Tuesday, 29 August 2017

‘அறமும் போராட்டமும்’- முன்னுரை-2

 ‘அறமும் போராட்டமும்- பெயர்ப் பரிணாமம்-2
வரவிருக்கும் அறமும் போராட்டமும் எனும் எனது நூலுக்கான முன்னுரையின் இரண்டாம் பகுதி
முதல் பகுதியின் URl-https://vidiyalgowri.blogspot.in/2017/07/munnurai1blog-post.html

நூலின் குறிக்கோள் பற்றியதோர் ஒட்டுமொத்தப் பார்வையைப் புரிந்து கொள்ள, நூலின் பெயர் உருவாக்க நிகழ்வை அறிந்து கொள்ளல் பயனுள்ளதாக இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட தலைப்புகள்
1.   தம்மத்தின் அழுகுரலும் இலங்கையின் அவஸ்தையும்
2.   வேதர் எதிர் அவேதர்
3.   “லோகாயுதம் எதிர் ஆன்மீகம்” /“லோகாயுதமும் ஆன்மீகமும்”
4.   அகத்தால் தோற்கடிக்கப்பட்டோமா? புறத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?
5.   அவைதீகம் எதிர் வைதீகம்
6.   எரிந்த கட்சி எரியாத கட்சி
1) தம்மத்தின் அழுகுரலும்
 இலங்கையின் அவஸ்தையும்
இலங்கை, இந்தியாவின் பொருளாதார மறுவார்ப்பல்ல. ஆனால் பண்பாட்டு மறுவார்ப்புக்குரிய குணாம்சங்கள் மிகத் தாராளமாகவே காணப்படுகின்றன. சனாதன பெளத்தத்தையும், சைவ வேளாளியத்தையும் பொறுத்தவரை சிறிய நாடானா இலங்கைதான் இவ்விரண்டினதும், தலையாக உள்ளது.
இந்நூல், 2011ஆம் ஆண்டு, பிற்பாதியில் கருக்கொண்டது. அப்பொழுது அதன் உத்தேசப்பெயர் “தம்மத்தின் அழுகுரலும் இலங்கையின் அவஸ்தையும்” என்பதாகும். சிங்கள பெளத்த பேரகங்காரவாதத்தின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த தமிழ்பேசும் மக்களாலும், சிங்கள முற்போக்கு அணியினராலும் தனித்தும், கூட்டாகவும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. இலகுவில் மீளமுடியாத  பின்னடைவு ஏற்பட்டது. காலனியல் காலத்தில் இருந்து 2008 வரை சிங்கள- பெளத்த பேரகங்காரவாதத்தை இலங்கைத்தீவின் உள்ளரங்க அரசியல் மேடையில் வைத்துத் தடுத்துநிறுத்த எடுக்கப்பட்ட பல்வகை முயற்சிகளும் தோல்விகண்டன.
தோல்விக்கான காரணிகள் பலவாக அனுமானிக்கப்பட்டன. இலங்கைத்தீவின் பண்பாட்டரங்கச் சீரழிவு அவ் அனுமானங்களில் ஒன்றாகும். “இசைபட வாழ்தலும் பகிர்ந்து வாழ்தலும்” எனும் அறம் முற்றிலும் அழிந்துபோய் “பகைபட வாழ்தலும், பறித்து வாழ்தலுமே” இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் அறமாக மாறியிருந்தது. சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் ஆகிய அனைவரிடமும் இப்பண்பாடே மேல்நிலை பெற்றிருந்தது. சிங்கள-பெளத்த பேரகங்காரவாதமே இச் சீரழிவுக்கான பிரதான காரணமாகும். ஏகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் இப் பேரகங்காரவாதச் சேற்றிலே மூழ்கியிருந்ததால் “இசைபட வாழ்தலும் பகிர்ந்து வாழ்தலும்” எனும் பதம் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டது.
இது மட்டுந்தான் தனியான காரணமல்ல. சி-பௌ பேரகங்காரத்துடன் தொடர்புபடாத, வேறுபல அகங்காரவாதங்களும் காரணமாய் இருந்து வருகின்றன. இவ்வித சூழலில் சமூக குழுமபேதங்கள் தனிநபர் பேரகங்காரமாக மாறுவதும் இயல்பானதாகும். சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் “இசைபட வாழ்தலும் பகிர்ந்து வாழ்தலும்” எனும் வாழ்க்கைநெறியை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்குடனும் இந்நூல் அமைய வேண்டுமென்பதே ஆரம்பகாலக் குறிக்கோளாக இருந்தது.
வர்க்க-சமரச இனக்குழும நேயத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கைத்தீவு இவ்அவலங்களில் இருந்து மீள வேண்டுமானால், இனக்குழுமநேயமானது, மனித நேய உள்ளடக்கம் மிக்க வர்க்க நேயத்தால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்பதை இப்பகுதி வலியுறுத்துகிறது. மனிதநேயத்தை நிராகரித்த வர்க்கநேயத்தால் வெற்றிபெற முடியாதென்பதை இலங்கையின் இடதுசாரி இயக்கவரலாறு நிரூபித்துள்ளது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, இப்பிராந்தியம் முழுமைக்கும் பொருந்தும். இதனால் மக்களிடையே காணப்படும் மனிதநேயக்கூறுகளை இனங்காணவும், வெளிக்கொரவும் வேண்டிய நிலை நூல் படைப்பாளர்களுக்கு ஏற்பட்டது. இதன் விளைவு யக்ஞத்-தைப் புரிந்து கொள்வதும் யக்ஞத்தை மீட்பதுவும் அவசியம் எனும் கருத்து ஏற்பட்டது. “இந்திய உபகண்ட அரசுகற்ற குலசமூகம்”எனும் தலைப்பு யக்ஞத்தை அடையாளப் படுத்துகிறது. “அரசு உருவாக்கம்”எனும் பகுதியும், “கூவப்படுத்துவதில் சைவ ஆன்மீகம்” எனும் பகுதியும் மனுதர்மம் எவ்விதம் யக்ஞத்தை வென்றதென்பதை ஆராய்கிறது. “ரிதத்தையும், யக்ஞத்தையும் மீண்டும் பிறப்பிக்க முடியுமா” எனும் பகுதி நவீன யக்ஞத்தை பரிணாமம் பெறவைப்பது எவ்விதம் என்பதை அலசுகிறது.
யக்ஞம் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.
மனித வளர்ச்சியின் விடியலின்போது வேட்டையாடி வாழ்கிற பழங்குடிமக்களின் மத்தியிலோ அல்லது இந்திய விவசாய சமூகங்களின் மத்தியிலோ நாம் காண்கிற கூட்டுவேலையானது இரண்டு அம்சங்களை அடிப்படையாகக்கொண்டது. ஒன்று, உற்பத்திச்சாதனங்களின் பொதுவுடைமை, மற்றையது தேனிக்கள்போன்று ஒவ்வொன்றும் தேன்கூட்டுடனான உறவிலிருந்து எப்படித்தம்மைத் துண்டித்துக் கொள்ள வில்லையோ அதுபோல் இச்சமூதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து மக்கள் தங்களைத் துண்டித்துக்கொள்வதில்லை என்பதாகும். மேற்சொன்ன இரு தனிப்பண்புகளே இவ்வித கூட்டுவேலையை முதலாளித்துவக்கூட்டு வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
இவ்விதம் துண்டித்துக்கொள்ளாமல் இருப்பதற்குத் துணைபுரிந்த “பண்பாட்டு அணிகளையே” இந்நூல் யக்ஞம் என்கிறது.
ஆனால், தம்மத்தின் அழுகுரல்பற்றிய வாசிப்பு பெளத்தத்தை நோக்கிச் சென்று தெற்காசியப் பிராந்தியத்தில் முடிவடைந்தது. அதுபோலவே, தமிழ் தேசியத்தின் தவறுகளுக்குக் காரணமான சைவ வேளாளியத்தைப் பற்றிய வாசிப்பு பக்தி இயக்கத்துக்குத் தாவி பிராமணியத்தில் (வேதாந்தம்/வைதீகம்) முடிவடைந்தது. தெற்காசியப் பண்பாட்டரங்கைப் புரிந்து கொள்ளாமல் இலங்கைத் தீவின் பண்பாட்டரங்கைப் புரிந்துகொள்ள முடியாதென்பது புரிந்தது. எம்மில் பலர் இலங்கைத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான அரசியல் தொடர்பையிட்டுத்தான் அதிக நாட்டமுள்ளவர்களாக உள்ளார்கள். இதனால், இலங்கைத்தீவின் அவலங்களுக்கான காரணகாரியத்தொடர்பை அரசியல் அரங்கத்தில் மட்டும் தேடிக்கொண்டிருக்கிறோம். விடைகாண முடியாத தேடல், இரண்டாயிரம் வருடகால வரலாற்றை நோக்கும்போது இரு நாடுகளுக்கும் இடையான பொருளாதார அரங்கத்தொடர்பு சற்று அதிகம்தான், இருந்தும் பண்பாட்டரங்கத் தொடர்புதான் மிகவும் சக்தி பெற்றதாக இருந்து வருகின்றது. அது மட்டுமல்ல, பண்பாட்டரங்கத் தொடர்பானது பொருளாதார அரங்கினதும், அரசியல் அரங்கினதும் செயற்பொறிமுறையின் நேரடிக்கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் சுயாதீனச் செயற்பாடு உள்ளதாகவும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியாவின் பொருளாதார மறுவார்ப்பல்ல. ஆனால் பண்பாட்டு மறுவார்ப்புக்குரிய குணாம்சங்கள் மிகத் தாராளமாகவே காணப்படுகின்றன. சனாதன பெளத்தத்தையும், சைவ வேளாளியத்தையும் பொறுத்தவரை சிறிய நாடானா இலங்கைதான் இவ்விரண்டினதும், தலையாக உள்ளது. இலங்கையின் பெளத்தமும், சைவ வேளாளியமும் கொவிகமவியமும் இந்தியச் சரக்கென்பது சகலரும் அறிந்ததே. ஆனால், இன்றைய இலங்கைத்தீவில் காணப்படும் “பகைபட வாழ்தலும் பறித்து வாழ்தலும் பண்பாடு” கூட இந்தியச் சரக்குத்தான் என்பது பலருக்குத் தெரியாது. பண்பாட்டரங்கைக் கற்கும்போது இது புரியும்.
2)   வேதர் எதிர் அவேதர்

