Friday 18 August 2017

தீண்டாமை ஒழியாமல், மலராது தமிழீழம்.

தீண்டாமை ஒழியாமல், மலராது தமிழீழம்.

“பஞ்சமர்” ரென அடையாளப்படுத்தப்படும் அடிமை சாதிப் பிரிவினருக்கும் தமிழீழ தேசிய விடுதலைக்கும் இடையேயான உறவு பட்டும் படாததொன்றாக,பஞ்சமர்களைத்தூர நின்று வேடிக்கைபார்க்குமொரு பிரிவினராக வைத்திருப்பதை  எவராலும் மறுக்கமுடியுமா? சில ‘பஞ்சமஇளையோர் இயக்கங்களில் இணைந்தாலும், பஞ்சமர் ஒதுங்கியே இருந்தனர். இந்நிலைமை மாறவேண்டும்.
அறிமுகம்
1968களில் சங்கானை-நிச்சாமம் கிராமத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வீச்சினைக்கண்டு அச்சமுற்று, “யாழ்ப்பாணம் வியட்நாமாக மாறப்போகிறது, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றுங்கள்!!! என சிங்கள- பௌத்த பேரகங்காரவாதத் தலைவர்களிடம் குய்யோ முறையோ என முறையிட்ட தமிழ் பேச்சுப்புலித் தலைவரின் காலத்திலிருந்து, ‘சோஷலிஸத் தமிழீழம்’ என முழக்கமிட்ட துப்பாக்கிப் புலித்தலைவர் காலம்வரை தமிழீழத்தில் தீண்டாமை ஒழிக்கப்படாமல் தொடர்வதை மறுக்கமுடியுமா?
சபையோர் அனைவருக்கும் வணக்கம்! உங்கள் கவனத்துக்கு எனது கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்கிய திரு.வரதகுமார் அவர்கட்கு எனது நன்றிகள்.

சபையோர்கள் அனைவருமே, இலங்கைத்தீவில் சிங்கள-பௌத்த பேரகங்காரவாதத்தின் அரசியல் மேலாண்மை அற்றுப்போகவேண்டுமென்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருப்பீர்களென்பது சந்தேகத்திற்கு இடமற்றது. இதில் கணிசமானோர் தமிழீழக் கோட்பாட்டாளர்களாகவும், மீதமானவர்களில் ஒருசாரார், கடந்தகால பல்வேறு கசப்பான அனுபவங்களால் மனம்நொந்து அல்லது குழப்பமுற்று, தமிழீழம் சாத்தியமாவென சந்தேகம் கொண்டவர் களாகவும், மற்றோர் பிரிவினர் தமது வர்க்கநிலை மாற்றத்தால் தமது முந்தைய முடிவுகளை மீளாய்வுசெய்யும் நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கக்கூடும். தமிழீழக் கோட்பாட்டாளர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள் எனக் கூறுவதற்கில்லை. இதனால் வெவ்வேறுபட்ட (diversified) கருத்தோட்டங்களின் ஒன்றுகூடலாகவே இவ் அவை அமைந்துள்ளது எனக் கருதுகிறேன்.

இந்நிலைமை புரிந்துகொள்ளப்படக் கூடியதே. நிகழ்கால, கடந்தகால நடப்புகள் இதற்கான காரணங்களாக அமைகின்றன. கடந்த கால நடப்புகளின் தவறுகளே இங்கு பிரதானமானதாக விளங்குகிறது. திறந்துவிடப்பட்ட மின்மினிப் பூச்சிகளின் மினுமினுப்புகள்கூட மதியநேர சூரியஒளிபோல் எமது கண்களைக் கூசவைத்து, எமது பார்வைத்திறனை கேள்விக்குள்ளாக்கிவருகிறது. பிரச்சனை மின்மினிப் பூச்சிகளின் ஒளிரும்திறனில் இல்லை, எமது கண்களின் ஒளிஉறிஞ்சு திறனில் -தான் உள்ளது. கடந்தகாலத் தவறுகள் எமது கண்களைக் கெடுத்துள்ளன. இத் தவறுகளில் இருந்து பாடங்கற்று எமது கண்களைச் சரிப்படுத்திக் கொள்வோம். சத்திர சிகிச்சைதான் அவசியமானால், அதற்குத் தயாராகிக்கொள்வோம். எமது கண்களுக்கல்ல, எமது கருத்துக் கட்டுமானத்துக்கு.

