடியாது. ஏனெனில் இவர்கள் மத்தியில் காணப்பட்ட குலதெய்வ வழிபாட்டு ஒரு பொதுமதமாக உருவாக வில்லை. பிராமணியம் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை. இத் தெய்வங் கள் பிராமணியக் கடவுளர்களின் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டார்கள். அத்துடன், இந்தியாவில் நிலவும் மூன்று பெரிய மதங்கங்களில் எந்த மதமும் இந்தியாவை சாதிகளற்ற, மதவெறியற்ற சமுதாயமாக ஆக்கும் கோட்பாடுகள் அற்றவையாகும். பிராமணியத்தால் ஆதிக்கம் செலுத்தப் பட்டாலும், இந்தியளவிலான ஆதிக்கநிலைக்கு வரமுடியாத நிலையிலுள்ள சைவமும், பிற சமயங்களுங்கூட அவ்விதமே.
ஒரு சமூக மக்கள் திரள் தன்னையொரு தேசிய இனமாக உருவாக்கிக் கொள்வதற்கு, அவசியமான திரள்வுகளில் மரபுவளிப் பண்பாடும் ஒன்றாகும். இதனால், அம்பேத்கர், தலித்துகளை ஒரு தெசிய இனமாக உருவாக்கிக் கொள்வதற்கு பௌத்த நெறியைத் தேர்ந்தெடுத்தார். பௌத்த நெறியின் துணையுடன் தலித்துகள் மத்தியில் நிலவிவந்த குலதெய்வ வழிபாட்டு முறையை தள்ளிவைக்கலாம் எனக் கருதினார். தலித் தேசியத்தின் அடையாளமாக பௌத்தத்தை ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். பௌத்ததை ஒரு மதமாக அல்ல அதையொரு சமூக வாழ்வியல் நெறியாகக் கருதினார். தலித் தேசியத்திற்கும், பிராமணியத் தேசியத்திற்கும் இடையேயான போராட்டத்தை பௌத்தநெறிக்கும், நால் வர்ணக்கோட்பாட்டிற்கும் எதிரான போராட்டமாகத் தொடர விரும்பினார். பாராட்டப்படவேண்டிய அரசியல் மூலோபாயம்.
                       ஆனால் அம்பேத்கரின் குறிக்கோள் நிறைவேறவில்லை. சந்தர்ப்பம் கிடைத் தால் அதை வேறொரிடத்தில் அலசுவோம். இரத்தினச் சுருக்கமாக அடிப் படைக் காரணத்தை முவைக்கின்றேன். பொருள்முதல்வாதி அல்லாதவர் களால் முவைக்கப்படும் சமூக வாழ்வியல் நெறிகள் அவை எவ்வளவு முற்போக்காக இருந்தாலும், காலப்போக்கில் ஒரு மதமாக மாறிவிடும். இது வர்க்க ஒடுக்குமுறை சமூகத்தின் இயல்பாகும். இதனால் பௌத்த நெறியும் ஒரு மதமாக மாறியது. யேசுக்கிறிஸ்துவுக்கும், முகமது நபிக்கும் நடந்ததுதான் புத்தருக்கும் நடந்தது. கன்பூயிசிஸஸுக்கும் இந்நிலை நடந்திருக்கும் ஆனால் சீனக் கம்யுனிஸ்டுகள் தடுத்துவிட்டார்கள்.

                 புத்தருக்குப் பின்னைய பௌத்தம், புத்தரால் முன்வைக்கப்பட்ட சமூக வாழ்வியல் நெறிக் கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளை கொண்ட தானதாக மாறியது. இலங்கை, மலேசியா, கம்பூச்சியா, திபெத் ஆகிய நாடுகளின் பௌத்தஅரசுகள் தத்தமதுநாடுகளில் செய்துவரும் இனஒழிப் புகள், வர்க்க ஒடுக்கு முறைகள், மனிதக் கொலைகள் கொஞ்ச நஞ்சமா?
               புத்தர் ஒரு பரமபௌதீகவாதி. சமூக நிகழ்வுகள் பற்றிய காரண-காரிய தொடபுகளுடனான ஆய்வில் புத்தர் இயங்கியல் பார்வை உள்ளவராக இருந்துள்ளார். ஆனால் பொருள்முதல் பார்வை இருக்கவில்லை, பரம பௌதீகப் பார்வையே இருந்துள்ளது. அம்பேத்கரின் குறிக்கோள் நிறை வேறாததற்கான காரணம் இதுவேயாகும். இதுபற்றித் தொடர்வோம்.

9.   9)   சாதிவாரியான இட ஒதுக்கீட்டை இந்தியாவின் நிரந்தர விதியாக மாற்றியவர். இவ் விதி எந்தவர்ணத்திலும் சேர்த்துக்கொள்ளப்படாத (சமூக அந்தஸ்து முற்றாக நிராகரிக்கப்பட்ட அடிமைகள்) தலித்துக்களுக்கு மட்டும் நன்மைபயக்கக் கூடியதல்ல. நான்காவது வர்ணமாக விதிக்கப்பட்ட சூத்திரர்களுக்கும் (சமூக அந்தஸ்து நிராகரிக்கப்படாத அடிமைகள்) பயன் படக்கூடியதே.

                   இந்திய சாதியமைப்பு ஒரு நிமிர்த்திவைத்த சமபக்க முக்கோணமாகும்.  இம் முக்கோண உச்சியின் கால்பங்கு பிராமணர், ஷைத்திரியர், வைஷியர் ஆகியோரை உள்ளடக்கியது. இதன் மீத முக்கால்பங்கும் இருவகை அடிமைகளாலும் ஆக்கப் பட்டவை. இதில் அடித்தளம் தலித்துகள், அவர்களுக்கு மேல் சூத்திரர்கள். ஆகவே இட ஒதுக்கீட்டின் காரணத்தால், அடித்தட்டில் உள்ளவர்கள் படிப்படியாக முக்கோணத்தின் உச்சத்தை நோக்கி நகர்வார் கள், இதனால் காலப்போக்கில் சமபக்க முக்கோணம் தனது வடிவை இழக்க ஆரம்பிக்கும், எவ்வித தடையுமின்றி இடஒதுக்கீடு தொடருமானால், இந்தியச் சாதிக் கட்டுமான வரைபடம் வட்ட வடிவானதாக மாறக்கூடும். அதாவது சாதிகள் இருக்கலாம் அல்லது இல்லாது போய்விடலாம் நிச்சயமில்லை, ஆனால் தொழிலை வைத்துக் கொண்டு சாதிகளைப்பிரிப்பது சிரமமானதாகிவிடும்.


       இருந்தும், இடஒதுக்கீடு தனியார் உடைமைகளுக்கும் விஸ்தரிக்கப்படும் போதுமட்டுமே இது சாத்தியமாகும். பிராமணியவாதிகளின் தலைமை யிலான அரசியல் தலைமைகள் தனியாருடமையை ஊக்குவிப்பதற்கான காரணங்களில், தலித்துக ளுக்கும், சூத்திரர்களுக்குமான தொழில் வாய்ப்பை இல்லாமல் செய்வதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

            முதலாளித்துவ வளர்ச்சி சாதியத்தை இயல்பாகவே ஒழித்துவிடும் எனக் கருதுவது, தெற்காசியச் சமூகச் சூழலில் மிகமிகத் தப்பானதாகும். சாதியத்தை ஒழிக்க தனியான வேலைத்திட்டங்கள் அவசியம். முதலாழித் துவ வளர்ச்சி பெற்ற அமெரிக்காவுக்கே இன்னமும் மார்ட்டீன் லூதர் கிங்குகள் தேவைப்படும்போது, இந்தியாவின் நிலை எப்படியிருக்கும், இன்னும் பல அம்பேத்கர்கள் தேவையாக உள்ளது.
                ஆகவே இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கும் விஸ்தரிப்பதற்கான போராட்டம் தொடரவேண்டும். அதாவது அம்பேத்கரை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லவேண்டும்.