வேதாந்தம், வைதீகம் ஆகிய கருத்துக் கட்டுமானங்கள் வேதர்களுக்கு/ ஆரியர்களுக்கு மட்டும் உரியதல்ல. அக்கருத்துக் கட்டுமானங்களை உருவாக்குவதிலும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதிலும் அவேதர்களுக்கும் திராவிடர்களுக்கும் பங்குண்டு.
இதனால், இலங்கைத்தீவில் மீண்டும் இசைபடவும் பகிர்ந்தும் வாழும் வாழ்க்கை நெறியை செயல்படுத்த வேண்டுமானால், தெற்காசியப் பிராந்தியப் பார்வையும், பிராந்தியளவிலான ஒரு வேலைத்திட்டமும், அவசியமென்பது புரிந்து கொள்ளப்பட்டது. இப்புரிதலின் விளைவு, நூல் இலங்கைத்தீவு எனும் பூகோளப் பரப்பெல்லைகளைத் தாண்டி தெற்காசியப் பிராந்திய பண்பாட்டு எல்லைக்குள் நுழைந்தது. ஆனால் நூலின் குறிக்கோள் மாறவில்லை. “இதனால் தம்மத்தின் அழுகுரலும் இலங்கைத்தீவின் அவலமும்” என்னும் தலைப்பு “வேதர் எதிர் அவேதர்” எனும் தலைப்பாக மாறியது. இம்மாற்றத்திற்கு வழிகாட்டிய தேவி பிரசாத் சட்டோப்பாத்யாயவின் எழுத்துக்களுக்கு நன்றி.
இத்தலைப்புடன் 86 பக்க நகல் 2012, நவம்பர் மாதம் நண்பர்கள் சிலரிடம் தரப்பட்டது. “வேதம் எதிர் அவேதர்” எனும் பெயர் பண்பாட்டரங்கில் நடந்த வர்க்கப் போராட்டத்தை இரு இனக்குழுமங்களிடையேயான போராட்டமாக அர்த்தப்படுத்துவது இனங்காணப்பட்டது. ”திராவிடர் எதிர் ஆரியர் ஒரு மாயாஜலம்” எனும் பகுதி, நூலின் தலைப்புக்கு எதிரானதாகவே உள்ளது. வேதாந்தம், வைதீகம் ஆகிய கருத்துக் கட்டுமானங்கள் வேதர்களுக்கு/ ஆரியர்களுக்கு மட்டும் உரியதல்ல. அக்கருத்துக் கட்டுமானங்களை உருவாக்குவதிலும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதிலும் அவேதர்களுக்கும் திராவிடர்களுக்கும் பங்குண்டு. ஆகவே முழுப்பழியையும் வேதர்கள்/ஆரியர்கள் மீது போடுவது மிகத்தப்பு இது திராவிடர் எனும் இனவாத அடையாள அரசியலுக்கு துணைபோவதாகவே அமையும். ஆகவே இப்பெயரும் மாற்றப்பட்டது.
3) “லோகாயுதம் எதிர் ஆன்மீகம்”
/“லோகாயுதமும் ஆன்மீகமும்
இதனால் “லோகாயுதம் எதிர் ஆன்மீகம்” எனும் பெயர் இடப்பட்டது. நூல் படைப்பில் ஆர்வம் காட்டிவந்த நண்பர்கள் சிலர் இப்பெயரை நிராகரித்தார்கள். “லோகாயதமும் ஆன்மீகவாதமும்” எனும் பெயரைப் பிரேரித்தார்கள். பெரும்பான்மையான சராசரி வாசகர்களிடையே ஆன்மீகமென்பது தெய்வபக்தி, தெய்வவழிபாடு என்றே கருதப்படுகிறது. உளத்தூய்மை, உளத்திருப்தி, உளவின்பம் ஆகியவையும் ஆன்மா எனும் பதத்திலேயே அழைக்கப்படுகின்றன. மனதையும், ஆன்மாவையும் ஒன்றெனக் கருதி, மனதுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மாவுக்கும் கொடுப்பவர்கள் பலர். இது வெறுமனே ஒரு சொற்பதக் குழப்பம் மட்டுமல்ல. அவ்விதம் குழம்புவர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் தமது தவறை உணர்ந்து கொள்வார்கள்.
ஆனால், மதங்கள் சொல்லும் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மனந்தான் மனிதனை இயக்குகின்றதென சொல்பவர் பலர் உள்ளனர். இதுவும் ஆன்மீகவாதந்தான். சுயமுன்னேற்ற போதகர்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்களே. இதனால், “லோகாயதம் எதிர் ஆன்மீகம்” எனும் பதம் பலருக்கு ஒரு ஒவ்வாமைச் சொல்லாக அமையும் என்பதாலேயே “ஆன்மீகமும் லோகாயதமும்” எனும் பெயர் பிரேரிக்கப்பட்டது. மனதை முன்நிறுத்தி ஆன்மீகம் பேசுபவர்களுக்கு பணியக்கூடாது என்பதற்காக இப்பெயர் மாற்றத்திற்கு நூலாசிரியர் சம்மதிக்கவில்லை.
சம்மதிக்க மறுத்ததற்கு வேறோர் காரணமும் இருந்தது.  “லோகாயதம் எதிர் ஆன்மீகம்” எனும் தலைப்பு இவ் இரு தத்துவங்கள் தொடர்பான நூலின் நிலைப்பாட்டை நெற்றியில் ஆணி அடிதார்ப்போல பறைசாற்றி நிற்கிறது. இவ் இரண்டுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையும் (தள்ளலும் தழுவலும்) உண்டு எனும் கருத்து மார்க்சியத்தின் பெயரால் முன்வைக்கப்படுவதை தத்துவத் தரிசனங்களில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்திருப்பர். மாறாக இவை இரண்டுக்கும் இடையே உள்ள உறவு நிரந்தரப் பகைமையைக் கொண்டது என்பதே நூலின் கருத்தாகும்.
லோகாயதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே நட்புறவு இருந்து வருவதாகக் கூறி அதைப் புதுப்பிக்க முற்படும் “மண்ணின் மார்க்சியர்கள்” என அழைக்கப்படுபவர்களும் பழமை மீட்புப் பற்றிதான் பேசுகின்றார்கள். அதே நேரம் அரசுகளற்ற – குல சமூக விழுமியங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே நூலின் மையக்கருத்துமாகும். அது மீட்கப்பட வேண்டுமென்பதையும் மீட்கப்பட முடியுமெ ன்பதையும் நூல் முன்வைகின்றது. மேலெழுந்த வாரியாக நோக்கும்போது, இதைப் பழமைக்கு உயிர்கொடுத்து அதைஅப்படியே உலாவவிடுவதென அர்த்தப்படலாம். இல்லை, பழமையைஅடியொற்றி அதன் தொடர்ச்சியாகப் புதுமையைஉருவாக்குவது என்பதேயாகும். ஆனால், பழமையென அடையாளப்படுத்தப்படுவதெது என்பதுதான் இங்குகேள்வி. இந்தியத் தத்துவஞானமென இன்று அழைக்கப்படும் ஆன்மீகக் குப்பைகள்தான் இந்தியப்பழமை எனக் கூறுவதை நூல் நிராகரிகிறது. சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து பெளத்தத்தின் வீழ்ச்சி வரையிலான காலத்தையே இந்தியாவின் வளர்திசைப் பழமையாக நூல் கருதுகிறது. தமிழர்களைக் கணக்கில் கொண்டால் விலங்குநிலை மாந்தர்கால முடிவிலிருந்து வீரயுகத்தின் ஆரம்பம் வரையிலான காலமே வளர்திசைகாலமென கருதப்படுகிறது. ஆன்மீகர்களால் இந்தியத்தத்துவ ஞானமென அழைக்கப்படும் சரக்கில் அறுதிப் பெரும்பான்மையானவை வளர்தடை இந்தியப் பழமையின் திரிபுகளே ஆகும். பழமையின் திரிபை பழமையென்பது வேதாந்தத்திற்கு ஆற்றும் சேவையாகும். “லோகாயதமும் ஆன்மீகமும்” எனும் தலைப்பை நிராகரித்து “லோகாயம் எதிர் ஆன்மீகம்” எனும் பெயரில் உறுதியாக இருந்ததற்கான இராண்டாவது காரணம் இதுதான்.
இது இவ்விதமிருக்க நூலின் முதலாவது நகல் வாசிப்புகு உள்ளாக்கப் பட்டபோது, தத்துவார்த்த விசாரிப்புகளுக்கான பரப்பளவை அதிகரித்தால் நல்லது எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. நூலின் ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதற்காக, தத்துவார்த்தப் பதங்களுக்கு அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டன. (தத்துவார்த்த விசாரணைகளில் ஆர்வமுள்ளவர்கள் அடிக்குறிப்புகளைக் கணக்கில் கொள்ளவும்) இந்த முயற்சியில் ஈடுபடும்போதுதான் சிரமணத்தின் வழித்தோன்றல்களாகிய சமண குடும்ப மதங்களின் வாழ்வியல் முறைகளின் எழுச்சியுடன் லோகாயத்தின் பாத்திரம் பின்னடைவுக்கு உள்ளாகுதல் புரிந்து கொள்ளப்பட்டது. இவ்வாழ்வியல் முறைகள் வேதாந்தத்தையும், பிராமணியத்தையும் எதிர்ப்பதில் மிகத் தீவீரமாக இருந்தன. ஆனால், இவ் எதிர்ப்பு வேதாந்தத்தினதும், பார்ப்பனியத்தினதும் வாழ்வியல் முறைகளுக்கு எதிராகத்தான் இருந்ததே தவிர அவற்றின் தத்துவார்த்தத்திற்கு, அதாவது, ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கவில்லை. லோகாயதவாதத்துடன் சிரமணர்கள் பகை முரண்பாடு கொண்டிருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாகவே இருந்தனர். சமண குடும்ப மதங்களின் எழுச்சிக்காலத்தில் வேதாந்தத்திற்கும் பிரமணியத்திற்கும் எதிரான போராட்டத்தில் தனியான அணி என்ற வகையில் லோகாயதவாதிகள் பலவீனப்பட்டே இருந்தனர். லோகாயதத்துவத்துடன் முரண்பட்ட அப்பாலைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட அஜீவிக, ஜைன, பெளத்த வாழ்வியல் நெறியாளர்களே பிராமணியத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னணிப்படையாகச் செயற்பட்டனர். இவர்கள் நாஸ்திகத்தையிட்டு ஒரு தப்பித்தல்வாதக் கருத்தை மேற்கொண்ட கடவுள் மறுப்பாளர்களாகவே இருந்தனர். சமூகத்தில் தனிச் சொத்துடமை மேலாண்மைபெற, ஆதிலோகாயுதம் பலவீனப்பட்டுப் போகின்றது.
ஆகவே ஆன்மிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் முழுப் பெருமையையும் லோகாதயவாதிகளுக்கு வழங்கிவிட முடியாது. ஆன்மீகத்தை முழுமையாகத் துறக்காத சமண குடும்ப மதத்தினருக்கும் இதில் மிகப்பெரும் பங்குண்டு. இந்தநிலையில் இருந்து நோக்கும்போது, “லோகாயதம் எதிர் ஆன்மிகம்” என்ற தலைப்பு பொருத்தமற்றதாகிறது. பொருத்தமற்ற தலைப்பு கைவிடப்படுகிறது.
4)அகத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?       
புறத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?
“நீ வீழ்த்த்ப்பட்டதை அல்லது வீழ்ந்ததை துணிச்சலுடன் பகிரங்கப்படுத்து. மீசையில் மண்படவில்லை என்ற போலித்தனமும் வேண்டாம், புறநிலையைக் கணக்கில் கொள்ளாமல் மீண்டும் எழுவோம் என்ற தண்டப் பிரசண்டமும் வேண்டாம்; பேச்சில் உண்மையும் செயலில் வீரமும் இருக்கட்டும்.”
இக்காலத்தின் போது மற்றோர் பெயரும் விவாதத்திற்கு வந்தது. “அகத்தால் தோற்கடிக்கப்பட்டோமா? புறத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?” என்பதே அதுவாகும். எம்மவர்களில் சிலர் இத்தலைப்பை நிராகரித்தார்கள். யாரும் தோற்கவில்லை என்பதே அவர்களின் வாதமாகும். சரி, வீழ்ந்தோம் என மாற்றினால்? அதையும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வளர்தடை தலைப்புக் கூடாது என்றனர்.
2009இல் நடந்தது வீழ்ச்சியா? தோல்வியா? வீழ்ச்சியெனும்போது, வீழ்ந்தவர்கள் எழுந்துவந்தால் அது தற்காலிகத் தோல்வி, வீழ்ந்தவர்கள் எழுந்துவரவில்லையானால் அது நிரந்தரத்தோல்வி. தோல்வியென்று மொட்டையாகச் சொல்லும்போது அதுவும் நிரந்தரத்தன்மையைக் குறிக்கும் பதமல்ல. நிரந்தரத் தோல்வியா, தற்காலிகத் தோல்வியா என்று கூறும்போதுதான் நிச்சயத்தன்மை தெளிவாகிறது. ஆகவே, பின்னடைவு, தோல்வி இரண்டுமே ஒன்றுதான். ஆனால், பாவனையில் பின்னடைவென்பது தற்காலிகமானதென்றும், தோல்வியென்பது நிரந்தரமானதென்றும் அர்த்தப்படுகிறது. ஆகவே வீழ்ந்தோமாவென்று சொல்வதே அதிகம் பொருத்தமானது.
ஆனால், வீழ்ந்தோம், என்பதை வெளிப்படையாகக் கூறல் வளர்தடைக் கூற்றாகிவிடுமோ? புறநிலை இருத்தல் எவ்வளவு சாதகமாக இருந்தாலும்சரி உள்ளதை உள்ளபடியே ஏற்ற்க்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அறிவு புறநிலையைக் ‘கசடறக் கற்க’ வேண்டும். மனம் ‘அதற்குத் தக நிற்க’ வேண்டும். அதுதான் லோகாயதவாதம். அதைவிடுத்து “வீழ்ச்சியைப் பேசாதே, வீழ்ச்சியைப் பார்க்காதே, வீழ்ச்சியைக் கேட்காதே” என்பது ஆன்மீகவாதமாகும். வீழ்ச்சியைப் பார், வீழ்ச்சியைக் கேள், வீழ்ச்சியைப்பேசு. அப்போதுதான் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டுகொள்ளமுடியும். இதே போன்றதோர் வீழ்ச்சி இன்னோர் தடவை ஏற்படாமல் தடுக்கமுடியும். எமது வீழ்ச்சிக்கான அகநிலைப்பட்ட காரணங்களை பிறரால் இலகுவில் கண்டுபிடிக்க முடியாது. போராளிகளால்தான் அது முடியும்.
அடுத்ததாக உளவியலெனும் பெயரில் “நீ என்ன கருதுகிறாயோ, அதுதான் நீ” என்றும், “விழ்ச்சியைக்கண்டு கொள்ளாதே. நீ வீழவில்லை என்று நம்பு, நாளைய உனது வெற்றியை மட்டும் நினைவில் இருத்து” எனக் கூறுவது இந்திய ஆன்மீகத்தின் ஐரேப்பியவடிவமாகும். “சுய-முன்னேற்றப் போதகர்கள்” போதிப்பது இதைத்தான். “நீ வினைபுரிந்தாலும், புரியாவிட்டாலும் உன் இச்சைக்குக் கட்டுப்படாத புறம், தன் இச்சைப்படி உன்னில் ஏற்படுத்தும் அனுபவங்கள் உன் மூளையில் எவ்வழியில் ஜீரண்க்கப்படுகிறதோ அதுதான் நீ. அதுதான் உன்மனம். உன்மனம் உனது சொத்துமல்ல, உன் மனம் புறநிலையின் அடிமையுமல்ல. புறநிலையினதும் உனது மூளையினதும் கூட்டுப்படைப்பே உனது மனம். ஆகவே, புறநிலையை முழுமையாகக் உள்வாங்கிக் கொள்.” இதுதான் லோகாயதவாதமாகும். இதன்படி “நீ வீழ்த்த்ப்பட்டதை அல்லது வீழ்ந்ததை துணிச்சலுடன் பகிரங்கப்படுத்து. மீசையில் மண்படவில்லை என்ற போலித்தனமும் வேண்டாம், புறநிலையைக் கணக்கில் கொள்ளாமல் மீண்டும் எழுவோம் என்ற தண்டப் பிரசண்டமும் வேண்டாம்; பேச்சில் உண்மையும் செயலில் வீரமும் இருக்கட்டும்.”