சாதிய சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நாம் இழைத்த தவறுகளும் இவற்றுள் ஒன்றாகும். அத்தவறுகளைப்பற்றிய ஆய்வை செழுமைப்படுத்துவதே இவ்வுரையின் குறிக்கோளாகும்.

1968களில் சங்கானை-நிச்சாமம் கிராமத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வீச்சினைக்கண்டு அச்சமுற்று, “யாழ்ப்பாணம் வியட்நாமாக மாறப்போகிறது, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றுங்கள்!!! என சிங்கள- பௌத்த பேரகங்காரவாதத் தலைவர்களிடம் குய்யோ முறையோ என முறையிட்ட தமிழ் பேச்சுப்புலித் தலைவரின் காலத்திலிருந்து, ‘சோஷலிஸத் தமிழீழம்’ என முழக்கமிட்ட துப்பாக்கிப் புலித்தலைவர் காலம்வரை தமிழீழத்தில் தீண்டாமை ஒழிக்கப்படாமல் தொடர்வதை மறுக்கமுடியுமா?

1966இல் இருந்து 1969வரையான காலப்பகுதியில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் நடைபெறா -திருந்திருந்தால், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் போன்ற கோவில்கள் இன்னமும் பூட்டியே இருந்திருக்குமோ என்னமோ, யார் கண்டது. இதனால் “பஞ்சமர்” என அடையாளப்படுத்தப்படும் அடிமை சாதிப் பிரிவினருக்கும் தமிழீழ தேசிய விடுதலைக்கும் இடையேயான உறவு பட்டும் படாததொன்றாக, பஞ்சமர்களைத்தூர நின்று வேடிக்கைபார்க்குமொரு பிரிவின -ராக வைத்திருப்பதை  எவராலும் மறுக்கமுடியுமா? சில ‘பஞ்சமஇளையோர் இயக்கங்களில் இணைந்தாலும், பஞ்சமர் ஒதுங்கியே இருந்தனர். இந்நிலைமை மாறவேண்டும்.

சாதிய சமத்துவத்தின் தேவையை விடுதலை அமைப்புகள் நிராகரித்தன என்று கூறமுடியாது. இதன் அவசியத்தை பல விடுதலை அமைப்புகள் புரிந்துகொண்டி -ருந்தன. ஓரிரு அமைப்புகள் புரிந்து கொண்டதாகப் பாசாங்கு செய்தன. பாசாங்கிற்கான வெளிப்படையான அமைப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியை, எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பல அமைப்புகள் உண்மையாகவே புரிந்து -கொண்டிருந்தன. இருந்தும் அப்புரிதலை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய, நிலைத்து நிற்கக்கூடிய வரலாற்றுப் பதிவுகளெதுவும் நடைபெறவில்லை. இதற்கான காரணம், அமைப்புகளினதோ, அல்லது தலைவர்களினதோ சாதிய சார்புநிலைதான் எனக் குற்றஞ்சாட்டமுடியாது. தமது சாதிய சார்புநிலையைத் தூக்கியெறிய அல்லது குறைந்த பட்சம் தமது அமைப்பினுள்ளும், சமூகத்திலும் அதைக் கிடப்பில்போட்டுவைக்க பல அமைப்பு -களும் தலைவர்களும் தயாராகவே இருந்தனர், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதைச் செய்தும் காட்டினர். ஆகவே அவர்கள்மீதும், அமைப்புகளின் மீதும் “சாதிமான்கள்” “சாதிவெறியர்கள்எனும் குற்றச்சாட்டை சுமத்தமுடியாது. சாதிய சமத்துவத்தை ஏற்படுத்தல் பற்றிய புரிதல் தவறாக இருந்ததே இதற்கான காரணமாகும். குறிப்பாக தீண்டாமை பற்றியும்,  சாதிய சமத்துவ போராட்டங் -களுக்கும் தேச விடுதலைப் போராட்டத்திற்கும் இடையேயான உறவுகளைப் பற்றியதுமான புரிதல் மிகவும் தப்பானதாக இருந்தது.