10. 10 நிதி மூலதனத்தின் செயற்பாட்டிற்கு சாதகமாக அம்பேத்கர் செயற் பட்டதுவும் சூத்திரர்களினதும், தலித்துக்களினதும், பழங்குடி மக்களினதும் தொழில்வளர்ச்சியை மனதில் கொண்டேயாகும். நிலமும், நிதியும் மூவர்ணத்தினரின் கைகளிலேயே குவிக்கப்பட்டிருந்தன. இன்றும் கூட இந்நிலை தொடர்கிறது, சிற்சில அபிவிருத்திகளுடன். இவர்கள் கைகளிலி ருந்த நிதி, தொழில் முலதனச் சுபாவம் கொண்டதல்ல.  ஓரளவிற்க்கு வர்த்தகசுபாவமும், பெருமளவிற்கு லேவாதேவிக் குணாம்சமும் கொண்டதாகும். தொழில் வழர்ச்சிக்கான மூலதனத்தின் தேவையை பூர்த்திசெய்வதில் அம்பேத்கர் அதிக நாட்டங்காட்டிய அம்பேத்கர் நிதிமூலதனச் சுதந்திரமானதாக்க முயற்சித்தார்.

தொடரும்………
08/12/2018----சனிக்கிழமை




Sunday 2 December 2018

தமிழீழ உள்நாட்டு யுத்தமும் அதன் காரண காரியத் தொடர்புகளும்.


தமிழீழ உள்நாட்டு யுத்தமும்
அதன் காரண காரியத் தொடர்புகளும்.
                           
தமிழ் மாணவர் பேரவையின் காலத்தில் இருந்து, தமிழீழ அரசின் ஆளுமைகள் உயிர் நீக்கமும் பதவி நீக்கமும் செய்யப்பட்ட நாள்வரை நடந்த உள்நாட்டு யுத்தம்பற்றி  மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும். https://vidiyalgowri.blogspot.com/2018/11/blog-post_28.html என்ற எனது முன்னைய கட்டுரையில் கூறியிருந்தேன். அக் கட்டுரை இவ் உள்நாட்டு யுத்தத்திற்கான காரணம் விடுதலைப் புலிகள் இயக்கம் மாத்திரமே என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக ஓர் விமர்சனம் வந்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விமர்சனம். இக்கட்டுரையில் அவ்விதத் தொனி வருகிறதேதவிர எனது கருத்து அவ்விதமில்லை. இந்திய சமாதானப் படையுடனான யுத்தத்தில் விடுதலைப்புலிகள் வெற்றிபெறும்வரை, NLFT தவிர்ந்த அனைத்து இயக்கங்களும், உள்நாட்டு யுத்தங்களில் ஈடுபட்டவண்ணமே இருந்துள்ளன. ஒவ்வொரு இயக்கமும் மாறிம்மாறி தற்காப்புனிலையிலும் தாக்குதல் இருந்தே வந்துள்ளன. IPKF உட்னான யுத்தத்தின்   வெற்றியின் பின்னர், புலிகள் இயக்கம் தாக்குதல் நிலைக்குச் சென்றது, மீத இயக்கங்கள் அனைத்தும் தற்காப்பு நிலைக்குச் சென்றன. கூனிக் குறுகி நிலைதாடுமாறி நிற்கும் நிலைக்கு உள்ளாகின. முள்ளிவாய்க்கால் இனஒழிப்புக் கொலைவரை புலிகளின் இராணுவப்பரிவு வெற்றிப் பெருமிதத்துடன் மார்தட்டித் திரிந்தது. ஆகவே தமிழீழ உள்நாட்டு யுத்தத்திற்கான முழுப்பழியையும் விடுதலைப் புலிகள் மீது போடமுடியாது. ஆடு வெட்டமுன்னர் புடுக்குக்குச் சண்டைபிடித்து ஆட்டையே எதிரியிடம் பறிகொடுக்கும் சாதனையைப் புரிந்தது புலிகள் மட்டுமல்ல, அனைத்து இயக்கங்களுந்தான். ஆனால் இவ் உள்நாட்டு யுத்தத்தில் புலிகளின் அரசியல் பார்வைவேறு, பிற இயக்கங்களின் அரசியல் பார்வைவேறாகும். இது பற்றி இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.
                      முன்னைய கட்டுரையில் தெழிவில்லாத அடுத்த விடயம். இக்கட்டுரையின் வாசகன் உள்நாட்டு யுத்தம் பற்றிய ஒரு தூய்மைவாத அல்லது அத்துமீறல்வாத கண்ணோட்டத்தைப் பெறக்கூடிய விதத்தில் அமையக் கூடிய ஆபத்து உண்டு. எவ்விதம் என்பதை நோக்குவோம். நான்கு காரணங்களைக் கூறலாம்.
1)   முதலாளித்துவ பேரகங்காரவாத பாரளுமன்ற ஜனநாயகத்தின் இருத்தல்.
2)   காலனியாதிக்கத்திற்கு முன்பிருந்தே தொடரும் அல்-முதலாளித்துவ நடுத்தர-சிறு உடமை விவசாய, தமிழ் மரபுகள்.
3)   மூலதனக் குவியலுக்கு பெரும் தடையாக இருக்கும் தமிழீழப் பொருளாதாரக் கட்டுமானம்.
4)   தமிழீழப் போராட்டக் களம் பாசிஸத் தேசியவாதமும், அல்-பாசிஸத் தேசியவாதமும் தமக்குள் மூர்க்கமுடன் களமாக இருப்பது.மோதிக்கொள்ளும் களமாக இருப்பது.