இலங்கைத் தமிழ் பேசும் மக்களெனும் சமூகக் குழுமமாகிய நாம் எமது சொந்தப் பலவீனத்தால்தான் வீழ்ந்தோம் என்றால், நாம் வீழ்ந்தோம். எதிரியின் பலத்தால் நாம் வீழ்ந்தோம் என்றால் நாம் வீழ்த்தப்பட்டோம். சொந்தப் பலத்தை அகம் என்றும் எதிரியின் பலத்தைப் புறம் என்றும் கொண்டால், நாம், எமது அகத்தால் வீழ்ந்தொம் என்பதே நூலாசிரியரின் கருத்தாகும்.
இது இலங்கைத் தமிழ் பேசும் மக்களெனும் குழுமத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல; சிங்களத் தெசிய இனத்துக்கும் பொருத்தமானது. 1990களிலேயே சிங்கள மக்களும் அகத்தால் வீழ்ந்துவிட்டார்கள். இலங்கைத்தீவின் மக்கள் மாத்திரமல்ல. அகத்தால் வீழ்ந்துகொண்டிருக்கும் தெற்காசியப் பிராந்திய உழைக்கும் மக்கள், தேசிய இனங்கள், தேசியங்கள், சாதிப்பிரிவுகள் ஆகிய சகலருக்கும் இது பொருந்தும். வீழாது உள்ளவர்களும் உள்ளனர். எதிரோட்டமாக.
வீழ்ச்சிக்குக் காரணமான அக்குழும அகம் என்பதெது? அக்காரணிகளைச் சுட்டிக்காட்டுவதும், அக்காரணியைச் சரி செய்வதற்கான வழிமுறைகளை அலசுவதுமே இந்நூலின் துணைக்குறிக்கோளும், துணைமையக்கருத்துமாகும். அவ் அகம் இருவகைப்படும். ஒன்று சமூகத்தின் மேற்கட்டுமானம், மற்றையது சமூகத்தின் அடிக்கட்டுமானம், சமூகத்தை மனித உடலாகக் உருவகப்படுத்திக் கொண்டால் முன்னையதை சமூகத்தின் மனமாகவும், பின்னயதை சமூகத்தின் மூளையாகவும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். ஒன்று சமூகத்தின் மனம், மற்றையது சமூகத்தின் மூளை.
இந்நூல், மனத்தையே (மேற்கட்டுமானத்தையே) பகுப்பாய்வு செய்கிறது. சமூக அசைவியக்கத்துக்குத் தேவையான மேற்கட்டுமான நிகழ்வுகள் நான்கு வகைப்படும், அவை: பொருளிய நலனுக்கான இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு இயக்கங்கள் சிந்தாந்த இயக்கங்கள் ஆகியனவாகும். இவைநான்கினதும் கூட்டியக்கந்தான் சமூக இயக்கமாகும், சமூதாயத்தின் ஊக்கசக்தியான இவை நான்கும் ஓய்வின்றி அசைவில் இருந்த வண்ணமேயுள்ளன. இவற்றில் எந்த ஒன்றும் ஒரு கணமேனும், தனது இயக்கத்தை நிறுத்துவதில்லை, ஓய்வொழிச்சலன்றி  இச்செயல் நடந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதோவொரு செயல்பாடுதான் முதன்மை நிலையில் இருக்கும்; ஏனையவை இரண்டாம் நிலைக்குத்தள்ளப்படும் அல்லது இலைமறைகாய் நிலைக்குச் செல்லும். இந்நிகழ்வு மாறிமாறி நடந்து கொண்டேயிருக்கும். இவை நான்குந்தான் சமூகக் குழுமத்தின் மனமெனக் குறிக்கப்படுகிறது. மேற்கட்டுமானம் எனவும் இனங்காணப்படுகிறது.
சமூகக் குழுமத்தின் மனமாகச் செயற்படும் இந்நான்கிற்கும் இடையில் ஏதாவது ஏற்றத்தாழ்வுகள் உண்டா? இவை நான்கும் தத்தமக்கென தனித்தனியான செயற்பாடுப் பொறிமுறைகளைக் கொண்டிருந்தாலும், இவை ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன. அத்துடன் இவை நான்கும், தமது தோற்றத்திற்குக் காரணமாய் இருந்த உற்பத்தி உறவுகள், உற்பத்திச் செயல்முறை (Mode of Production) எனும் ஒரே அடிக்கட்டுமானத்தைச் (மூளையைச்) சார்ந்தும், இயங்குகின்றன. இவை ஒரே மூளையின் படைப்புகளே, ஆகவே இவை சுதந்திரமானவையல்ல. அதே நேரத்தில் சுய இயக்கம் இல்லாதவையுமல்ல. வரையறுக்கப்பட்ட சுய இயக்கம் உள்ளவை. மூளையின் படைப்புகளான இவை, மூளையின் படையணிகளாகச் செயல்படுவதுடன், மூளையின் படைப்புத்திறனை அதிகரிக்கும் பாத்திரத்தை வகிக்கின்றன. இது ஒரு முடிவுறாத சுழற்சி, சமூக அசைவியக்கத்திற்கான முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை இவை நான்கும் சம முக்கியத்துவம் பெற்றவை. இதில் ஒன்று உசத்தி ஒன்று தாழ்ச்சி என்பதில்லை.
ஆனால், ஒரு சமூகக்குழு நிலை மாற்றத்திற்கு உள்ளாக வேண்டுமானால், அம்மாற்றம் பிற்போக்கானதோ, அல்லது முற்போக்கானதோ எதுவானலும் சரி, அம்மாற்றம் சித்தாந்தத் துறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சித்தாந்தத் துறையில் உறுதிப்படுத்தப்பட்டாலே அந்நிலைமாற்றம் சமூக மாற்றமாக உறுதிபடுத்தப்படும். அப்பொதுதான் மனம் / அகம் / எனும் மேற்கட்டுமானம் புரட்சிகரமானதாக மாறும். புரட்சிகர சித்தாந்தம் இல்லையேல், புரட்சிகர நடைமுறையில்லையென்பதன் அர்த்தம் இதுதான். அதாவது சித்தாந்த மாற்றந்தான் ஒரு குழுமத்தின் நிலை மாற்றத்தைத் தீர்மானிக்கிறது. இக்கூற்றை வரட்டுத்தனமாகப் புரிந்து கொண்டு சிந்தாந்த மாற்றமொன்றே போதுமென்ற முடிவுக்கு வரக்கூடாது. ஒரு சமூகக் குழுமத்தின் நிலை மாற்றத்தினை இறுதிப்படுத்துவது (Finalize) சிந்தாந்த மாற்றமே. ஒரு சமூகக் குழுமத்தின் பொருளாதார அடிக்கட்டுமானம் எவ்வளவு தூரத்திற்கு, எவ்வழியில் மாறப்போகிறது என்பதற்கான நம்பகரமான அளவுகோல் அதன் சித்தாந்த மட்டமேயாகும். ஏனையவை நம்பகரமானவையல்ல. அவை போலித் தோற்றங்களாகக் கூட இருக்கலாம்.
எமது பிராந்திய ஒடுக்கப்பட்ட சமுகக் குழுமங்களின் அகம் / மனம் கெட்டுவிட்டது என்பதன் அர்த்தம் அக்குழுமங்களின் சித்தாந்தம் கெட்டுவிட்டது என்பதேயாகும். இவை எவராலும் மறுக்க முடியாது. இக்கைங்கரியத்தில் வெற்றி பெறுவதற்காக இப்பிராந்திய ஆளும் குழுமங்கள் (வர்க்க, சாதிய, இன) பண்பாட்டரங்களிலும் சிந்தாந்த அரங்கங்கிலும், எவ்விதம் செயல்பட்டன என்பதை இந்நூல் விளக்குகிறது. இப்பிராந்திய ஒடுக்கப்பட்ட சமூகக் குழுமங்களின் சிந்தாந்தத்தை, வளர்திசைத் தன்மைமிக்கதாக வேண்டுமானால், அரசியல் அரங்கம் சிதைந்துபோயிருக்கும் இன்றைய நிலையில், பண்பாட்டரங்கில் வினைபுரிவதில் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதை இந்நூல் வழியுறுத்துகிறது.
ஆகவே, “அகத்தால் வீழ்த்தப்பட்டோமா அல்லது புறத்தால் வீழ்த்தப்பட்டோமா?” என்ற தலைப்பு இதற்குப் பொருந்தும். ஆனால் இத்த்லைப்பின் கீழ் எழுதும் போது சமகால நிகழ்வுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டிய நிலையும், அரசியல் அரங்கிற்கு நேரடியாகவே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்நூலில் இவை இரண்டையும் தவிர்ப்பது அவசியமென்ற முடிவிற்கெதிராக இது செல்வதால் இத்தலைப்பும் தவிர்க்கப்பட்டது.
5)   அவைதீகம் எதிர் வைதீகம்
சாதிய சமூக பேரகங்காரவாதம், ஆண் பேரகங்காரவாதம் ஆகிய இரண்டையும் மட்டும் வைத்துக்கொண்டு மதங்களை வகைப்படுத் தினால், பிராமணியக் குடும்ப மதங்களை ஒரு முனையிலும் ஏனைய அனைத்து மதங்களையும் மற்றோர் முனையிலும் வைத்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. சாதிய அடக்குமுறைக்கு எதிரான சமூக நடைமுறைகளைத் தளர்த்துவதிலும், சாதியத்திற்குத் துணை புரியும் கருத்துக்கட்டுமானத்தைப் பலவீனப்படுத்துவதிலும் ‘அவைதீக’ மதங்களின் வளர்திசைப் பங்களிப்புகள் அளப்பரியவை.
இரு இனக்குழுமங்களுக்கிடையே நிலவிவரும் கருத்தியல் மோதலாக அர்த்தப்படுத்தப்படக் கூடுமாதலால் “ஆவைதீகம் எதிர் வைதீகம்” எனும் தலைப்பு ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத் தலைப்பு இரு கருத்தியல்களுக்கு இடையே நடக்கும் மோதலாகவே தோற்றந்தருமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் தெற்காசிய மரபின்படி “வைதீகம்” என்பது பிராமணியக் குடும்ப மதங்களின் “வாழ்முறைகளேயே” (-சடங்குகளும், சம்பிரதாயங்களும்-) குறிக்கின்றன. அதாவது “வைதீகம்” மத முத்திரை குத்தப்பட்டதாகவே உள்ளது. இதனால், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய ‘செமெட்டிக்’ குடும்ப மதங்களும், இஸ்லாத்தையும் பிராமணிய மதத்தையும் இணைத்து சீர்திருத்துவதற்காகத் தோன்றிய சீக்கியமும், பின்நாளில் பிராமணிய மயப்படுத்தப்பட்டுவிட்ட சமண குடும்ப மதங்களும், அவைதீக அணியைச் சேர்ந்த வகைகளாகவே இன்று வரையும் பார்க்கப்படுகின்றன. இதனால் இந்நூல் இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்கும் இடையேயன போரட்டத்தைப் பற்றியது என்ற தோற்றத்தைப் பெற்றுவிடக்கூடும்.
சாதிய சமூக பேரகங்காரவாதம், ஆண் பேரகங்காரவாதம் ஆகிய இரண்டையும் மட்டும் வைத்துக்கொண்டு மதங்களை வகைப்படுத்தினால், பிராமணியக் குடும்ப மதங்களை ஒரு முனையிலும் ஏனைய அனைத்து மதங்களையும் மற்றோர் முனையிலும் வைத்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. சாதிய அடக்குமுறைக்கு எதிரான சமூக நடைமுறைகளைத் தளர்த்துவதிலும், சாதியத்திற்குத் துணைபுரியும் கருத்துக்கட்டுமானத்தைப் பலவீனப்படுத்துவதிலும் ‘அவைதீக’ மதங்களின் வளர்திசைப் பங்களிப்புகள் அளப்பரியவை. ஆண் பேரகங்காரவாத சமூக நடைமுறைகளைத் தளர்த்துவதிலும் அவ்விதமே. ஆனால், ஆண் பேரகங்காரவாதத்திற்கு எதிரான கருத்தியல்க் கட்டுமானத்தைப் பலவீனப்படுத்தும் விடயத்தில் ஜைனம், பெளத்தம் ஆகிய இரு மதங்களைத் தவிர பிற அவைதீக மதங்கள் எதுவும் எந்த வளர்திசைப் பங்கையும் வகிக்கவில்லை. பெண்களின் உரிமை தொடர்பான பார்ப்பனியக் கட்டுமானத்தை நவீனப்படுத்தி உள்ளார்கள் என்றே குறிப்பிடலாம். இருந்தும், தெற்காசிய சமூகம் அரைவேக்காட்டு முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளையாவது உள்வாங்கக் கூடிய அகச் சூழலை உருவாக்கியதில் அனைத்து அவைதீக சமயங்களுக்கும் பெரும் பங்குண்டு. அதுபோல் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அரங்கினில் இந்துப் பண்பாட்டுத்தேசியம்(இந்துத்துவம்) முற்றுமுழு அதிகாரம் செலுத்தும் நிலையை அடைவதைத் தடுத்து நிறுத்தும் சமூக சக்திகளில் ஒன்றாக இருப்பதுவும் இவ் அவைதீக மதங்களேயாகும்.
இந்தியாவில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்து வருவதில் அவைதீக மதங்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், இது அவர்களின் முற்போக்குக் குணாம்சத்தால் தீர்மானிக்கப் படவில்லை. இலங்கையிலும், மியான்மரிலும் பெளத்த பண்பாட்டுத் தேசியம் கொடுங்கோலாட்சி நடத்துகிறது. பங்காளாதேசிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இஸ்லாமியப் பண்பாட்டுத் தேசியம் அதிகாரம் செலுத்திவருகிறது. தாலாய்லாமாவின் தலைமையில் திபெத்திய – பெளத்த பண்பாட்டுத் தேசியம், பிலிப்பைன்சில் கிருஸ்துவ பண்பாட்டுத் தேசியம், தமிழீழத்தில் சைவ-வேளாள பண்பாட்டுத் தேசியம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. தேசப்பாதுகாப்பு அல்லது தேசாபிவிருத்தி என்ற பெயரில் இப்பிராந்தியம் பண்பாட்டுத் தேசியங்கள் எனும் தீய சக்திகளின் பாதுகாப்பு வனப்பிரதேசமாகவும் அவற்றின் மோதல் களங்களாகவும் மாறிவருகின்றது. ………………………………. இக்மோதலின் முற்போக்கு உள்ளடக்கம் பலவீனமானதாகவும், தற்காலிகமானதாகவுமே கணப்படுகின்றது. ஆகவே “ஆவைதீகம் எதிர் வைதீகம்” எனும் தலைப்பு பண்பாட்டரங்கிற்கு ஓரளவிற்குப் பெருந்திவந்தாலும், அரசியல் அரங்கிற்குப் பொருந்தாது.
ஏற்கனவே பார்த்ததுபோல், இப்பகுப்பு பண்பாட்டரங்கிற்கு ஓரளவு பொருந்தும். ஆனால், நூல் பண்பாட்டரங்கின் தத்துவார்த்தப் பின்னணிக்கே அழுத்தம் கொடுக்கிறது. கருத்தியல்க் கட்டுமானத்தில் நோக்கும்போது இப்பிராந்தியத்தில் காணப்படும் அனைத்து மதங்களின் உள்ளடக்கமும் முழுமையாகவே ஆன்மீகந்தான். தமது ஆன்மீக உள்ளடகத்தில் இம்மதங்கள் ஒன்றுகொன்று சளைத்தவைகளல்ல. பண்பாட்டு அரங்கினிலும், அரசியல் அரங்கினிலும், அவைதீக மதங்களுக்கும் லோகாயதவாதிகளுக்கும் இடையே காணப்படும் ஒத்துப்போகும் தன்மையைக் கொண்டு, தத்துவார்த்த அரங்கினில் சமயமைய சிந்தனைக்கும் லோகாயதவாதத்திற்கும் இடையே உள்ள எதிரும் புதிருமான தன்மையை மூடிமறைக்க முடியாது. ஆகவே இப்பெயரும் கைவிடப்பட்டது.
6)   எரிந்த கட்சி எதிர் எரியாத கட்சி