இத் தவறான புரிதலை ஏற்படுத்துவதில் இடதுசாரி இயக்கங்களும் காரணமாக இருந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பில் ஆழமானதும், நிலைத்ததன்மை பெற்றதுமான வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்துவதில் இடதுசாரிகளின் வகிபாகத்தை என்றுமே எவராலும் மறுக்கமுடியாது. தீண்டாமை ஒழிப்பிலான தமது வீரமிக்க வரலாற்று வகிபாகத்தால் எம்.சி.சுப்ரமாணியம், கந்தையா, ஸ்ரீனிவாசன், நாகலிங்கம், சண்முகதாசன், கே.ஏ.சுபர்மணியம் போன்ற தலைமைத் தோழர்கள் யாழ் சமூக உருவாக்கத்தில் நிரந்தர இடம் பிடித்துள்ளனர். 

ஆனால், தீண்டாமையானது நிலபிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் என்ற அவர்களின் நிலைப்பாடு மிகவும் தவறானது. சாதியொழிப்பு என்ற கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இக்கருத்து பெரும் தடையாக இருந்துள்ளது. இது பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.

சபையோர் வணக்கத்தையும், அறிமுகத்தையும் முடித்துக்கொண்டு முன்னுரைக்குள் செல்வோம்.

முன்னுரை:-

ஸ்ரீ லங்காவென பெயர்மாற்றம் பெற்றுள்ள, இலங்கை நாட்டரசு தமிழீழத்தின் மீதும், இந்திய நாட்டரசு காஷ்மீரத்தின் மீதும், பாக்கிஸ்தான் நாட்டரசு பலுஸ்திஸ்தான் மீதும், நேபாள நாட்டரசு மாதேசிகள்மீதும்,  பிரயோகித்துவரும் தொடர் ஆயுத வன்முறைகள் இதற்கான பிரபல்யமிக்க எடுத்துக்காட்டுகளில் மிகச்சிலவாகும்.  
தமீழீழ ஆதரவாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் மிரட்டுவதற்காகத்தான் இத் தலைப்பு என யாரும் கருதவேண்டாம். உண்மை மிரட்டலாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது. பூ! நிலபிரபுத்துவ மிச்சசொச்சமான தீண்டாமையை ஒழிப்பது என்ன இமயமைலையைத் தூக்கியெறிவது போன்றதா? பெரும் புயலாக மாறி தூக்கிப்பிரட்டிப் போடமாட்டோமா என்ன? என்று, தனிநபர் வீரதீரச் செயலையே அரசியல் துணிச்சலெனக் கருதும் பலர் கேட்கலாம்.

ஆண்டான் அடிமை சமூக அமைப்பின் கட்டுமானமான தீண்டாமையானது இன்று வெறுமனே நிலபிரபுத்துவ மிச்சசொச்சமல்ல. இந்திய உபகண்டத்தின் எந்தவொரு மூலைமுடுக்கிலும்சரி தீண்டாமையை முற்றுமுழுதாக ஒழிப்பதில் வெற்றி ஏற்படுமானால், அதன்போது ஏற்படும் தீப்பொறி இந்திய உபகண்டத்தின் சமூக சமநிலையையே, குறிப்பாக அரசியல் சமநிலையை முழுவதுமாக ஆட்டங்காண வைக்கும். சமூக சமநிலையென்பதை அழுத்தந் திருத்தமாகக் வாசிக்கவும். அதுவரை, இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய மூன்றுநாடுகளினது சமுகச் சமநிலையில் எந்த தீர்மானகரமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

ஆகவே, “தீண்டாமை ஒழியாமல், மலராது தமிழீழம்எனும் கூற்று ஒரு சாதாரண மிரட்டலல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. முன்னுரையை முடித்துக்கொள்கிறேன்.