1 ) முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் இருத்தல்:-

             மஹாவம்ச பேரகங்காரவாத முதலாளித்துவ ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லா நிலையிலேயே தமிழ் மக்களிடையே ஆயுதப்போராட்டத்தின் அவசியம் பற்றிய கருத்து மலரத் தொடங்கியது. இது மக்கள்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கருத்தல்ல. தமிழ் எம்.பிக்களை பாரளுமன்றத்தில் இருந்து துரத்தியது, பாராளுமன்றத்தை தமிழ்மக்களின் நலனுக்கு எதிரானதொன்றாக மாற்றியது ஆகிய நடவடிக்கைகள் மக்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி துரிதமாக நடத்திச் சென்றன.
                 ஆனால், பாரளுமன்ற ஜனநாயகத்தின்(பா.ஜ) மீதான நம்பிக்கையின்மை எடுத்த எடுப்பில் ஆயதப்போராட்ட இயக்கமாக மாறியமை, ஆயுதப் போராட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பாதகமானதாகவே அமைந்தது. இவ் நம்பிக்கையின்மையின் அடுத்த கட்டம் மக்கள் திரள் திரளாகவும், தொடர்ச்சியாகவும் வீதிக்கு இறங்கிப் போராடுவதாக அமையவேண்டும். இன்று இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், ஐரோப்பிய நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டங்கள், சீனாவில் நடந்த அபினி எதிர்ப்பு யுத்தம், இந்தியாவில் நடந்த உப்புச்சத்தியாகிரகம்,  அந்நியப் பொருள்கள் எதிர்ப்பு இயக்கம் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். இவ்விதமான எந்தவோர் இயக்கமும் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசத்தில் நடைபெறவில்லை. சத்தியாகிரகக் காலத்தில் நடைபெற்றது. ஆனால் இது ஆயுதப்போராட்டத்துக்கான முன்னுரையல்ல. மீண்டும் மக்கள் பாரளுமன்ற ஜனநாயகத்துள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டார்கள்.
                   ஆனால், 70களின் நிலமை அவ்விதமல்ல. மக்கள் தயார், ஆனால் அவர்களுக்கான சந்தர்ப்பம் வளங்கப்படவில்லை. மக்களின் பங்களிப்புகள் இல்லாமலேயே, மக்களை இயல்பாகவே விழிப்ப்டையச் செய்யாமலேயே, அவர்களைப் ஆயுதப்போராட்ட சூளலுக்குப் பயிற்றுவிக்காமலேயே, ஆனாலும் மக்களின் ஆதரவுடன் ஆயுதப்போராட்ட சகாபதம் ஆரம்பமாகியது. வகைதொகையின்றிக் காணப்பட்ட பாரளுமன்ற ஜனநாயக தலைவர்களும், சீடர்களும் அவசர அவசரமாக தமது முகங்களில் முகமூடி அணிந்து கொண்டார்கள். ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்கு அல்லது அதை சீர்குலைப்பதற்கு தம்மால் ஆனவற்றைச் செய்யத்தொடங்கினார்கள். மக்களின் விழிப்புணர்வின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கு  காட்டிக் கொடுப்புகள், ஊடுருவல்கள், அரசியல் திசைதிருப்பல்கள், சதிகள், உள்ளிருந்தே அறுத்தல் என பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
             உள் நாட்டு யுத்தத்திற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகும். தொடங்கும் போதான தவறுகளின் விளைவுகளால் இளைக்கப்பட்ட அடுத்தகட்ட தவறாகும்
2) காலனியாதிக்கத்திற்கு முன்பிருந்தே தொடரும் அல்-முதலாளித்துவ நடுத்தர-சிறு உடமை விவசாய, தமிழ் மரபுகள்.
தொடரும்



Wednesday 28 November 2018

மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும்.


மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும்.
             தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், தமது இன்னுயிர்களை இழந்த போராளிகளுக்கும், தாமே விரும்பி தமதுயிரைத் தற்கொடை செய்துகொண்ட புலிப் போராளிகளுக்குமான வீரவணக்கத்தை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
        அவர்கள் தமது இலட்சியத்தை நிறைவேற்ற, பின்பற்றிய கொள்கைகளும் நடைமுறைகளும் என்னவாக இருந்தாலும் சரி, அவர்களின் இலட்சியம் உயர்வானது; அவர்களின் ஈட்டல்கள் வளர் திசைத்தன்மைபெற்றவை. தமிழீழத் தேசம் நடைமுறைக்கு வரும்வரை நிலைத்து நிற்கக்கூடியவை.
    ஆனால், அவர்களின் இலட்சியம் இன்னமும் நிறைவேறவில்லை. அவர்கள் விட்ட இடத்தில் இருந்து, அவர்கள் விட்ட தவறுகளைத் தவிர்த்து, தமிழீழ இலட்சியம் நிறைவேற உளைப்பதுதான் அவர்காலத்திய போராளிகள் அனைவரினதும் சமுக மற்றும் தேசியக் கடமையாகும். முன்னோர்களினது மட்டுமல்ல, புதிய தலைமுறையினரது கடமையும் இதுதான். இதற்காக சபதமெடுக்கும் நாளாக, மன உறுதியைப் பலப்படுத்தும் நாளாக இந் நாளை எடுத்துக் கொள்வோம்.
அனைதுத் தமிழீழ மாவீரர்களா அல்லது புலி மாவீரர்களா?
      ஆனால், இவ்வித சபத மெடுக்கும் நாளாக, புலி மாவீரர் நாள் அமைந்திருப்பது தவறு  என்பதுவே எனது கருத்தாகும். காரணத்துக்குள் செல்கிறேன். இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் போராட்டம் தனது வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வளர்திசைத் திருப்புமினைகளைக் கண்டுள்ளது. அவையாவன:
1)  1-வது வளர்திசைத் திருப்புமுனை:            இலங்கைத் தேசியத்தில் இருந்து தமிழ்த் தேசியம் பிரிந்து, தனி அரசியல் அணியாக மாறியது. பெயர்: தமிழ் காங்கிரஸ். இத் திருப்புமுனைத் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம்.
2) 2-வது வளர்திசைத் திருப்புமுனை:                    முழு இலங்கையிலும் 50க்கு50 எனும் நிலையில் இருந்து சமஸ்டி எனும் கோரிக்கையாக மாறியது. இத் திருப்புமுனைத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.
3)  3-வது வளர்திசைத் திருப்புமுனை:          பாராளுமன்ற எல்லைக்குள் மட்டுப்பட்டிருந்த சமஸ்டிக்கான போராட்டம், வெகுஜனப் போராட்டமாக மாறியது. இத் திருப்புமுனைத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.
4) 4-வது வளர்திசைத் திருப்புமுனை:   சமஸ்டிக்கோரிக்கை தனிநாடுக் கோரிக்கையாக மாறியது. வெகுஜனப் போராட்டம் பாரளுமன்றத் தன்மையில் இருந்து விடுபட்டது. வட்டுக்கோட்டை மாநாட்டை அதற்கான நாளாக வைத்துக்கொள்ளலாம். இத் திருப்புமுனைத் தலைவரும்  எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள்தான். இம் மூன்று மாபெரும் திருப்புமுனைகளுக்கும் காரணமாய் இருந்தது தந்தை செல்வாதான்.
5)   5வது வளர்திசைத் திருப்புமுனை:     போர்க்குண்மிக்க வெகுஜனப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்றது. இத் திருப்புமுனைத் தலைமை தமிழீழ மாணவர் பேரவையாகும்.
6) 6-வது வளர்திசைத் திருப்புமுனை:           மஹாவம்சப் பேரகங்காரவாத அரசியல் அணியினருக்கு எதிராக நடந்துவந்த ஆயுதப் போராட்டம் அரச படைகளுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளாக மாறியது. 1983 இல் யாழ்/ திந்நவேலியில் நடந்த இராணுவத் தாக்குதலை திருப்புமுனையாகக் கொள்ளலாம். திருப்புமுனைத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும்.
7)    7-வது வளர்திசைத் திருப்புமுனை:           முறைசாரா யுத்தம் (கொரில்லா யுத்தம்), முறைசார் யுத்தமாக (நிரந்திர படைகளினூடான யுத்தம்) மாறியது இதுதான் தமிழீழப் போராட்டத்தின், இதுவரை இல்லாதளவிற்கான மிக உயர்ந்த திருப்புமுனையாகும். இப்போதுதான் தமிழீழ அரசுக்கான அத்திவாரம் அமைகின்றது.
. ஆனையிறவு மூகாமின் மீதான தாக்குதலை இத் திருப்புமுனைக்கான நிகழ்வாகக் கொள்ளலாம். இத் திருப்புமுனைத் தலைவரும் பிரபாகரன்தான்.
8)   8-வது வளர்திசைத் திருப்புமுனை:                    1970 களில் இருந்தே சிறி லங்கா அரசுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த அரசியல் இராணுவ மோதல்கள் கூர்மையடைந்து இந்திய அரசுடனான மோதலாக மாறியது. ஸ்ரீ லங்கா அரசால், இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இந்திய சமாதானப் படையுடனான மோதலைத்தான் குறிப் பிடுகிறேன். இத் திருப்புமுனைத் தலைவர் பிராபகரன் மட்டுந்தான் என்றோர் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறு, இத் திருப்புமுனைத் தலைவர்கள் பிரபாகரனும், ஜே வி.பிஇயக்கத் தலைவரும், ஸ்ரீ லங்கா அரசின் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுமே ஆகும். இப்போராட்டத் தையொட்டிய மூவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாக இருந்தாலும் மூவரும் இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். இவ் இருவரில் ஜே.வி.பியின் போராட்டந்தான் அதிக அரசியல் தாக்கத்தை உருவாக்கியது.
9)   9-வது வளர்திசைத் திருப்புமுனை:     இந்தியாவுடனான யுத்தம் முடிந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு தற்காலிக இணக்கம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான ஒரு அரசியல் உடன்பாடு உருவானது. அக் கட்சியின் தலைமையில் தமிழீழ அரசாங்கம் ஒன்று உருவானது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளின் உயர்ந்த கட்ட வழச்சியாகும். உயர்ந்த கட்டம் என்பதற்க்குப் பதிலாக உச்ச கட்டமெனக் கூறலாம். பாதுகாப்பானதொரு இயக்கம்-தீர்மானகரமான(decisive) சக்தி; அவ் இயக்கத்தின் கீழானதொரு இராணுவம்-அடிப்படை basic சக்தி; இவ் இரண்டின் அனுசரணையுடனான ஒரு அரசாங்கம்-பிரதான main சக்தி. வேறென்ன வேண்டும். பிரதான சக்தியான அரசாங்கம் இராணுவத்தால் நியமிக்கப்பட்ட அரசாங்கமாகவே இருந்தது; அது ஆரம்பத்தில் அவ்விதந்தான் இருக்கும். இவ் ஒன்பதாவது வளர்திசைத் திருப்புமுனைத் தலைவரும் பிரபாகரனேயாகும்.
அதைப்படிப்படியாக மக்கள் ஜனநாயக அரசாங்கமாக மாற்றுவதுதான் புலிகள் இயக்கத்தின் முன்னால் இருந்த கடமையாகும். இவ்விதம் நடந்திருந்தால் தமிழீழத் தேசியம் தனது வழர்ச்சியின் இரண்டாம்கட்ட உச்ச நிலையை அடைந்திருக்கும்.
ஆனால், அவ்விதம் நடக்கவில்லை. மாறாக தலைவர் பிரபாகரன் அவர்களால் தொடங்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டு யுத்தம் இவ்வளர்ச்சியைத் தடுத்தது. புலிகளின் இராணுவம் பிரபாகரன் தலைமையில், தமிழீழ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்தியது. தமிழீழ அரசாங்கத்தின் பிரதானிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு முகவரிநீக்கமும் செய்யப்பட்டனர்; சிலர் உயிர் நீக்கமும் செய்யப்பட்டனர். உயிர் நீக்கம் செய்யப்பட்டவர்களுள் மாத்தையாவும் ஒருவர். யோகி, மூர்த்தி ஆகியோர் முகவரி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய ஏஜெண்டுகள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். இதற்கான பகிரங்க ஆதரம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
தமிழீழ உள்நாட்டு யுத்தத்தை நியாயப் படுத்துவதற்காகவும், அது பற்றிய விமர்சனங்களை அடக்குவதற்காகவும், ஸ்ரீ லங்கா அரச படைகளுக்கு எதிரான முறைசார் யுத்தத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது. அவர்களை வலிந்து சண்டைக்கு இழுக்கும் வேலைத்திட்டங்கள் பின்பற்றப்பட்டன. இவ்வித சூளலை எதிர்பார்த்திருந்த ஸ்ரீ லங்கா இராணுவம் முழு மூச்சுடன் யுத்தத்தில் இறங்கியது, அடிவாங்கிய இந்தியா இலங்கை இராணுவத்துக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை முடமாக்கியது, பிரபாகரனை அரசியல் கோமா நிலைக்கு உள்ளாக்கியது, தமிழ் மக்களிடையே அச்சத்தை ஆழப்பதிப்பதற்காக தெற்காசியாவே இது  வரை கண்டிராத ஒரு இனஒழிப்பையும் நடத்தி முடித்தது.
         மாவீரர் பட்டியலுக்கு உரியவர்கள்யார்?
        இக் கேழ்விக்குப் போகுமுன்னர், 9வது திருப்புமுனை எனும் பகுதியில் பிரபாகரனால் நடத்தப்பட்ட இரண்டாவது தமிழீழ உள்நாட்டு யுத்தம்பற்றிக் குறிப்பிடிருந்தோம், அவ்விதமானால் முதலாவது உள்நாட்டு யுத்தம் எது? 7-வது வளர்திசைத் திருப்புமுனை. எனும் பகுதிக்குச் சென்று தொடரவும்.
        கொரில்லா யுத்தத்தை மரபுவழி யுத்தமாக மாற்றியது காலப் பொருத்தமானதா என்றோர் கேள்வியை எழுப்பித் தொடர்வோம். அதாவது 7வது திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற காலம் பொருத்தமானதா? இல்லை. இங்கோர் அவசரத்தன்மை காட்டப்பட்டுள்ளது. எவ்விதம்?
        1983 ஜுலைக் ‘கலவரந்தான்’ இலங்கையில் நடந்த முதலாவது இன ஒழிப்பாகும். இது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும். முஸ்லீம் மக்களும் விதிவிலக்கல்ல. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் மாத்திரமல்ல, இலங்கையெங்கணும் நடந்தவோர் இன ஒழிப்பாகும். 1977 இன் இனத் தாக்குதல் குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன் அமைப்புரீதியாக நடத்தப்பட்டதாகும். ஆனால், 1983 அவ்விதமல்ல, அனைத்து சிங்கள இனவாதிகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். பௌத்த மதபீடங்கள், பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கொள்ளையர்கள் இத்தியாதிகள் அனைவரும், அவரவர்களுkகு எட்டிய ஆயுதங்களுடன் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். சொந்தக் குரோதங்கள், பொருளாதாரப் போட்டிகள், நில அபகரிப்புகள், காம இட்சைத்தீர்ப்ப்கள், தநிநபர் பழிவாங்கல்கள் அனைத்தும் நிறைவேறின. இலங்கைத் தேசியர்கள் உட்பட இலங்கையர்களிடையே இன, மத, சாதிய ஒற்றுமையை விரும்பும் அனைவரும் திகைத்துப்போய் இருந்தார்கள். இவ்வித ஒரு நிகள்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், இலங்கைத் தேசியர்களிடையேயும் தமிழ்பேசும் மக்களிடையேயும் தமிழீழப் போராளிகளின் ஆயுத எழுச்சிக்கு ஆதரவான போக்குகள் உருவாகின. இது அனைத்துப் பகுதிகளிலும் கொரில்லாத் தாக்க்குதல் அவசியம் எனும் மன நிலையை அனைத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் உருவாக்கியது. சிங்கள நண்பர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவானது. பாதிக்கப்பட்ட ஜே.வி.பி இயக்க நண்பர்களில் பலரும் இதற்குள் அடங்குவர். அதுமட்டுமல்ல, ஜே ஆரால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை எதிர்த்து இயக்கங்கள் உருவாகும் சூளலும் உருவாகிறது.
        இச் சுளலைப் பயன்படுத்தி தென் இலங்கையிலும் தமது அணிகளை உருவாக்கும் பணிகளில் தமிழ் இயக்கங்கள் ஈடுபட ஆரம்பித்தன, வளர்ந்தும் வந்தன. புளட், ஈபிறஎல் எப், ஈறோஸ் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆற்.ஜெயவர்த்தனா ஒரு அமெரிக்கப் பற்றாளராக இருந்ததால், இந்திய மத்திய அரசும்,ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தது. முன் கூறிய இயக்கங்களுக்கு ஆதரவு செலுத்தவும்  ஆரம்பித்தன. எதிர்க் கட்சியாகச் செயற்படும் முரிமையும், பாராளுமன்ற உரிமையும் மறுக்கப்படுவதால், தமிழர்விடுதலைக் கூட்டணி இந்தியாசெல்கிறது. இங்குதான் பிரபாகரன் மன அவஸ்தைக்கு உள்ளாகிறார். தன்னால் தொடர்ந்து சீண்டப்பட்டுக் ஒண்டிருந்த இவ் இயக்கங்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தத்தையே நடத்த விரும்புகிறார். தமிழீழப் பிரதேசத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொணர் வதற்காக தமிழீழத்தை முறைசார் யுத்தப்பிரதேசமாக மாற்றுகிறார். பிற இயக்கங்களின் இருத்தலைச் சாத்தியமற்றதாக்குகிறார்.
        வெற்றியும் பெறுகிறார், ஆனால் தன்னைப் பொறிக்கிடங்கினுள் அடைத்துவிடுகிறார். கொரில்லா யுத்தத்தை இலங்கையின் சாத்தியமான இடங்களுக்கும் பரப்பி அதன் பலாபலன்களைப்பொறுத்து, பிற இயக்கங் களையும் இணைத்தவண்ணம், முறைசார் யுத்தம் என்ற கட்டத்திற்குச் சென்றிருக்கலாம். அப்போது எதிரி தனது படைகளை ஒரு இடத்தை நோக்கிக் குவிப்பது சாத்தியமாகி இருக்கமுடியாது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதை நிருபித்துவிட்டார்.
       இப்போது மாவீரர் பட்டியலுள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவர்கள் யார்? எனும் கேள்விக்குச் செல்வோம்.
1)     தாமிழீழ மாணவர் இயக்கக் கால (5வது வளர்திசைத் திருப்புமுனை) உயிர்த்தியாகிகள் விடுபட்டது ஏன்? அனைவரும் அறிந்த உதாரணம் உரும்பிராய் சிவகுமார்.
2)   6வது மற்றும் 7வது காலகட்டங்களில் அனைத்து இயக்கங்களும் பாதுகாப்பு நிலைகளுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புப் படைகளுக்கு சேதங்களை உருவாக்கியுள்ளன. வவுனியா பொலிஸ் தாக்குதல்-புளொட்; யாழ்தேவித் தாக்குதல்-ரெலோ; காரைநகர் தாக்குதல்-ஈபிஆறெல் எஃப் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். இவ் உயிர் தியாகிகள் விடுபட்டது ஏன்? தமது துணிச்சலான நிலைப்பாட்டிற்காக உலகமே போற்றிய குட்டிமணி, தங்கத்துரை என்னவானார்கள்.
3)   9வது திருப்புமுனையின் பின்பான காலப்பகுதியில் நடந்த தமிழீழ உள்நாட்டு யுத்தத்தின் போது மரணமடைந்தவர்களை துரோகி பட்டியலுக்குள் உள்ளடக்குவது என்ன நியாயாம். எடுத்துக்காட்டு மாத்தையா?
4)   அதேபோல் முதலாவது உள்நாட்டு யுத்தத்தின் போது மரணித்தவர்களை எந்தக் கணக்கில் வைப்பது? குறிப்பாக ரெலோ இயக்கப் போராளிகள்.
5)   எந்த இயக்கத்தையும் சாராமல் தாம் சாகப்போகிறோம் என்பதைத் தெரிந்தும், போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்பதற்காக, ஆயுதப் படையினரிடம் தமது இன்னுயிரை இழந்தவர்களும் உள்ளனர்.
      இவ் ஐந்து பிரிவினரின் ஒட்டுமொத்தக் கணக்கு நிச்சயமாக ஆகக் குறைந்தது ஆயிரத்தைத் தாண்டும். தமிழீழ வரலாறு இவர்களை மறந்து விடுதல் நியாயமா? நிச்சயமாக போராளிகளுக்குச் செய்யும் அநீதியேயாகும். ஆகவே நவம்பர்-27 விடுதலைப் புலிப் போராளிகளுக்கான நினைவுநாளே தவிர தமிழீழப் போராளிகள் அனைவருக்குமான நினைவுநாளல்ல. ஆகவே புலிகளிம் மாவீரர் நாளில் நேரெதிரான இரு விடயங்கள் நடைபெறுகின்றன ஒன்று போற்றப்பட வேண்டியவர்களில் தம்மவர்கள் போற்றப்படுகிறாரகள், பிறர் திட்டமிட்டு மறைக்கப்படுகிறார்கள். புலிகள் இன்னமும் தம்மால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த தமிழீழ உள்நாட்டு யுத்தப்போக்கை இன்னமும் கைவிடவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.