காமம் என்பது அருவம் மாத்திரமேயாகும். அது சூக்குமமானது. காதலும், காமவெறியுமே அதன் உருவங்களாகும். இவை இரண்டும் ஸ்தூலமானவை. சூக்குமான காமம் எரிக்கப்படக்கூடாது; அது எரிக்கப் படவும் முடியாதது. காமம் ஸ்தூலமான காதலாகவளர்வது ஊக்குவிக் கப்படவேண்டும். அதேவேளை காமம் ஸ்தூலமான காமவெறியாக சீரழிவது தடுக்கப்படவேண்டும். நூல் இப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கிறது.  
ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடுத்த பெயர் “எரிந்த கட்சி எதிர் எரியாத கட்சி” என்பதாகும். கிராமங்களில் இன்றும் நடைபெறும் காமன் கூத்தின் உள்ளடக்கம் இதுதான். காமன் எரிந்துவிட்டான் என்பவர்கள் உலக மறுப்பாளர்கள். அதாவது பிரம்மன் மட்டுமே நிஜம்., பிற அனைத்தும் மாயை என்பவர்களாகும் (ஆன்மீகவாதிகளென அழைக்கப்படும் கருத்துமுதல் வாதிகள்) காமனை எரிக்கமுடியாதென்பவர்கள் உலகம் நிஜம் எனும் லோகாதயவாதிகளாகும். இத்தலைப்பு பொருந்துகிறது.
தத்துவம் மக்களால் தொடப்படக்கூடாத புனிதப்பொருளல்ல என்பதற்கு காமன்கூத்து ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆகவே இப்பெயர் பொருத்தமானது எனக்கருதப்பட்டது. ஆனால், நூலின் மையக்கரு கூவம் நதியேயாகும். லோகாயதவாதிகளாலும், சிரமணர்களாலும் உருவாக்கப்பட்ட இனிமையான, அழகிய நதியே கூவமாகும். பிராமணியக் குடும்பமதங்களால் இந்நதி அசுத்தப்படுத்தப்படுகிறது. லோகாயதவாதிகளும், சிரமண வாழ்முறை வழிவந்தவர்களும் (சமண, பெளத்த குடும்ப மதங்கள், சித்தர்கள்) கூவம் நதியை மீண்டும் தூய்மைப்படுத்தும்  பண்பாட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். அவர்களின் பங்களிப்பை மழுங்கடிக்ககூடாது. ஆகவே, “லொக்காயதம் எதிர் ஆன்மீகம்” எனும் தலைப்பு எதற்காகக் கைவிடப்பட்டதோ அதே காரணத்திற்காக இத்தலைப்பும் தவிர்க்கப்பட்டது.
மற்றோர் காரணம், காமம் என்பது அருவம் மாத்திரமேயாகும். அது சூக்குமமானது. காதலும், காமவெறியுமே அதன் உருவங்களாகும். இவை இரண்டும் ஸ்தூலமானவை. சூக்குமான காமம் எரிக்கப்படக்கூடாது; அது எரிக்கப்படவும் முடியாதது. காமம் ஸ்தூலமான காதலாக வளர்வது ஊக்குவிகப்படவேண்டும். அதே வேளை காமம் ஸ்தூலமான காமவெறியாக சீரழிவது தடுக்கப்பட வேண்டும். நூல் இப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கிறது.
ஆகவே, காமம் காமவெறியாக தரந்தாழ்ந்து செல்வது, சமூகச்சீரழின் பிரதான நிகழ்வுப் போக்குகளில் ஒன்றாக ஆகியுள்ள இவ்வேளையில் ”எரிந்த கட்சி எதிர் எரியாதகட்சி” எனும் தலைப்பு காமவெறித் தனத்திற்குத் துணைபோகக் கூடுமோ என்ற அச்சமும் அத்தலைப்பு தவிர்க்கப்பட்டதற்கான காரணமாக அமைந்தது. ஏனெனில், காமவெறி தொடர்பாக பகிரங்கமாக பட்டிதொட்டி எங்கணும் நடைபெற்றுவரும் வாதவிவாதங்களில் மிகப்பெரும்பான் மையானவை காமமெனும் அருவத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான, காமவெறியெனும் உருவத்தினை என்செய்வது என்பது பற்றியதாகவே அமைந்துள்ளது. காமமெனும் அருவம், காதலெனும் உருவமாக (ஸ்தூல உடல் எடுக்க) முடியாததுதான் காமவெறிக்கான காரணமென்பது புரிந்துகொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளாததுதான் பொதுப்புத்தியாக உள்ளது. “எரிந்தகட்சி எதிர் எரியாதகட்சி” எனும் தலைப்பு பொதுப்புத்திக்குத் தீனிபோடுவதாக அமைந்துவிடக்கூடாதென்பதில் எச்சரிக்கையாக இருக்கின் றோம். எரியாத கட்சிக்காக வாதாடும் இந்நூல் காமவெறிக்கான காரணத்தையும் ஆராய்கிறது.
தத்துவம் மக்களுக்கானது
சிரமணர்களின் மேலாண்மை இருந்த காலம் வரை – சிந்துவெளி நாகரிகக் காலம் வரை- தத்துவம் என்பது மக்களுக்கு அப்பாற்பட்ட, மக்களைக் குழப்பும் தன்மை பெற்றதொன்றாக, மக்களை ‘மலைக்கப் பண்ணும்’ குணாம்சம் உள்ளதொன்றாக இருக்கவில்லை. அது மக்களின் வாழ்நிலையின் அறிவியல்த் தொகுப்பாக இருந்தது. ஆகவே அது மக்களுக்குப் புரிந்தது. மக்களால்  பேசப்பட்டது.
மக்கள் தம் சிந்தையில் அளைந்து விளையாடிய தத்துவத்தை மக்களால் தொடப்படக்கூடாத புனிதப்பொருளாக மாற்றியதில் பிராமணியம் பெற்ற வெற்றிதான், கூவம்நதியை அசுத்தப்படுத்தும் கைங்காரியத்தில் வேதாந்தம்/ பிராமணியம் வெற்றி பெற்றமைக்கான அடிப்படையாகும். இதுபற்றி விவரிக்கும் இந்நூலின் நோக்கம் தத்துவம் மக்களால் தொடப்படக்கூடாத புனிதப்பொருளாக இருக்கும் நிலை மாற வேண்டுமென்பதேயாகும்.
சிரமணர்களின் மேலாண்மை இருந்த காலம் வரை – சிந்துவெளி நாகரிகக் காலம் வரை- தத்துவம் என்பது மக்களுக்கு அப்பாற்பட்ட, மக்களைக் குழப்பும் தன்மை பெற்றதொன்றாக, மக்களை ‘மலைக்கப் பண்ணும்’ குணாம்சம் உள்ளதொன்றாக இருக்கவில்லை. அது மக்களின் வாழ்நிலையின் அறிவியல்த் தொகுப்பாக இருந்தது. ஆகவே அது மக்களுக்குப் புரிந்தது. மக்களால்  பேசப்பட்டது. அந்த அறிவியலைத் தொகுப்பதற்காகப் பல சிரமங்கள் மத்தியில் அதையொரு முழுநேரப் பணியாகக்கருதிச் செயல்பட்டுவந்த ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் மக்களால் போசிக்கப்பட்டனர். அவர்களின் சொந்தச் செலவுகள் சொல்லக்கூடியவிதத்தில் எதுவுமே இல்லை என்ற அளவிற்கு மிகவும் குறைவானதாகவே இருந்தது. இவர்களே சிரமணர்கள் ஆவர். பெளத்த, ஜைனத் துறவிகளும், சித்தர்களும் சிரமணர்களின் வழித்தோன்றல்களே. இவர்கள்தான் மக்களின் ஆரம்பகால அறிவுப்பூர்வ அறநெறித்தொண்டர்களாகும்.
பிராமணியத்தின் எழுச்சிக்குப் பின்னர்தான் மன்னர்களால் அதிக செலவில் போசிக்கப்படும் மேட்டுக்குடிப் புத்திஜீவஅணி தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள்தான் பிரமணர்கள். பிரமணர்களின் தோற்றத்தின் பின்பு, சமூகஅனுபவங்களை மக்கள்மொழியில் தொகுத்த ரிஷிகள் தீண்டத்தகாதவர்க ளாகப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்கள். சூனியத்தில் இருந்தும், மாயையில் இருந்தும், பிரம்மத்தில் இருந்தும் தத்துவத்தை உருவாக்கும் பிராமணர்கள் மேட்டுக்குடிகள் ஆக்கப்பட்டனர். தத்துவம் தனிமனித மூளைகளால் உருவாக்கப்படுவதல்ல; அது தொகுக்கப்பட்டு, வளர்க்கப்படுவதாகும். மக்களின் சமூக நடைமுறை அனுபவங்கள் தொகுக்கப்பட்டு மீண்டும் மக்களிடம் வரும்போது மக்களுக்கு அது புரிந்தது. அப்புரிதலை மக்கள் தமது சமூக நடைமுறையில் பிரயோகித்தார்கள்.
ஆனால் சூனியத்தில் இருந்தும் மாயையில் இருந்தும் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் சூனியமாகவும், மாயையாகவுமே இருந்தன. மக்களுக்கு எதுவுமே புரியவில்லை. பிரம்மத்தை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியாது என்று கூறுவது போலவே, தம்மால் உருவாக்கப்பட்ட தத்துவத்திற்கு அப்பால் மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும், மக்கள் தமது அனுபவங்களைத் தொகுத்து தத்துவம் ஆக்கக்கூடாது எனவும் கூறப்பட்டது. தம்மால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் புனிதங்களாக்கப்பட்டன. இறைமறைகளாக்கப்பட்டன. தொகுக்கப்பட்ட தத்துவங்களை கூட வேதங்களாக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அரசு உருவாக்கம் என்ற பகுதியில் நூல் இதுபற்றி ஆராய்கிறது.
தத்துவார்த்த நூல்களைப் பொறுத்தவரையில் மூன்று விதமான வசகர்களை நாம் காண்கிறோம்.
1வது வகையினர்: தாம் எதிர்கொள்ளும் புறநிலைகளை, உள்ளதை உள்ளபடியே கண்டு, அவற்றை விருப்பு வெறுப்பின்றி அப்படியே பதிவு செய்பவர்கள். இவ்விதம் இனங்கண்ட பிரச்சனைகளுக்கான தீர்வை உலகமயமாக்கப்பட்ட சர்வவியாபக தத்துவத்தின் துணையுடன் தேட முற்படுபவர்கள். இவ்விதமானோரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
2வது வகையினர்: தத்துவத்தைக் கணக்கில் கொள்ளாமல் நடைமுறையிலேயே அதிக கவனம் செலுத்துபவர்கள். புறத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கத்தவறுபவர்கள். தமது அகத்தையே புறமாகப் பார்ப்பவர்கள். இவர்களைப் பொறுத்தளவில் புறம் ஒரு மாயை. அகமே நிஜம். புறத்துடன் தொடர்புபடாத தமது அகத்தை நியாயப்படுத்தத்தான் இவர்களுக்குத் தத்துவம் தேவைப்படுகிறது. இதனால், இவர்கள் தமது அகத்தை நியாயப்படுத்தக்கூடிய முறையில் உருவாக்கப்பட்ட தத்துவங்களையும் தேடிப்பறக்கிறார்கள். அனுபவத் தொகுப்பான தத்துவங்களைத் துண்டுதுண்டாகக் கத்தரித்து அத்துண்டுகளை உருவாக்கப்பட்ட தத்துவங்களாக வடிவமைத்துக் கொள்கிறார்கள். ஒரு தத்துவார்த்த நூல் தமது அகத்தை நியாயப்படுத்தவில்லையானால் அதில் ஒன்றுமேயில்லை என்பார்கள். சமூகக் குழுமங்களின் வர்க்க உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும், சமூகக் குழுமங்களால் நடத்தப்படும் போராட்டங்களின் வர்க்கத்தன்மையைப் புரிந்து கொள்ளாதவர்களும் இவ்விதமானவர்களே. முன்னையவர்கள் தேசிய இன வாதிகள், பின்னையவர்கள் நவீன திரிபுவாதிகள்.
3வது வகையினர்: நடைமுறை வேலைகளில் ஈடுபடுவதும் இல்லை. நடைமுறை சார்ந்து சிந்திப்பதும் இல்லை. அதாவது புறத்திலும் அகத்திலும் நடைமுறையை முற்றிலும் நிராகரித்தவர்கள். நடைமுறை அனுபவத்தில் இருந்து தொகுக்கப்பட்ட தத்துவார்த்த அறிவு எதுவுமேயின்றி, சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தத்துவ அறிவு மிக்கவர்கள். முன்கூறிய இரண்டாவது அணியினர், அக-புறத்தொடர்பை நிராகரித்த நடைமுறைவாதிகள். இம் மூன்றாவது அணியினர் புறத்தை நிராகரித்து அகத்தால் வாழும் அகநிலைவாதிகள்.
“தத்துவத்தையும், குறிப்பாக அதன் சகல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அதை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினால், தத்துவத்தை சரித்திரத்தில் இருந்து பிரித்துவைக்காமல் பரிசீலனை செய்யவேண்டும். தத்துவத்தை சமுதாய வாழ்விலிருந்து பிரிக்காமல் பரிசீலிக்கவேண்டும் என்று அர்த்தம். சமுதாயத்திலிருந்து தொடங்கி, சமுதாயத்துள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் காரணப்பொருளையும் வடிவங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும்.” (எங்கெல்ஸ், மேற்கோள்: பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.208.)
இந்தியத் தத்துவஞானத்தைப்பற்றி வியாக்கியானம் செய்பவர்கள் அனைவரும் சமுதாயத்தில் இருந்துத் தொடங்கி, சமுதாயத்துள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தை வியாக்கானம் செய்வதில்லை. சூனியவெளியில் இருந்த வண்ணமே வியாக்கியானம் செய்து வருகிறார்கள், அப்போதுதான் ஆன்மீகம் என்ற கருதியலை அவர்களால் நியாயப்படுத்த முடியும்.
இதற்கு மாறாக, அறத்துக்கான போராட்டங்களின் வரலாற்றையும், அதன் தத்துவார்த்தையும் இனங்காணமுற்படும் இந்நூல், புறத்தை நிராகரித்து அகத்தால் வாழ்வதைத் தவிர்ப்பதற்காக மார்க்சிய ஆசான்களில் ஒருவரான எங்கெல்சின் மேற்கூறிய அணுகுமுறையைப்பின்பற்றி, ராகுல்ஜி மரபினர் வழிநிற்க முயற்சி செய்துள்ளது. இம்முயற்சியில் நூல் வெற்றிபெற்றுள்ளதா என்பதை வாசகர்கள்தான் கூற வேண்டும்.