இவ்விதம் கூறுவது எதற்காக?

ஒடுக்கப்படும் சாதியினரினதும், உழைக்கும் மக்களினதும் சமூக அந்தஸ்து இதே நிலையிலேயே தொடருமானால் உங்களின் ‘சுயராஜ்யம்எமக்குத் தேவையில்லையென, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அம்பேத்கார், பெரியார், சிங்காரவேலர்……………போன்றோர்கள் காங்கிரஸையும் காந்தியாரையும் மிரட்டினார்கள். இதற்காக காந்தியாரால் நடத்தப்பட்ட பல போராட்டங்களைப் பகிஷ்கரித்தார்கள். சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலேயே, தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களையும் முன்நின்று நடத்தினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி விழுந்தடித்துக்கொண்டு ‘சமபந்தி சமபோஜனம்நடத்தியதுபோல், காந்தியாரும் படபடப்புடன் தீண்டத்தகாதவர்களை ஹரிஜனர் என அழைத்து தலித்துகளின் கோபத்தைத் தணிக்க முற்பட்டார். (ஹரி என்பது வேதக் (பார்ப்பனிய) கடவுளான பிரம்மாவைக் குறிக்கும். ஜனர் என்பது புத்திரர்களைக் குறிக்கும்) ஜவர்ஹால் நேருவோ “இந்திய தேசத்தைமலரவைக்க, இன்னோர்படி மேலேசென்றார். இந்திய அரசியல் சாசனத்தை வடிக்கும் பொறுப்பை அம்பேத்கரிடமே ஒப்படைத்தார். இயல்பாக மலரவில்லை, புகையடித்தே மலரவைக்கப்பட்டது. விளைவு இந்தியதேசமும், இந்திய தேச அரசும் இன்னமும் மலரவில்லை; பதிலாக அதனிடத்தில் இந்திய நாட்டரசு நிறுவப்பட்டது.

இவ்விதமாக, காங்கிரஸ் வென்றது. இந்திய தேச அரசைத் தோற்றுவிப்பதில் தலித் தலைவர்கள் தோற்றுப்போயினர். தலித்மக்களினதும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களினதும் சமூக அந்தஸ்து நிலையில் எந்த வளர்திசை மாற்றங்களும் ஏற்படாமலேயே, இப்பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே ‘இந்திய சுதந்திரப் போராட்டம்ஒரு முடிவுக்கு வந்தது. அல்லது கட்டாயமாக முடித்துவைக் -கப்பட்டன. எந்தத் தேசத்திற்கு (பிரித்தானியா) எதிராக இப் போராட்டம் நடந்ததுவோ அந்த தேசமே இப்போராட்டத்தை சுமூகமாக முடித்தும் வைத்தது.

இவ்விதம் தெற்காசிய எங்கணும், சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன. அந்நாடுகளில் ‘நாட்டரசுகளும்நிறுவப்பட்டன. இந்நாட்டரசுகள், அவற்றின் ஆளுமையின் கீழான முழு மக்களினதும் தேசிய அரசுகளாக அடையாளப் படுத்தப்பட்டன, நாட்டுமக்கள் அனைவரும் நாட்டரசுளை தமது தேச அரசுகளாக ஏற்றுக்கொள்ளவைப்பதற்கான முயற்சிகளையும் முன்னாள் காலனியல் எஜமானர்களே ஆரம்பித்து வைத்தார்கள். அப்போதைய சோஷலிச நாடுகளும், தெற்காசிய கம்யூனிச்ட் கட்சிகளும் இதற்க்குத் துணைபோயின.