Sunday 11 November 2018

நவீன யங்கிகள்


நவீன யங்கிகள்
              இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரத்தைப் பறித்ததுவம், மலையக மக்களை வர்க்க, தேசிய அடிமைகளாக்கியதுவும், முஸ்லீம் மக்களை அவர்களின் இயல்பான குடியிருப்புகளில் இருந்து துரத்தியடித்ததுவும் இந்தியாவா? 1950 களுக்கு முன்னரேயே இவை முடிக்கப்பட்டுவிட்டன. யூ.என்.பி அரசாங்கமே இவற்றை நடத்திமுடித்துவிட்டது. உலகளவிலான முதன்மை வல்லரசான அமெரிக்காவினதும், அதன் நேசநாடுகளின் (குறிப்பாக பிரித்தானிய, NATO) ஏஜெண்டுகளாகச் செயற்பட்ட கட்சிதான் இந்த யூ.என்.பி கட்ட்சியாகும். இக் கட்சிதான் இலங்கையில் முதன்முதலின் ஆரிய மேன்மைபற்றிப் பேசியது. சிங்கள-பௌத்த மக்களைப் பாதுகாக்க இலங்கைக்கு ஒரு ஹிட்லர் தேவையென முழங்கியதும் இவர்கள்தான். மஹாவம்சத்தை பேரகங்காரத்தன அரசியல்மயப்படுத்தியதுவும் இக்கட்சியைச் சார்ந்தவர்கள்தான். அதற்குத் துணைபுரிந்தது அமெரிக்க-பிரித்தானிய மதவாதிகள்.
            
      அதுவரை பிராந்திய வல்லரசாக வளர எத்தனித்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கும், இலங்கைக்கும் எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் செய்த கைங்கரியத்தை இந்திய பிராந்திய வல்லரசு தனது கைகளில் எடுத்துக் கொள்கிறது.
         