முன்னுரை முடிவுறுகிறதுMonday, 28 August 2017

‘அறமும் போராட்டமும்’- பெயர்ப் பரிணாமம்-2

 ‘அறமும் போராட்டமும்- பெயர்ப் பரிணாமம்-2

வரவிருக்கும் அறமும் போராட்டமும் எனும் எனது நூலுக்கான முன்னுரையின் இரண்டாம் பகுதி
முதல் பகுதியின் URl-https://vidiyalgowri.blogspot.in/2017/07/munnurai1blog-post.html

நூலின் குறிக்கோள் பற்றியதோர் ஒட்டுமொத்தப் பார்வையைப் புரிந்து கொள்ள, நூலின் பெயர் உருவாக்க நிகழ்வை அறிந்து கொள்ளல் பயனுள்ளதாக இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட தலைப்புகள்1.   தம்மத்தின் அழுகுரலும் இலங்கையின் அவஸ்தையும்
2.   வேதர் எதிர் அவேதர்
3.   “லோகாயுதம் எதிர் ஆன்மீகம்” /“லோகாயுதமும் ஆன்மீகமும்”
4.   அகத்தால் தோற்கடிக்கப்பட்டோமா? புறத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?
5.   அவைதீகம் எதிர் வைதீகம்
6.  
எரிந்த கட்சி எரியாத கட்சி

1) தம்மத்தின் அழுகுரலும்
 இலங்கையின் அவஸ்தையும்

இலங்கை, இந்தியாவின் பொருளாதார மறுவார்ப்பல்ல. ஆனால் பண்பாட்டு மறுவார்ப்புக்குரிய குணாம்சங்கள் மிகத் தாராளமாகவே காணப்படுகின்றன. சனாதன பெளத்தத்தையும், சைவ வேளாளியத்தையும் பொறுத்தவரை சிறிய நாடானா இலங்கைதான் இவ்விரண்டினதும், தலையாக உள்ளது.