இதன் வரலாற்றுத்தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டபின்பும் நாட்டரசுகளை’, ‘தேசங்களற்ற தேச அரசுகளை’, தேச அரசுகள் என அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன. அரசியல் வன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இம்முயற்சி, இன்று நாட்டுப்பற்று எனும் ‘அழகானபெயரைக் கொண்ட ஆயுத வன்முறையாக பரிமாணம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்காவென பெயர்மாற்றம் பெற்றுள்ள, இலங்கை நாட்டரசு தமிழீழத்தின் மீதும், இந்திய நாட்டரசு காஷ்மீரத்தின் மீதும், பாக்கிஸ்தான் நாட்டரசு பலுஸ்திஸ்தான் மீதும், நேபாள நாட்டரசு மாதேசிகள்மீதும்,  பிரயோகித்துவரும் தொடர் ஆயுதவன்முறைகள் இதற்கான பிரபல்யமிக்க எடுத்துக்காட்டுகளில் மிகச்சிலவாகும்.  

இன்று நாம் காணும் நாட்டரசுகள், பழைய அரைக் காலனியல் விதேசிய அரசுகளின் சாம்பல் மேட்டின்மீது மக்களால் உருவாக்கப்பட்ட முற்றிலும் புதிய அரசுகளல்ல. மாறாக, அவை, காலனியல்வாதிகளாலும், அவர்களுக்குத் துணைநின்ற முதலாளித்துவ வர்க்கத்தினராலும், தூசுதட்டப்பட்டு, வெள்ளை -யடிக்கப்பட்ட, சில முதலாளித்துவ ஜனநாயகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட அதே அரைக்காலனியல் அரசுகளேயாகும்.

எவ்விதமோ, நாடுகளுக்குச்சுதந்திரம் கிடைத்துவிட்டன. உருவாக்கப்பட்ட நாட்டரசுகள் வல்லரசுகளின் துணையோடு தேசங்களற்ற தேச அரசுகளாகவும், பிற தேசியங்களையும், தேசிய இனக்களையும் அடக்கும் உள்-காலனி அரசுகளாகவும் வளர்ந்து வருகின்றன. இந்த 75 வருடகால வரலாற்றில் வங்கதேசம் எனும் புதியதோர் நாடும், புதியதோர் நாட்டரசும் உருவாகியுள்ளது. ஆனால், 75 வருடங்களாகியும் இன்னமும் இப்பிராந்தியத்தில் தேசமென்றும் தேச அரசென்றும் சொல்லிப்பெருமைப் படும்படி எதுவுமே உருவாகவில்லை. ஆனால், இப்பிராந்தியத்தில் பத்துக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தம்மையாளும் நாட்டரசில் இருந்து விடுபட்டு தனித்தேச அரச அமைவுக்கான விடுதலைப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன; பல ஏற்ற இறக்கங்களுடன் அவை முன்னேறியும் வருகின்றன.

தமிழீழ தேசத்தின் நிலையும் இதுதான். தேச உருவாக்கம் எனும் இத் தொடரோட்ட (protracted)ப் பந்தயத்தில் தெற்காசியப் பிராந்தியளவிலான தங்கப் பதக்கம் பெறும் நிலைக்கு  வழர்ந்திருந்ததாகக் கருதப்பட்ட தமிழீழ தேசம், இன்று வெள்ளிப்பதக்கம் கூடபெற முடியாத நிலைக்கு தாழ்ந்துவிட்டது துயரத்துக் குரியதே. இப்பிராந்திய நாட்டரசுகளான ஸ்ரீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய மூன்றும் கைகோர்த்து தமிழீழ தேசத்தை வெற்றிகொண்டுவிட்டன.

எமது குறிக்கோள் எது ‘நாட்டரசா’? ‘தேச அரசா’?
நாட்டரசு என்றால் என்ன? தேசஅரசு என்றால் என்ன?

நாட்டரசு:

எமது தோல்விக்குக் காரணமான எமது தவறுகள் பல. அவற்றுள் மிகப் பிரதான மான அரசியல் தவறுகளில் ஒன்று நாம் அமைக்கவிரும்பும் அரசு பற்றிய புரிதல் இன்மையேயாகும். எமது தேச (தமிழீழ) உள்ளரங்கிலும், எமது நாட்டு (இலங்கை) உள்ளரங்கிலும், அனைத்துலக அரங்கிலும் அரசியல் வியூகங்களை வகுப்பதில் நாம் இழைத்த தவறுகளுக்கான காரணம் இப் புரிதல் இன்மையேயாகும். இத் தவறுகள் இன்றும் தொடர்கின்றன.
பல சமூகக் குழுமங்கள், தமக்குள் அசமத்துவ உறவைக் கொண்டவைகளாக, பாரப்பரியமாக வாழ்ந்துவரும் ஒரு பூகோளப்பரப்பே நாடாகும். இப் பூகோளப்பரப்பினில் ஒரு சமூகக் குழுமமே சமூக, பொருளாதார ஆதிக்கம் பெற்றதாக, அல்லது ஆதிக்கம் பெறும் நிலைக்கு வளரக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