         ஆனால் இக்கட்டுரை உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும், பிற்பகுதியைமட்டும் வலியுறுத்துவது ஏன்? இலங்கையில் தேசிய இனச்சிக்கல்களை யார்தோற்று வித்தார்களோ, இவ் அடக்குறையை அரசியல் யாப்பாக்க யார் ஆக்கினார்களோ( விவாதத்திற்குரிய யாப்பை கொணர்ந்தது “அமெரிக்கன் டிக்கி அல்லது யங்கி” யென அழைக்கப்பட்ட ஜே ஆர் ஜெய்வர்த்தனா அல்லாமல் வேறுயார். எதற்காக இந்த ஓரவஞ்சனை? அறியாமையா? தெற்காசியப் பிராந்தியத்தை தனது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கான அமெரிக்கத் திட்டத்திற்கான ஆதரவா?
          தெற்காசிய இறமை பாதுகாக்கப்படவேண்டும். இந்தியாவின் பெரியண்ணன் நிலவுடைமைப் பெரியண்ணன் நாட்டாமைத்தனமும் வேண்டாம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பெரியண்ணன் நாட்டாமைத்தனமும் வேண்டாம். இரண்டு பெரியண்ண ன்களையும் உலகைவிட்டு அடித்துத் துரத்துவோம். புதிய “அமெரிக்கன் டிக்கிகளும் அல்லது யங்கிகளும்” எமக்குத் தேவையில்லை.

https://www.facebook.com/kaakamEnaiyam/posts/498498803982895 எனும் முகநூல் கட்டுரைக்கான பின்னூட்டல்

Thursday 8 November 2018

அரசியல் நெருக்கடியல்ல, இராணுவ எதிர்ப்புரட்சி



        ஸ்ரீ லங்காவின் இன்றைய நெருக்கடியில் இந்தியா என்ன செய்யக் கூடும் என்பதை ஆராய்வதற்கு இரு   விதமான களங்கள் உண்டு. முதலாவது: உள்நாட்டுக் களம்; இரண்டாவது தெற்காசியக் களம்.

        உள்நாட்டுக் களம்:-   உள்நாட்டுக் களத்தில் இந்தியா என்ன விதமான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது இன்னமும் 08/11/2018வரை பகிரங்கத்திற்கு வரவில்லை. இந்தியாவுக்கே இன்னமும் தெரியவில்லை. இந்தியா தடுமாறுகிறது போலும். இலங்கையில் நடப்பது ஒரு அரசியல் நெருக்கடிபோல் தோற்றமளித்தாலும் உண்மையில் அதுவோர் இராணுவ எதிர்ப்புரட்சியேயாகும். இதை இந்தியா நன்கறியும். அமெரிக்காவும் அறியும், நேட்டோவும் அறியும், SCO வும் அறியும். அதேபோல் எந்த நாட்டின் இராணுவமும் இவ் இராணுவ எதிர்ப்புரட்சியில் நேரடியாகத் தலையிடமாட்டாது என்பதையும் அனைவரும் அறிவர். தன்னாலும் அது முடியாது என்பதை இந்தியாவும் நன்கறியும். முடியாதென்பதல்ல பிரச்சனை, மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
          இன்று நேற்றல்ல முள்ளியவளை இனப்படுகொலையின் போதே இராணுவம் இவ் இராணுவ எதிர்ப்புரட்சியில் வெற்றிபெற்று விட்டது. அவ் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதில் ஒரு சிறு விட்டுக்கொடுப்பைக்கூட இராணுவம் செய்யவில்லை. தமிழீழப் பிரதேசம் இன்னமும் நேரடி இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அங்குசெயற்படவில்லை. இதனால், தெற்காசியாவின் மிகச்சிறந்த பேரகங்காரவாத இராணுவ மென்ற பாராட்டுதலையும் அங்கிகாரத்தையும் அமெரிக்கா உட்பட உலகநாடுகளிடம் இருந்து பெற்றுவிட்டது. இவ் இராணுவம் பலவீனப்படுமானால் இலங்கை இறமைபெற்ற நாடாக மாறிவிடும் என்பது அனைத்து வல்லரசுகளுக்கும் தெரியும். ஆகவே இவ் இராணுவத்தை  பலவீனப்படுத்தும் முயற்சியில் எவரும் இறங்கத் துணிய மாட்டார்கள். மாறாக முடிந்தால் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொணரமுயலாம். அவ்வித மானால் நடைபெற்றுவரும் இவ் அரசியல் சர்ச்சைக்கான காரணம் என்ன? யார்? எது?

      ஸ்ரீ லங்கா இராணுவமேதான் என்பதே இதற்கான பதிலாகும். இலங்கையை உண்மையிலேயே ஆழ்வது இராணுவந்தான் என்றால், இவ்வித அரசியல் நெருக்கடியை உருவாக்கவேண்டிய காரணம் என்ன? பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.

      1வது காரணம்:- ஐ.நா சபையால் இராணுவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட கௌரவச் சிதைவை தடுத்துநிறுத்துவதில் “சிறிசேன-றணில்” அரசாங்கம் காட்டிவரும் இயலாமைத்தனம்.