இந்நூல், 2011ஆம் ஆண்டு, பிற்பாதியில் கருக்கொண்டது. அப்பொழுது அதன் உத்தேசப்பெயர் “தம்மத்தின் அழுகுரலும் இலங்கையின் அவஸ்தையும்” என்பதாகும். சிங்கள பெளத்த பேரகங்காரவாதத்தின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த தமிழ்பேசும் மக்களாலும், சிங்கள முற்போக்கு அணியினராலும் தனித்தும், கூட்டாகவும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. இலகுவில் மீளமுடியாத  பின்னடைவு ஏற்பட்டது. காலனியல் காலத்தில் இருந்து 2008 வரை சிங்கள- பெளத்த பேரகங்காரவாதத்தை இலங்கைத்தீவின் உள்ளரங்க அரசியல் மேடையில் வைத்துத் தடுத்துநிறுத்த எடுக்கப்பட்ட பல்வகை முயற்சிகளும் தோல்விகண்டன.

தோல்விக்கான காரணிகள் பலவாக அனுமானிக்கப்பட்டன. இலங்கைத்தீவின் பண்பாட்டரங்கச் சீரழிவு அவ் அனுமானங்களில் ஒன்றாகும். “இசைபட வாழ்தலும் பகிர்ந்து வாழ்தலும்” எனும் அறம் முற்றிலும் அழிந்துபோய் “பகைபட வாழ்தலும், பறித்து வாழ்தலுமே” இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் அறமாக மாறியிருந்தது. சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் ஆகிய அனைவரிடமும் இப்பண்பாடே மேல்நிலை பெற்றிருந்தது. சிங்கள-பெளத்த பேரகங்கா ரவாதமே இச் சீரழிவுக்கான பிரதான காரணமாகும். ஏகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் இப் பேரகங்காரவாதச் சேற்றிலே மூழ்கியிருந்ததால் “இசைபட வாழ்தலும் பகிர்ந்து வாழ்தலும்” எனும் பதம் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டது.

இது மட்டுந்தான் தனியான காரணமல்ல. சி-பௌ பேரகங்காரத்துடன் தொடர்புபடாத, வேறுபல அகங்காரவாதங்களும் காரணமாய் இருந்து வருகின்றன. இவ்வித சூழலில் சமூக குழுமபேதங்கள் தனிநபர் பேரகங்காரமாக மாறுவதும் இயல்பானதாகும். சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் “இசைபட வாழ்தலும் பகிர்ந்து வாழ்தலும்” எனும் வாழ்க்கைநெறியை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்குடனும் இந்நூல் அமைய வேண்டுமென்பதே ஆரம்பகாலக் குறிக்கோளாக இருந்தது.

வர்க்க-சமரச இனக்குழும நேயத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கைத்தீவு இவ்அவலங்களில் இருந்து மீள வேண்டுமானால், இனக்குழுமநேயமானது, மனித நேய உள்ளடக்கம் மிக்க வர்க்க நேயத்தால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்பதை இப்பகுதி வலியுறுத்துகிறது. மனிதநேயத்தை நிராகரித்த வர்க்கநேயத்தால் வெற்றிபெற முடியாதென்பதை இலங்கையின் இடதுசாரி இயக்கவரலாறு நிரூபித்துள்ளது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, இப்பிராந்தியம் முழுமைக்கும் பொருந்தும். இதனால் மக்களிடையே காணப்படும் மனிதநேயக்கூறுகளை இனங்காணவும், வெளிக்கொரவும் வேண்டிய நிலை நூல் படைப்பாளர்களுக்கு ஏற்பட்டது. இதன் விளைவு யக்ஞத்-தைப் புரிந்து கொள்வதும் யக்ஞத்தை மீட்பதுவும் அவசியம் எனும் கருத்து ஏற்பட்டது. “இந்திய உபகண்ட அரசுகற்ற குலசமூகம்”எனும் தலைப்பு யக்ஞத்தை அடையாளப் படுத்துகிறது. “அரசு உருவாக்கம்”எனும் பகுதியும், “கூவப்படுத்துவதில் சைவ ஆன்மீகம்” எனும் பகுதியும் மனுதர்மம் எவ்விதம் யக்ஞத்தை வென்றதென்பதை ஆராய்கிறது. “ரிதத்தையும், யக்ஞத்தையும் மீண்டும் பிறப்பிக்க முடியுமா” எனும் பகுதி நவீன யக்ஞத்தை பரிணாமம் பெறவைப்பது எவ்விதம் என்பதை அலசுகிறது.
யக்ஞம் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.

மனித வளர்ச்சியின் விடியலின்போது வேட்டையாடி வாழ்கிற பழங்குடிமக்களின் மத்தியிலோ அல்லது இந்திய விவசாய சமூகங்களின் மத்தியிலோ நாம் காண்கிற கூட்டுவேலையானது இரண்டு அம்சங்களை அடிப்படையாகக்கொண்டது. ஒன்று, உற்பத்திச்சாதனங்களின் பொதுவுடைமை, மற்றையது தேனிக்கள்போன்று ஒவ்வொன்றும் தேன்கூட்டுடனான உறவிலிருந்து எப்படித்தம்மைத் துண்டித்துக் கொள்ள வில்லையோ அதுபோல் இச்சமூதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து மக்கள் தங்களைத் துண்டித்துக்கொள்வதில்லை என்பதாகும். மேற்சொன்ன இரு தனிப்பண்புகளே இவ்வித கூட்டுவேலையை முதலாளித்துவக்கூட்டு வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

இவ்விதம் துண்டித்துக்கொள்ளாமல் இருப்பதற்குத் துணைபுரிந்த “பண்பாட்டு அணிகளையே” இந்நூல் யக்ஞம் என்கிறது.

ஆனால், தம்மத்தின் அழுகுரல்பற்றிய வாசிப்பு பெளத்தத்தை நோக்கிச் சென்று தெற்காசியப் பிராந்தியத்தில் முடிவடைந்தது. அதுபோலவே, தமிழ் தேசியத்தின் தவறுகளுக்குக் காரணமான சைவ வேளாளியத்தைப் பற்றிய வாசிப்பு பக்தி இயக்கத்துக்குத் தாவி பிராமணியத்தில் (வேதாந்தம்/வைதீகம்) முடிவடைந்தது. தெற்காசியப் பண்பாட்டரங்கைப் புரிந்துகொள்ளாமல் இலங்கைத் தீவின் பண்பாட்டரங்கைப் புரிந்துகொள்ள முடியாதென்பது புரிந்தது. எம்மில் பலர் இலங்கைத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான அரசியல் தொடர்பையிட்டுத்தா ன் அதிக நாட்டமுள்ளவர்களாக உள்ளார்கள். இதனால், இலங்கைத்தீவின் அவலங்களுக்கான காரணகாரியத்தொடர்பை அரசியல் அரங்கத்தில் மட்டும் தேடிக்கொண்டிருக்கிறோம். விடைகாண முடியாத தேடல், இரண்டாயிரம் வருடகால வரலாற்றை நோக்கும்போது இரு நாடுகளுக்கும் இடையான பொருளாதார அரங்கத்தொடர்பு சற்றுஅதிகம்தான், இருந்தும் பண்பாட்டரங்கத் தொடர்புதான் மிகவும் சக்தி பெற்றதாக இருந்து வருகின்றது. அது மட்டுமல்ல, பண்பாட்டரங்கத் தொடர்பானது பொருளாதார அரங்கினதும், அரசியல் அரங்கினதும் செயற்பொறிமுறையின் நேரடிக்கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் சுயாதீனச் செயற்பாடு உள்ளதாகவும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியாவின் பொருளாதார மறுவார்ப்பல்ல. ஆனால் பண்பாட்டு மறுவார்ப்புக்குரிய குணாம்சங்கள் மிகத் தாராளமாகவே காணப்படுகின்றன. சனாதன பெளத்தத்தையும், சைவ வேளாளியத்தையும் பொறுத்தவரை சிறிய நாடானா இலங்கைதான் இவ்விரண்டி னதும், தலையாக உள்ளது. இலங்கையின் பெளத்தமும், சைவ வேளாளியமும் கொவிகமவியமும் இந்தியச் சரக்கென்பது சகலரும் அறிந்ததே. ஆனால், இன்றைய இலங்கைத்தீவில் காணப்படும் “பகைபட வாழ்தலும் பறித்து வாழ்தலும் பண்பாடு” கூட இந்தியச் சரக்குத்தான் என்பது பலருக்குத் தெரியாது. பண்பாட்டரங்கைக் கற்கும்போது இது புரியும்.
2)   வேதர் எதிர் அவேதர்

வேதாந்தம், வைதீகம் ஆகிய கருத்துக் கட்டுமானங்கள் வேதர்களுக்கு/ ஆரியர்களுக்கு மட்டும் உரியதல்ல. அக்கருத்துக் கட்டுமானங்களை உருவாக்குவதிலும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதிலும் அவேதர்களுக்கும் திராவிடர்களுக்கும் பங்குண்டு.
இதனால், இலங்கைத்தீவில் மீண்டும் இசைபடவும் பகிர்ந்தும் வாழும் வாழ்க்கை நெறியை செயல்படுத்த வேண்டுமானால், தெற்காசியப் பிராந்தியப் பார்வையும், பிராந்தியளவிலான ஒரு வேலைத்திட்டமும், அவசியமென்பது புரிந்து கொள்ளப்பட்டது. இப்புரிதலின் விளைவு, நூல் இலங்கைத்தீவு எனும் பூகோளப் பரப்பெல்லைகளைத் தாண்டி தெற்காசியப் பிராந்திய பண்பாட்டு எல்லைக்குள் நுழைந்தது. ஆனால் நூலின் குறிக்கோள் மாறவில்லை. “இதனால் தம்மத்தின் அழுகுரலும் இலங்கைத்தீவின் அவலமும்” என்னும் தலைப்பு “வேதர் எதிர் அவேதர்” எனும் தலைப்பாக மாறியது. இம்மாற்றத்திற்கு வழிகாட்டிய தேவி பிரசாத் சட்டோப்பாத்யாயவின் எழுத்துக்களுக்கு நன்றி.
இத்தலைப்புடன் 86 பக்க நகல் 2012, நவம்பர் மாதம் நண்பர்கள் சிலரிடம் தரப்பட்டது. “வேதம் எதிர் அவேதர்” எனும் பெயர் பண்பாட்டரங்கில் நடந்த வர்க்கப் போராட்டத்தை இரு இனக்குழுமங்களிடையேயான போராட்டமாக அர்த்தப்படுத்துவது இனங்காணப்பட்டது. ”திராவிடர் எதிர் ஆரியர் ஒரு மாயாஜலம்” எனும் பகுதி, நூலின் தலைப்புக்கு எதிரானதாகவே உள்ளது. வேதாந்தம், வைதீகம் ஆகிய கருத்துக் கட்டுமானங்கள் வேதர்களுக்கு/ ஆரியர்களுக்கு மட்டும் உரியதல்ல. அக்கருத்துக் கட்டுமானங்களை உருவாக்குவதிலும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதிலும் அவேதர்களுக்கும் திராவிடர்களுக்கும் பங்குண்டு. ஆகவே முழுப்பழியையும் வேதர்கள்/ஆரியர்கள் மீது போடுவது மிகத்தப்பு இது திராவிடர் எனும் இனவாத அடையாள அரசியலுக்கு துணைபோவதாகவே அமையும். ஆகவே இப்பெயரும் மாற்றப்பட்டது.
3) “லோகாயுதம் எதிர் ஆன்மீகம்”
/“லோகாயுதமும் ஆன்மீகமும்

இதனால் “லோகாயுதம் எதிர் ஆன்மீகம்” எனும் பெயர் இடப்பட்டது. நூல் படைப்பில் ஆர்வம் காட்டிவந்த நண்பர்கள் சிலர் இப்பெயரை நிராகரித்தார்கள். “லோகாயதமும் ஆன்மீகவாதமும்” எனும் பெயரைப் பிரேரித்தார்கள். பெரும்பான்மையான சராசரி வாசகர்களிடையே ஆன்மீகமென்பது தெய்வபக்தி, தெய்வவழிபாடு என்றே கருதப்படுகிறது. உளத்தூய்மை, உளத்திருப்தி, உளவின்பம் ஆகியவையும் ஆன்மா எனும் பதத்திலேயே அழைக்கப்படுகின்றன. மனதையும், ஆன்மாவையும் ஒன்றெனக் கருதி, மனதுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மாவுக்கும் கொடுப்பவர்கள் பலர். இது வெறுமனே ஒரு சொற்பதக் குழப்பம் மட்டுமல்ல. அவ்விதம் குழம்புவர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் தமது தவறை உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால், மதங்கள் சொல்லும் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மனந்தான் மனிதனை இயக்குகின்றதென சொல்பவர் பலர் உள்ளனர். இதுவும் ஆன்மீகவாதந்தான். சுயமுன்னேற்ற போதகர்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்களே. இதனால், “லோகாயதம் எதிர் ஆன்மீகம்” எனும் பதம் பலருக்கு ஒரு ஒவ்வாமைச் சொல்லாக அமையும் என்பதாலேயே “ஆன்மீகமும் லோகாயதமும்” எனும் பெயர் பிரேரிக்கப்பட்டது. மனதை முன்நிறுத்தி ஆன்மீகம் பேசுபவர்களுக்கு பணியக்கூடாது என்பதற்காக இப்பெயர் மாற்றத்திற்கு நூலாசிரியர் சம்மதிக்கவில்லை.