இதனால் அப்பூகோளப்பரப்பின் அரசியலதிகாரம் முழுமையும் அல்லது அரசியல் அதிகாரத்தின் தீர்க்கமான துறைகள் அனைத்தும் இச் சமூகக் குளுமத்தின் ஆளுமையின் கீழேயே காணப்படும். இப் போக்கு வளர்ந்து செல்லும் தன்மைபெற்றதாக இருக்கும். இப்பூகோளப்பரப்பை ஆட்சி செய்யும் அரசே நாட்டரசு எனப்படும். ஒன்றோ அல்லது இரண்டோ சமூகக் குழுமங்களின் ஆழுமையின் கீழுள்ள இவ்வரசு வர்க்க அடக்குமுறையுடன் சேர்த்து பிற சமூகக் குழுமங்களை அடக்குவதையும்  தனது குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கும். இவ்வித அரசுகளே நாட்டரசுகள் எனப்படுகின்றன. 

காலனிக்கு முன்பு இவ்வரசுகள் மன்னர் அரசுகளாகவும்  காலனியல் அடக்கு -முறையின் போது இவ்வரசுகள் நவ-காலனியல் அரசுகளாக இருந்தன, தற்போது இவை உள்-காலனியல் அரசுகளாக மாறியுள்ளன.  இவைதான் தேச அரசுகளின் அமைவுக்கு முன்னைய அரச வடிவங்களாகும்.



தேச அரசு:

பல தேசிய இனக்குழுமங்களும் (ethnic group), சாதியக் குழுமங்களும் தமக்குள் சமத்துவ உறவைக் கொண்டவைகளாக வாழ்ந்துவரும் ஒரு பூகோளப்பரப்பே தேசமாகும். இப் பூகோளப்பரப்பினில் ஒரிரு சமூகக் குழுமங்கள் மட்டுமே சமூக ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும் பெற்றதாக, அல்லது ஆதிக்கம் பெறும் நிலைக்கு வளரக்கூடிய வாய்ப்புகளைக்கொண்டதாக இருக்கமாட்டாது. இதனால் அரசியலதிகாரம் முழுமையும் அல்லது அரசியல் அதிகாரத்தின் தீர்க்கமான துறைகள் ஒரிரு சமூகக் குழுமங்களின் ஆளுமையின் கீழ் காணப்படும் நிலை இருக்காது. அனைத்து சமூகக் குழுமங்களும் சுதந்திரமாக் வளர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும்.
இவ் வாய்ப்புக்கள் வளர்ந்து செல்லும் தன்மைபெற்றதாக இருக்கும். இப்பூகோளப்பரப்பே தேசம் எனப்படும்.

இப்பூகோளப்பரப்பை ஆட்சிசெய்யும் அரசே தேச அரசு எனப்படும். அனைத்து சமூகக் குழுமங்களினதும் கூட்டாளுமையின் கீழுள்ள இவ்வரசு எந்தவொரு சமூகக் குழுமத்தையும் அடக்குவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்காது. மாறாக அனைத்து சமூகக் குழுமங்களினதும் சுதந்திரமான வளர்ச்சியைப் பாதுகாப்பதாக இருக்கும், அதற்கான உத்தரவாதங்களை வழங்குவதாக இருக்கும். இப்பொழுது எமது கேள்விக்கு வருவோம்.
நாம் அமைக்க விரும்புவது
 தமிழீழ தேசிய அரசையா? தமிழீழ நாட்டரசையா?