         1989 மே 16 கோரக்கொலைகளுக்காக ஸ்ரீ லங்கா இராணுவத்தின் மீது ஐ.நா சபை குற்றஞ் சாட்டியுள்ளது. அக் குற்றச்சாட்டு இன்னமும் தொடர்கிறது. சமீபத்தில் றோஹின்ய இஸ்லாமியர்களை இன ஒழிப்புச் செய்ததற்காக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி மீது, உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ஐ.நா சபை சமீபத்தில் அறிவித்துள்ளது. இத் தகவல் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்திருக்கலாம். கையாலாகாத சிறிசேனா-றணில் அரசாங்கம் இருந்துமென்ன இல்லாவிட்டாலென்ன என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
           2வது காரணம்: வாடகைக்கு அமர்த்தப்பட்ட தமிழ்த் தேசிய மிதவாதிகளின் கையாலாகத்தனம்.
       தமிழீழ மக்களிடையேயும், மலையகத் தமிழ் மக்களிடையேயும் மீளவும் தோன்றக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட, “தலைதூக்கக்கூடும்” என எதிர்பார்க்கப்படும் “தீவிரவாதத்தை”க் கட்டுப்படுத்துவதற்காகவும், தமிழ்தேசிய மிதவாதத்தை (அதுவும் கொழும்புசார் மிதவாதத்தை) அனைத்துத் தமிழீழ மக்களின் அரசியலாக ஜனரஞ்சகப் படுத்துவதற் காகவும் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களே இன்றைய தமிழ் எம்பிக் களும், மாகாணசபை உறுப்பினர்களுமாகும். இதற்காக இம் மிதவாத அரசியல்த் தலைவர்களுக்கு அளப்பரிய “நவீன் அடிமைத்தன அரசியல் அந்தஸ்தும்” பொருளாதாரச் சலுகைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இம் மிதவாத தமிழ்த் தலைவர்கள் தமது எஜமானர்களின் எதிர்பார்ப் புகளை எள்ளவும் நிறைவேற்றவில்லை. தமது வர்க்க நலனை அதிலும் குறிப்பாக தமது கொழும்புசார், ஐரோப் பியசார் வர்க்க நலனை உயர்த்திக் கொள்வதிலேயே நாட்டங்காட்டி னார்கள். தாம் நினைத்தைவிட தம்மை உயர்த்தியும்  கொண்டார்கள்.
       ஆனால், அடுத்தபக்கத்தில் தமிழ் பேசும் மக்களோ தம்மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை மெதுவாக, ஆனாலும் மிகப் பரவலாகவும், முறைப்படுத்தப்பட்ட முறையிலும் வளர்த்தெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இம் மக்கள் எழுச்சிகள் தான்தோன்றித்தனமானதோ, எந்த அரசியல் ஸ்தாபனங்களின் சுயநலனுக்காக ஆனதோ அல்ல. அவை அமைப்புரீதியாக வளர்ந் துவருகிறன. சிறைக்கைதிகள் விடுதலைக்காகவும், கிழக்கு மாகாண குடிநீர்கொள்கைக்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு நில மீட்புக் கெதிரா கவும், நடைபெற்றுவரும் போராட்டங்கள் அவற்றில் சிலவாகும். விலைபோன மிதவாதிகள், இப்போக்கை தடுத்து நிறுத்துவதில் கையாலாகதவர்களாகவே உள்ளனர். கையாலாகதவர்களைக் கழட்டி விடுவது தப்பா? இது இராணுவத்தின் வாதம்.
  3வது காரணம்:இஸ்லாமி யர்களைக் கையாளும் விவகாரம்.
       தமிழீழம் எழுச்சி பெற்றதன் பின்பான காலத்தில் இருந்து இன்றுவரையான காலத்தில் தமிழீழத்தில் மூன்று வகையான இஸ்லாமிய இன ஒழிப்புநடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
முதலாவது: IPKF ஆல் நடத்தப்பட்டது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளல் அவ்வளவு சிரமமானதல்ல. இந்தியரசின் இஸ்லாமிய போபியா(Phobia) பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.
இரண்டாவது: தமிழ்ழ அரச உருவாக்கத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தால், உலகறியவும் இரகசியமாகவும் நடத்தப்பட் டவை. இதற்கான காரணகாரியத் தொடர்பை அவர்களும் சொல்ல வில்லை, எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் இராணுவ எதேச்சதிகாரப் போக்காக இருக்கலாம் எனக் கருதுகிறேன். அல்லது ஏதோவோர் அந்நிய சக்தியின் தேவைக்காக நடந்திருக்கலாம்.
மூன்றாவது: சிறிசேன-ரணில் மிதவாத அரசாங்கத்தால் சமிபகாலமாக இலங்கை முழுவதிலும் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புத் தாக்கு தல்கள். இதற்குப் பின்னால இருப்பது றணிலின் கட்சியே என்பதை சிறிசேனாவே ஒத்துக்கொண்டுள்ளார். றணில் மீதான குற்றச்சாட்டில் இதுவும் ஒன்று. இதற்கான காரணம் என்ன? அல்லது காரணங்கள் என்ன? யுத்தத்தில் பின்பான காலத்தில் இலங்கை முதலாளித்துவம் துரிதமாக வளர்ந்து வருகிறது. அந்நிய மூலதனங்களின் பாய்ச்சல் மிகவும் துரிதமாகவும் அதிகமாகவும் ஏற்பட்டுவருகிறது. இவ் வளர்ச் சியில் சிங்களவர்களைத்தவிர வேறு எவரும் பங்குகொள்ளக்கூடாது என விரும்புவது இயல்பானது; அதுதான் பேரகங்காரவாதமாகும். ஆகவே இவ்விருப்பத்தை நிறைவேற்றுவதில் இஸ்லாமியர்கள் எதிரிகளாக இருக்கக்கூடும் எனபதுதான் காரணமாக இருக்கும். அவ்விதம் இருந்தால் இத் தாக்குதல்களில் இராணுவத்துக்கும் பங்கு இருக்கும். றணிலின் மீது பழிபோடுவதற்கான காரணம் என்ன? ஆதாரங்கள் இல்லை ஆனாலும் ஊகிக்கலாம்.

ஊகம் : பிரித்தானியருக்குப் பின்பான இலங்கை எவ்விதம் தமிழ் பேசும் மக்களின் சித்திரவதை(அரசியல்) சிறைக்கூடமாக இருந்து வருகின்றதோ, அது போலவே பிரித்தானியருக்குப்பின்பான இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையும் இருந்து வருகின்றது. பிரித்தனியரின் தூண்டுதலால் பாக்கிஸ்தான் தனிநாடாகப்பட்டாலும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் சிறைவாச(அரசியல்) நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உறவுகள் மேலும் கசப்பானதாகவே மாறின. அமெரிக்காவால் ஊதிவளர்க்கப்பட்ட இந்திய- பாக்கிஸ்தான் முரண்பாடு, இந்தியவாழ் இஸ்லாமியர்களின் நிலையை மேலும் மோசமடைய வைத்தது. இந்திய இஸ்லாமியர்கள் பகைமைநாட்டின் ஏஜெண்டுகளெனக் கணிக்கப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. ஆக, இந்தியாவில் நிலவும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுக்கான காரணம் பிரித்தானியாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுமேயாகும்.

        பிரித்தானியரின் வழிகாட்டலில் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் ஆரம்பிக்கும்வரை, இந்திய தேசியவாதம் தீவிரத்தன்மை மிக்கதாகவும், இந்துமதம் சார்ந்ததாகவுமே செயற்பட்டுவந்தது. இதை எதிர்கொள்வதற்காகவே, பிரித்தானியர், காந்தியின் தலைமையில் மிதவாதத் தேசியத்தையும், ஜின்னாவின் தலைமையில் இஸ்லாமியத் தீவிரவாதத் தேசியத்தையும் வழர்த்துவந்தனர். இது அன்று.
        இன்று, இந்தியாவுக்குத் தொல்லைகொடுப்பதற்காக இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கான முயற்ச்சி நடக்கிறதா என்றோர் கேள்வி எழுகிறது. றணிலின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் (UNP) தோறுவித்தது பிரித்தானியர்தான். அன்றிலிருந்து இன்றுவரை அக்கட்சி பிரித்தானிய, அமெரிக்க நலன் பேண் கட்சியாகவே செயற்பட்டுவருகின்றது. இன்று இவர்கள் றணிலுக்காக பரிந்துபேச வருவதைக் காணவில்லையா? UNP ஒரு கல்லில் இருமாங்காய விழுத்த முற்படுகிறது. முதலாவது, சிறிலங்கா இராணுவத்தை தொடர் நெருக்கடிக்குள் வைத்திருப்பது, இதன் மூலம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் இறமைக்கு நெருக்கடி கொடுப்பது, அதாவது அமெரிக்க, பிரித்தானிய தலையீட்டிற்கு வழிவகுப்பது. இரண்டாவது, இஸ்லாமியப் பேரகங்காரவாதத்தை வளர்ப்பதுவும் அதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது, இதன்மூலம் இந்திய- ஸ்ரீ லங்கா நட்புக்கு குந்தகம் ஏற்படுத்துவது.  

         பாக்கிஸ்தானின் பலுதிஸ்தான் தேசிய எழுச்சியையும், இந்தியாவின் காஷ்மீர் தேசிய எழுச்சியையும் பயன்படுத்தி இந்திய- பாக்கிஸ்தானிய நட்புக்கு குந்தகம் விளைவிப்பதுவும்; றோஹின்யா முஸ்லீம்களுக்கு அகதி அந்த்ஸ்தது வளங்கும் விவகாரத்தில் இந்தியாவின் நிலையைப் பயன்படுத்தை இந்தியாவை இஸ்லாமிய நாடுகளிடையே இருந்து, குறிப்பாக சவுதி அரேபியாவில் இருந்து தனிமைப்படுத்த முற்படுவதுவும்; ஆசியாவில் வஹாபிஸத்தை பரப்புவத்ற்கான ஒரு கொரில்லா தளமாக இந்தோனேசியாவைப் பயன்படுத்தி வருவதுவும் இந்தியாவிற்கு எதிராக வஹாபிஸத்தை ஊக்குவிக்கும் அமெரிக்க செயற்பாட்டிற்கான உதாரணங்களாகும்.