சம்மதிக்க மறுத்ததற்கு வேறோர் காரணமும் இருந்தது.  “லோகாயதம் எதிர் ஆன்மீகம்” எனும் தலைப்பு இவ் இரு தத்துவங்கள் தொடர்பான நூலின் நிலைப்பாட்டை நெற்றியில் ஆணி அடிதார்ப்போல பறைசாற்றி நிற்கிறது. இவ் இரண்டுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையும் (தள்ளலும் தழுவலும்) உண்டு எனும் கருத்து மார்க்சியத்தின் பெயரால் முன்வைக்கப்படுவதை தத்துவத் தரிசனங்களில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்திருப்பர். மாறாக இவை இரண்டுக்கும் இடையே உள்ள உறவு நிரந்தரப் பகைமையைக் கொண்டது என்பதே நூலின் கருத்தாகும்.

லோகாயதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே நட்புறவு இருந்து வருவதாகக் கூறி அதைப் புதுப்பிக்க முற்படும் “மண்ணின் மார்க்சியர்கள்” என அழைக்கப்படுபவர்களும் பழமை மீட்புப் பற்றிதான் பேசுகின்றார்கள். அதே நேரம் அரசுகளற்ற – குல சமூக விழுமியங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே நூலின் மையக்கருத்துமாகும். அது மீட்கப்பட வேண்டுமென்பதையும் மீட்கப்பட முடியுமெ ன்பதையும் நூல் முன்வைகின்றது. மேலெழுந்த வாரியாக நோக்கும்போது, இதைப் பழமைக்கு உயிர்கொடுத்து அதைஅப்படியே உலாவவிடுவதென அர்த்தப்படலாம். இல்லை, பழமையைஅடியொற்றி அதன் தொடர்ச்சியாகப் புதுமையைஉருவாக்குவது என்பதேயாகும். ஆனால், பழமையென அடையாளப்படுத்தப்படுவதெது என்பதுதான் இங்குகேள்வி. இந்தியத் தத்துவஞானமென இன்று அழைக்கப்படும் ஆன்மீகக் குப்பைகள்தான் இந்தியப்பழமை எனக் கூறுவதை நூல் நிராகரிகிறது. 

சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து பெளத்தத்தின் வீழ்ச்சி வரையிலான காலத்தையே இந்தியாவின் வளர்திசைப் பழமையாக நூல் கருதுகிறது. தமிழர்களைக் கணக்கில் கொண்டால் விலங்குநிலை மாந்தர்கால முடிவிலிருந்து வீரயுகத்தின் ஆரம்பம் வரையிலான காலமே வளர்திசைகாலமென கருதப்படுகிறது. ஆன்மீகர்களால் இந்தியத்தத்துவ ஞானமென அழைக்கப்படும் சரக்கில் அறுதிப் பெரும்பான்மையானவை வளர்தடை இந்தியப் பழமையின் திரிபுகளே ஆகும். பழமையின் திரிபை பழமையென்பது வேதாந்தத்திற்கு ஆற்றும் சேவையாகும். “லோகாயதமும் ஆன்மீகமும்” எனும் தலைப்பை நிராகரித்து “லோகாயம் எதிர் ஆன்மீகம்” எனும் பெயரில் உறுதியாக இருந்ததற்கான இராண்டாவது காரணம் இதுதான்.

இது இவ்விதமிருக்க நூலின் முதலாவது நகல் வாசிப்புகு உள்ளாக்கப் பட்டபோது, தத்துவார்த்த விசாரிப்புகளுக்கான பரப்பளவை அதிகரித்தால் நல்லது எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. நூலின் ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதற்காக, தத்துவார்த்தப்பதங்களுக்கு அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்ட ன. (தத்துவார்த்த விசாரணைகளில் ஆர்வமுள்ளவர்கள் அடிக்குறிப்புகளைக் கணக்கில் கொள்ளவும்) இந்த முயற்சியில் ஈடுபடும்போதுதான் சிரமணத்தின் வழித்தோன்றல்களாகிய சமண குடும்பமதங்களின் வாழ்வியல் முறைகளின் எழுச்சியுடன் லோகாயத்தின் பாத்திரம் பின்னடைவுக்கு உள்ளாகுதல் புரிந்து கொள்ளப்பட்டது. இவ்வாழ்வியல் முறைகள் வேதாந்தத்தையும், பிராமணியத்தையும் எதிர்ப்பதில் மிகத் தீவீரமாக இருந்தன. ஆனால், இவ் எதிர்ப்பு வேதாந்தத்தினதும், பார்ப்பனியத்தினதும் வாழ்வியல் முறைகளுக்கு எதிராகத்தான் இருந்ததே தவிர அவற்றின் தத்துவார்த்தத்திற்கு, அதாவது, ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கவில்லை. லோகாயதவாதத்துடன் சிரமணர்கள் பகை முரண்பாடு கொண்டிருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாகவே இருந்தனர். சமண குடும்ப மதங்களின் எழுச்சிக்காலத்தில் வேதாந்தத்திற்கும் பிரமணியத்திற்கும் எதிரான போராட்டத்தில் தனியான அணி என்ற வகையில் லோகாயதவாதிகள் பலவீனப்பட்டே இருந்தனர். லோகாயதத்துவத்துடன் முரண்பட்ட அப்பாலைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட அஜீவிக, ஜைன, பெளத்த வாழ்வியல் நெறியாளர்களே பிராமணியத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னணிப்படையாகச் செயற்பட்டனர். இவர்கள் நாஸ்திகத்தையிட்டு ஒரு தப்பித்தல்வாதக் கருத்தை மேற்கொண்ட கடவுள் மறுப்பாளர்களாகவே இருந்தனர். சமூகத்தில் தனிச் சொத்துடமை மேலாண்மைபெற, ஆதிலோகாயுதம் பலவீனப்பட்டுப் போகின்றது.

ஆகவே ஆன்மிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் முழுப் பெருமையையும் லோகாதயவாதிகளுக்கு வழங்கிவிட முடியாது. ஆன்மீகத்தை முழுமையாகத் துறக்காத சமண குடும்ப மதத்தினருக்கும் இதில் மிகப்பெரும் பங்குண்டு. இந்தநிலையில் இருந்து நோக்கும்போது, “லோகாயதம் எதிர் ஆன்மிகம்” என்ற தலைப்பு பொருத்தமற்றதாகிறது. பொருத்தமற்ற தலைப்பு கைவிடப்படுகிறது.

4)அகத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?       
புறத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?

“நீ வீழ்த்த்ப்பட்டதை அல்லது வீழ்ந்ததை துணிச்சலுடன் பகிரங்கப்படுத்து. மீசையில் மண்படவில்லை என்ற போலித்தனமும் வேண்டாம், புறநிலையைக் கணக்கில் கொள்ளாமல் மீண்டும் எழுவோம் என்ற தண்டப் பிரசண்டமும் வேண்டாம்; பேச்சில் உண்மையும் செயலில் வீரமும் இருக்கட்டும்.”

இக்காலத்தின் போது மற்றோர் பெயரும் விவாதத்திற்கு வந்தது. “அகத்தால் தோற்கடிக்கப்பட்டோமா? புறத்தால் தோற்கடிக்கப்பட்டோமா?” என்பதே அதுவாகும். எம்மவர்களில் சிலர் இத்தலைப்பை நிராகரித்தார்கள். யாரும் தோற்கவில்லை என்பதே அவர்களின் வாதமாகும். சரி, வீழ்ந்தோம் என மாற்றினால்? அதையும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வளர்தடை தலைப்புக் கூடாது என்றனர்.

2009இல் நடந்தது வீழ்ச்சியா? தோல்வியா? வீழ்ச்சியெனும்போது, வீழ்ந்தவர்கள் எழுந்துவந்தால் அது தற்காலிகத் தோல்வி, வீழ்ந்தவர்கள் எழுந்துவரவில்லையானால் அது நிரந்தரத்தோல்வி. தோல்வியென்று மொட்டையாகச் சொல்லும்போது அதுவும் நிரந்தரத்தன்மையைக் குறிக்கும் பதமல்ல. நிரந்தரத் தோல்வியா, தற்காலிகத் தோல்வியா என்று கூறும்போதுதான் நிச்சயத்தன்மை தெளிவாகிறது. ஆகவே, பின்னடைவு, தோல்வி இரண்டுமே ஒன்றுதான். ஆனால், பாவனையில் பின்னடைவென்பது தற்காலிகமானதென்றும், தோல்வியென்பது நிரந்தரமானதென்றும் அர்த்தப்படுகிறது. ஆகவே வீழ்ந்தோமாவென்று சொல்வதே அதிகம் பொருத்தமானது.

ஆனால், வீழ்ந்தோம், என்பதை வெளிப்படையாகக் கூறல் வளர்தடைக் கூற்றாகிவிடுமோ? புறநிலை இருத்தல் எவ்வளவு சாதகமாக இருந்தாலும்சரி உள்ளதை உள்ளபடியே ஏற்ற்க்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அறிவு புறநிலையைக் ‘கசடறக் கற்க’ வேண்டும். மனம் ‘அதற்குத் தக நிற்க’ வேண்டும். அதுதான் லோகாயதவாதம். அதைவிடுத்து “வீழ்ச்சியைப் பேசாதே, வீழ்ச்சியைப் பார்க்காதே, வீழ்ச்சியைக் கேட்காதே” என்பது ஆன்மீகவாதமாகும். வீழ்ச்சியைப் பார், வீழ்ச்சியைக் கேள், வீழ்ச்சியைப்பேசு. அப்போதுதான் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டுகொள்ளமுடியும். இதே போன்றதோர் வீழ்ச்சி இன்னோர் தடவை ஏற்படாமல் தடுக்கமுடியும். எமது வீழ்ச்சிக்கான அகநிலைப்பட்ட காரணங்களை பிறரால் இலகுவில் கண்டுபிடிக்க முடியாது. போராளிகளால்தான் அது முடியும்.

அடுத்ததாக உளவியலெனும் பெயரில் “நீ என்ன கருதுகிறாயோ, அதுதான் நீ” என்றும், “விழ்ச்சியைக்கண்டு கொள்ளாதே. நீ வீழவில்லை என்று நம்பு, நாளைய உனது வெற்றியை மட்டும் நினைவில் இருத்து” எனக் கூறுவது இந்திய ஆன்மீகத்தின் ஐரேப்பியவடிவமாகும். “சுய-முன்னேற்றப் போதகர்கள்” போதிப்பது இதைத்தான். “நீ வினைபுரிந்தாலும், புரியாவிட்டாலும் உன் இச்சைக்குக் கட்டுப்படாத புறம், தன் இச்சைப்படி உன்னில் ஏற்படுத்தும் அனுபவங்கள் உன் மூளையில் எவ்வழியில் ஜீரண்க்கப்படுகிறதோ அதுதான் நீ. அதுதான் உன்மனம். உன்மனம் உனது சொத்துமல்ல, உன் மனம் புறநிலையின் அடிமையுமல்ல. புறநிலையினதும் உனது மூளையினதும் கூட்டுப்படைப்பே உனது மனம். ஆகவே, புறநிலையை முழுமையாகக் உள்வாங்கிக் கொள்.” இதுதான் லோகாயதவாதமாகும். இதன்படி “நீ வீழ்த்த்ப்பட்டதை அல்லது வீழ்ந்ததை துணிச்சலுடன் பகிரங்கப்படுத்து. மீசையில் மண்படவில்லை என்ற போலித்தனமும் வேண்டாம், புறநிலையைக் கணக்கில் கொள்ளாமல் மீண்டும் எழுவோம் என்ற தண்டப் பிரசண்டமும் வேண்டாம்; பேச்சில் உண்மையும் செயலில் வீரமும் இருக்கட்டும்.”