தமீழீழம் எனும் பொத்தாம் பொதுப் பதத்தினுள் ஒழிந்து விளையாடலை இனியும் தொடரவேண்டுமா?

இக்கேள்வியை இவ்விதம் விரிவாக்கலாம். தமிழரின் பாரம்பரிய தாயகத்தில் வாழும் இஸ்லாமியர்கள், அடக்கப்பட்ட சாதிப்பிரிவினர், புலம் பெயர்ந்த மலையகத் தமிழர், இயல்பாகக் குடியேறி இங்கேயே வாழும் சிங்களவர்கள், கிழக்கு மாகாணத்தில் வாழும் பறங்கியர்கள் ஆகிய ஐந்துவகை சமூகக் குழுமங்களின் மீதும் பிரயோகிக்கப்பட்டுவரும் பாரபட்சங்கள், ஓரங்கட்டல்கள், ஜனநாயக விதிமுறை மீறல்கள், சம உரிமை மறுப்புகள், தீண்டாமைகள்  ஆகிய பஞ்சகொடுமைகளையும் இல்லாதொழித்து, அனைத்து சமூகக் குழுமங்களிடையேயும் சமத்துவமானதும், சமவுரிமை உள்ளதுமான உறவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தமீழீழத்தையும் அதற்குரிய அரசையுமா? இதுதான் தமிழீழ தேச அரசாகும். அல்லது, இப் பஞ்ச சமூகக் குழுமங்களின் மீதான பஞ்ச கொடுமைகளையும் அவ்விதமே தொடரக்கூடிய ஒரு தமிழீழத்தையா? அதுதான் தமிழீழ நாட்டரசாகும்.
மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்த்துக்கொள்வோம். எமது குறிக்கோளென்ன? தமிழீழத் தேச அரசா? தமிழீழ நாட்டரசா?                            
தமீழீழம் எனும் பொத்தாம் பொதுப் பதத்தினுள் ஒழிந்து விளையாடலை இனியும் தொடரவேண்டுமா?
எமது தியாகங்கள் பாலைவனவெய்யிலில்(வல்லரசிய வஞ்சனையில்) கருகிப் பொசுங்கியதுவும், கடலில் வீசியெறியபட்டு வல்லரசிய மீன்களு -க்கு இரையாகிப்போனமையும் இனியும் தொடரவேண்டுமா?
ஒருமித்த பதிலில்லாவிட்டால் பதிலைத் தேட அயராதுழைப்போம். மக்களின் வாழ்க்கையுடன் விளையாடவும் வேண்டாம், எதிரிகளுக்கு பேரழிவுக் களங்களை உருவாக்கிக் கொடுக்கவும் வேண்டாம்.  
எம்மில் பலர் பிராந்திய அல்லது உலகளாவிய வல்லரசுகளின் உதவியு -டன் தமிழீழ்த்தை உருவாக்க முற்பட்டுவருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆசைகாட்டிய வல்லரசுகளோ அவர்களின் முகத்திலும் முதுகிலும் மாறிமாறிக் குத்தி அவர்களையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து வஞ்சித்ததுவருகின்றது.  மீண்டும் சிலர் அம்முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது. அவர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி, வல்லரசுகளின் உதவியுடன் நீங்கள் உருவாக்க முனைவது எதை? ஒரு நாட்டையா? அல்லது தேசத்தையா? அதாவது ஒரு நாட்டரசையா? அல்லது தேச அரசையா?
நாட்டையும், நாட்டரசையுந்தான் உருவாக்க முயல்கிறிர்களா? அவ்வித மானால் ஒன்றில் நீங்கள் வடிகட்டிய முட்டாள்களாகவோ அல்லது வல்லரசுகளின் திட்டமிட்ட ஐந்தாம் படையினராகவோ இருக்கவேண்டும்.