            4வது காரணம்: ஸ்ரீ லங்காவின் அரசியல் அரங்கின், ஆதிக்க நிலையிலிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான பேரகங்காரவாதக் கூட்டை சற்றே தள்ளிவைப்பதே மைத்திரி-றணில் கூட்டின் உடனடிக் குறிக்கோளாக இருந்தது. பத்து வருட காலத்திற்கு மேலாக நிலவிவந்த யுத்தகால முறுகல் நிலை இலங்கை முதலாளித்துவத்தின் சுமுகமான வளர்ச்சியை பாதித்திருந்தது. சண்டையும் சமாதானமும் மாறிமாறி இருந்தால்தான் பேரகங்கார முதலாளித்துவம் செழிப்பாக வளரும். இது ஒரு இராணுவ பிரச்சனை மட்டுமல்ல், பொருளாதரப் பிரச்சனையும் பொருளாதாரத்திற்கு வளிவகுக்கும் அரசியல் பிரச்சனையுமாகும். ஆனால், இச் சமாதானம், சண்டைக்கான தகமையை இழந்துவிடாத முறையிலானதாக அமையவேண்டும். மஹிந்தவின் இணக்கத்துடன் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் சம்மதத்துடன், இராணுவ பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் சமாதானம் உருவாக்கப்பட்டது. மைத்திரி-றணில்-சம்பந்தன் கூட்டரசாங்க உருவாக்கப்பட்டது. தேசிய பேரகங் காரவாதச் செயற்பாடுகளும், இனவெறி மதவெறி https://vidiyalgowri.blogspot.com/2018/03/f-f.html எனும் கட்டுரையைப் பார்க்கவும். அரசியல் உசுப்பல்களும் நிறுத்தப்பட்டன அல்லது அடக்கிவாசிக்கப் பட்டன. மஹிந்தவின் அரசியலை மைத்திரி-றணில்-சம்பந்தன் கூட்டு பவுத்திரமாகப் பாதுகாத்து வந்தது. இராணுவத்தின் அனுசரணையுடன் என்பது மீழவும் அழுத்தமாகக் கூறப்படவேண்டும்.

     ஆனால், இனவெறியின் தற்காலிக முடக்கம் அல்லது மிதவாத ஆடைபோர்க்கப்பட்ட இனவெறி, இலங்கை முதலாளித்துவம் எதிர் பார்த்த நன்மைகளை இலங்கையின் முதலாழித்துவத்திற்குச் செய்ய வில்லை. முன் கூறியது போல் தமிழ் மிதவாதிகளால், தமிழ் முதலாளித்துவம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது உண்மை. ஆனால், தமிக்ஷ் மிதவாதம் பெற்ற இவ் வரப்பிரசாதங்கள் நிலைத்து நிற்க மாட்டா. இன்னோர் 1983 இவற்றைச் சூறையாடிவிடும். வெளிநாடுக ளில் சொத்துக்கள் குவித்த தமிழ் மிதவாதிகளின் சொத்துக்கள் மட்டும் தப்பும். அது வெறுவிடயம். எமது தர்க்கம் சிங்களமிதவாதம் எவ்விதம் தோற்றுப்போனது எனபதுதான்.
      இன, மத வெறி உசுப்பல்களின் தணிவு( அதாவது தேசியவாதத் தின் தணிவு) இலங்கை மக்கள் மத்தியில் வர்க்க உணர்வை  வளர்ச்சி பெறவைத்தது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில். தமிழர்களிடையே நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக,  சிங்கள மக்கள் மத்தியில் இருந்தும் குரல்கள் எழுந்தன. மலையக மக்கள்மத்தியில் இருந்து அடிப்படை ஊதியம் தொடர்பான கோரிக்கை எழுந்ததுவும், மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர்களை மட்டும் வஞ்சிக்கவில்லை, சிங்களவர்களையும் வஞ்சிக்கினறது என தமிழ், சிங்கள அமைப்புகள் கூட்டாக அறிக்கை விட்டதுவும் அனைவரும் அறிந்த சிலவிடயங் களாகும். இன்னும் பல உண்டு. இவற்றையெல்லாம் கண்ணுற்ற, ஸ்ரீ லங்கா இராணுவத் தளபதி, இவ்வருட ஆரம்பத்தில், இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு நிலை என பகிரங்கமாக அறிக்கை விட்டதை நினைவில் கொள்ளவும்.     
      இதன் விளைவு, சிங்கள, தமிழ் மிதவாதம் இரண்டுமே ஒழிக! மஹாவம்சப் பேரகங்கார வாதத் தீவிரவாதம் மீண்டும் ஓங்குக!! என இராணுவம் முழங்கத்தொடங்கியுள்ளது. இராணுவத்தினால் வழிநடத் தப்படும் இவ் அரசியல் பொம்மலாட்டங்கள் மூலம் இம்முழக்கம் வெற்றிபெறவில்லையானால், இராணுவத்தின் துப்பாக்கிகள் முழங்கும். இராணுவம் தனது இறைமையை விட்டுக்கொடுப்பதற்கான நிலையில் இல்லை, அதற்கான தேவையும் அதற்க்கு இல்லை. அவ்விதம் முழங்குமானால் உடனடிநிலையில், அல்லது முதள் கட்டநிலையில் அது தமிழ், சிங்கள மிதவாதிகளுக்கு எதிரானதாகவே இருக்கும். இதுதான் இன்றைய “அரசியல் நெருக்கடிக்கான” தீர்வாக இருக்கும். இத்தீர்வில் இந்தியாவின் நேரடிப் பங்கு எதுவும் இருக்காது.
       ஆனால், அமையவிருக்கும் தீர்வு தெற்காசிய இராணுவ, நிதியிய சமநிலையை(பொருளாதார அல்ல)-Financial, தேற்காசியாவிற்கு பாதிப்பானதாக மாற்றுமானால், இந்தியாவும் சீனாவும் மூர்க்கமாகத் தலையிடும். இதில், சீனாவின் தலையீட்டைவிட இந்தியாவின் தலையீடே அதிகமானதாகவும் துரித பயனை எதிர்பார்த்ததாகவும் இருக்கும். அது பற்றி தெற்காசிய இராணுவ, நிதியிய சமநிலைகளும் இலங்கை அரசியலும் னும் கட்டுரையில் தனியாக ஆராய்வோம்.
                    
குறிப்பு:-திருநாவின்பேட்டி https://www.facebook.com/majura.amb/videos/1997023233669691/கேட்க முடியவில்லைஅதையோட்டிய விவாதங்களில் சிலவற்றை மட்டும் பார்த்தேன் https://www.facebook.com/annamsinthu.jeevamuraly/posts/2499589263385321.
               முடிவுக்கு வரமுடியவில்லைஆனால்திருநாவை எதிர்ப்பவர்கள் திருநா இந்திய “ஆள்” எனற கருத்தை முவைக் கிறார்கள்அது உரமானதாகவுமுள்ளதுதிருநாவை ஆதரிப்பவர்கள்திருநாவை எதிர்ப்பவர்களின் சித்தாந்த நிலைப்பாட்டைத்தான் எதிர்க்கிறார்களே தவிர திருநாவின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப் படுத்தும் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லைதிருநா இந்திய ஆதரவு நிலைப் பாட்டை எடுக்கிறார் என்பது உண்மையானால், எந்த அரசியல் களத்தில் இருந்து ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை.
      மேற்குறிப்பிட்ட முகநூல் பதிவுக்கான பின்னூட்டலை ஒரு     கட்டுரையாக விரித்துள்ளேன்.



In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...