தேச அரசுகளின் உருவாக்கத்துக்கும், அவற்றின் இறமைக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயற்படுவதே வல்லரசுகளின் இயல்பாகும். வல்லரசு என்பதன் அர்த்தமே அதுதான். ஆகவே நாட்டரசுக்காகப் போராடும் உங்களை அவர்கள் நிச்சயமாகக் கண்டுகொள்வார்கள். உங்களை மதித்து போதையூட்டும் விருந்தளிப்பார்கள், அல்லது உங்களை உள்ளே வரவிட்டு தமது ஏவல் நாய்களாக்கிக்கொள்வார்கள், முடியாத பட்சத்தில் மிதித்துத் துவைப்பார்கள். இந்திய பிராந்திய வல்லரசும், அமெரிக்க உலக வல்லரசும் எவ்விதம் நடந்து கொண்டன என்பதை மறவாமல் இருப்பீர்கள் என எதிர்பார்ப்போம்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உலகின் பிரதான அரசியல் போக்கு நாடுகளுக்கு சுதந்திரம் வேண்டுமென்பதாகவே இருந்தது. அதாவது மூன்றாவது உலக நாடுகளே உலகின் கதாநாயகர்களாக பவனிவந்தனர். அவர்கள் கதாநாயகர்களாவது உலகின் அன்றைய வரலாற்றுத் தேவையாக இருந்தது. சோஷலிச நாடுகளும் அவர்களுக்கு உதவின. இதனால்தான் காந்தி, நேரு, பண்டாரநாயக்க, போன்ற மூன்றாம் உலக நாட்டுத் தலைவர்களால் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர் களையும் கம்யூனிஸ இயக்கங்களையும் ஒரங்கட்டக் கூடியதாய் இருந்தது. உலகின் பல மூன்றாம் உலக நாடுகளில் இவைதான் நடைபெற்றன. வரலாறு திரும்பவும் திரும்பவும் சுப்பற்ற கொல்லையை சுத்தும்என்று நம்பாதீர்கள். இருபத்தொராம் நூற்றாண்டு நாலாம் உலக நாடுகளின் காலமாகும். நாலாம் உலக நாடுகளே இன்றைய உலகின் கதாநாயகர்களாகும். மூன்றாம் உலக நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் நாட்டையும் நாட்டரசையும் நோக்கிப்பயணித்தன, ஆனால் நான்காம் உலகநாடுகளின் விடுதலைப் போராட்டங்களோ தேசத்தையும் தேச அரசையும் நோக்கிப் பயணிக்கின்றன. இதுதான் வரலாற்றின் இயல்பான போக்கும் இதுதான், பிரதான போக்கும் இதுதான். இவ் இயல்பான போக்கில் தமிழீழவர்களாகிய நாமும் பயணிப்போம்.
அதற்கான முன் நிபந்தனைகள் பலவுண்டு. அதில் ஒன்றுதான் தீண்டாமை ஒழிப்பாகும். தீண்டாமை ஒழியாமல் மலராது தமிழீழம் என்பதை மீண்டும் வலியுறுத்தி, இது தொடர்பான எந்த விவாதத்திற்கும் தயாராய் உள்ளேன் என்பதை அழுத்தமாகக் கூறி விடைபெறுகிறேன்.
      இவ்வுரையின் மூலம், சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாட்டின் https://vidiyalgowri.blogspot.in/2017/04/      படி தேசிய விடுதலை இயலுக்கும் சாதிய ஒழிப்பியலுக்கும் இடையேயான உறவு எவ்விதம் அமையவேண்டும் என்பதுபற்றியதோர் சமதர்மப் பார்வையைத் முன்வைக்க முற்பட்டுள்ளேன். இவ் உரையாடலின் தொடர்ச்சியாக இங்கு முன்வைக்கப்படவுள்ள தமிழீழ சாதியத்தை களைந்தெறிய என்னசெய்யவேண்டும்? என்ற தலைப்பிலான கட்டுரைக்கும் இது இது பொருந்தும்.

This paper was submitted by me (Arinesaratnam Gowrikanthan) to the following conference:-  “TOGETHER TOWARDS TOMORROW: Ilankai Tamil speaking diaspora Conference”, took place on 17-18 December 2016 at the KTL - SOAS, University of London, London WC1 OXC. By Tamil Information Centre Thulasi

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...