இலங்கைத் தமிழ் பேசும் மக்களெனும் சமூகக் குழுமமாகிய நாம் எமது சொந்தப் பலவீனத்தால்தான் வீழ்ந்தோம் என்றால், நாம் வீழ்ந்தோம். எதிரியின் பலத்தால் நாம் வீழ்ந்தோம் என்றால் நாம் வீழ்த்தப்பட்டோம். சொந்தப் பலத்தை அகம் என்றும் எதிரியின் பலத்தைப் புறம் என்றும் கொண்டால், நாம், எமது அகத்தால் வீழ்ந்தொம் என்பதே நூலாசிரியரின் கருத்தாகும்.

இது இலங்கைத் தமிழ் பேசும் மக்களெனும் குழுமத்திற்கு மட்டும் பொருத்த மானதல்ல; சிங்களத் தெசியஇனத்துக்கும் பொருத்தமானது. 1990களி லேயே சிங்கள மக்களும் அகத்தால் வீழ்ந்துவிட்டார்கள். இலங்கைத்தீவின் மக்கள் மாத்திரமல்ல. அகத்தால் வீழ்ந்துகொண்டிருக்கும் தெற்காசியப் பிராந்திய உழைக்கும் மக்கள், தேசிய இனங்கள், தேசியங்கள், சாதிப்பிரிவுகள் ஆகிய சகலருக்கும் இது பொருந்தும். வீழாது உள்ளவர்களும் உள்ளனர். எதிரோட்டமாக.

வீழ்ச்சிக்குக் காரணமான அக்குழும அகம் என்பதெது? அக்காரணிகளைச் சுட்டிக்காட்டுவதும், அக்காரணியைச் சரி செய்வதற்கான வழிமுறைகளை அலசுவதுமே இந்நூலின் துணைக்குறிக்கோளும், துணைமையக்கருத்துமாகும். அவ் அகம் இருவகைப்படும். ஒன்று சமூகத்தின் மேற்கட்டுமானம், மற்றையது சமூகத்தின் அடிக்கட்டுமானம், சமூகத்தை மனித உடலாகக் உருவகப்படுத்திக் கொண்டால் முன்னையதை சமூகத்தின் மனமாகவும், பின்னயதை சமூகத்தின் மூளையாகவும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். ஒன்று சமூகத்தின் மனம், மற்றையது சமூகத்தின் மூளை.

இந்நூல், மனத்தையே (மேற்கட்டுமானத்தையே) பகுப்பாய்வு செய்கிறது. சமூக அசைவியக்கத்துக்குத் தேவையான மேற்கட்டுமான நிகழ்வுகள் நான்கு வகைப்படும், அவை: பொருளிய நலனுக்கான இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு இயக்கங்கள் சிந்தாந்த இயக்கங்கள் ஆகியனவாகும். இவைநான்கினதும் கூட்டியக்கந்தான் சமூக இயக்கமாகும், சமூதாயத்தின் ஊக்கசக்தியான இவை நான்கும் ஓய்வின்றி அசைவில் இருந்த வண்ணமேயுள்ளன. இவற்றில் எந்த ஒன்றும் ஒரு கணமேனும், தனது இயக்கத்தை நிறுத்துவதில்லை, ஓய்வொழிச்சலன்றி  இச்செயல் நடந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதோவொரு செயல்பாடுதான் முதன்மை நிலையில் இருக்கும்; ஏனையவை இரண்டாம் நிலைக்குத்தள்ளப்படும் அல்லது இலைமறைகாய் நிலைக்குச் செல்லும். இந்நிகழ்வு மாறிமாறி நடந்து கொண்டேயிருக்கும். இவை நான்குந்தான் சமூகக் குழுமத்தின் மனமெனக் குறிக்கப்படுகிறது. மேற்கட்டுமானம் எனவும் இனங்காணப்படுகிறது.

சமூகக் குழுமத்தின் மனமாகச் செயற்படும் இந்நான்கிற்கும் இடையில் ஏதாவது ஏற்றத்தாழ்வுகள் உண்டா? இவை நான்கும் தத்தமக்கென தனித்தனியான செயற்பாடுப் பொறிமுறைகளைக் கொண்டிருந்தாலும், இவை ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன. அத்துடன் இவை நான்கும், தமது தோற்றத்திற்குக் காரணமாய் இருந்த உற்பத்திஉறவுகள், உற்பத்திச் செயல்முறை (Mode of Production) எனும் ஒரே அடிக்கட்டுமானத்தைச் (மூளையைச்) சார்ந்தும், இயங்குகின்றன. இவை ஒரே மூளையின் படைப்புகளே, ஆகவே இவை சுதந்திரமானவையல்ல. அதே நேரத்தில் சுயஇயக்கம் இல்லாதவையுமல்ல. வரையறுக்கப்பட்ட சுயஇயக்கம் உள்ளவை. மூளையின் படைப்புகளான இவை, மூளையின் படையணிகளாகச் செயல்படுவதுடன், மூளையின் படைப்புத்திறனை அதிகரிக்கும் பாத்திரத்தை வகிக்கின்றன. இது ஒரு முடிவுறாத சுழற்சி, சமூக அசைவியக்கத்திற்கான முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை இவை நான்கும் சம முக்கியத்துவம் பெற்றவை. இதில் ஒன்று உசத்தி ஒன்று தாழ்ச்சி என்பதில்லை.

ஆனால், ஒரு சமூகக்குழு நிலை மாற்றத்திற்கு உள்ளாக வேண்டுமானால், அம்மாற்றம் பிற்போக்கானதோ, அல்லது முற்போக்கானதோ எதுவானலும் சரி, அம்மாற்றம் சித்தாந்தத் துறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சித்தாந்தத் துறையில் உறுதிப்படுத்தப்பட்டாலே அந்நிலைமாற்றம் சமூக மாற்றமாக உறுதிபடுத்தப்படும். அப்பொதுதான் மனம் / அகம் / எனும் மேற்கட்டுமானம் புரட்சிகரமானதாக மாறும். புரட்சிகர சித்தாந்தம் இல்லையேல், புரட்சிகர நடைமுறையில்லையென்பதன் அர்த்தம் இதுதான். அதாவது சித்தாந்த மாற்றந்தான் ஒரு குழுமத்தின் நிலை மாற்றத்தைத் தீர்மானிக்கிறது. இக்கூற்றை வரட்டுத்தனமாகப் புரிந்து கொண்டு சிந்தாந்த மாற்றமொன்றே போதுமென்ற முடிவுக்கு வரக்கூடாது. ஒரு சமூகக் குழுமத்தின் நிலை மாற்றத்தினை இறுதிப்படுத்துவது (Finalize) சிந்தாந்த மாற்றமே. ஒரு சமூகக் குழுமத்தின் பொருளாதார அடிக்கட்டுமானம் எவ்வளவு தூரத்திற்கு, எவ்வழியில் மாறப்போகிறது என்பதற்கான நம்பகரமான அளவுகோல் அதன் சித்தாந்த மட்டமேயாகும். ஏனையவை நம்பகரமானவையல்ல. அவை போலித் தோற்றங்களாகக் கூட இருக்கலாம்.

எமது பிராந்திய ஒடுக்கப்பட்ட சமுகக் குழுமங்களின் அகம் / மனம் கெட்டுவிட்டது என்பதன் அர்த்தம் அக்குழுமங்களின் சித்தாந்தம் கெட்டுவிட்டது என்பதேயாகும். இவை எவராலும் மறுக்க முடியாது. இக்கைங்கரியத்தில் வெற்றி பெறுவதற்காக இப்பிராந்திய ஆளும் குழுமங்கள் (வர்க்க, சாதிய, இன) பண்பாட்டரங்களிலும் சிந்தாந்த அரங்கங்கிலும், எவ்விதம் செயல்பட்டன என்பதை இந்நூல் விளக்குகிறது. இப்பிராந்திய ஒடுக்கப்பட்ட சமூகக் குழுமங்களின் சிந்தாந்தத்தை, வளர்திசைத் தன்மைமிக்கதாக வேண்டுமானால், அரசியல் அரங்கம் சிதைந்துபோயிருக்கும் இன்றைய நிலையில், பண்பாட்டரங்கில் வினைபுரிவதில் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதை இந்நூல் வழியுறுத்துகிறது.

ஆகவே, “அகத்தால் வீழ்த்தப்பட்டோமா அல்லது புறத்தால் வீழ்த்தப்பட்டோமா?” என்ற தலைப்பு இதற்குப் பொருந்தும். ஆனால் இத்த்லைப்பின் கீழ் எழுதும் போது சமகால நிகழ்வுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டிய நிலையும், அரசியல் அரங்கிற்கு நேரடியாகவே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்நூலில் இவை இரண்டையும் தவிர்ப்பது அவசியமென்ற முடிவிற்கெதிராக இது செல்வதால் இத்தலைப்பும் தவிர்க்கப்பட்டது.

5)   அவைதீகம் எதிர் வைதீகம்

சாதிய சமூக பேரகங்காரவாதம், ஆண் பேரகங்காரவாதம் ஆகிய இரண்டையும் மட்டும் வைத்துக்கொண்டு மதங்களை வகைப்படுத் தினால், பிராமணியக் குடும்ப மதங்களை ஒரு முனையிலும் ஏனைய அனைத்து மதங்களையும் மற்றோர் முனையிலும் வைத்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. சாதிய அடக்குமுறைக்கு எதிரான சமூக நடைமுறைகளைத் தளர்த்துவதிலும், சாதியத்திற்குத் துணை புரியும் கருத்துக்கட்டுமானத்தைப் பலவீனப்படுத்துவதிலும் ‘அவைதீக’ மதங்களின் வளர்திசைப் பங்களிப்புகள் அளப்பரியவை.

இரு இனக்குழுமங்களுக்கிடையே நிலவிவரும் கருத்தியல் மோதலாக அர்த்தப்படுத்தப்படக் கூடுமாதலால் “ஆவைதீகம் எதிர் வைதீகம்” எனும் தலைப்பு ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத் தலைப்பு இரு கருத்தியல்களுக்கு இடையே நடக்கும் மோதலாகவே தோற்றந்தருமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் தெற்காசிய மரபின்படி “வைதீகம்” என்பது பிராமணியக் குடும்ப மதங்களின் “வாழ்முறைகளேயே” (-சடங்குகளும், சம்பிரதாயங்களும்-) குறிக்கின்றன. அதாவது “வைதீகம்” மத முத்திரை குத்தப்பட்டதாகவே உள்ளது. இதனால், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய ‘செமெட்டிக்’ குடும்ப மதங்களும், இஸ்லாத்தையும் பிராமணிய மதத்தையும் இணைத்து சீர்திருத்துவதற்காகத் தோன்றிய சீக்கியமும், பின்நாளில் பிராமணிய மயப்படுத்தப்பட்டுவிட்ட சமண குடும்ப மதங்களும், அவைதீக அணியைச் சேர்ந்த வகைகளாகவே இன்று வரையும் பார்க்கப்படுகின்றன. இதனால் இந்நூல் இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்கும் இடையேயன போரட்டத்தைப் பற்றியது என்ற தோற்றத்தைப் பெற்றுவிடக்கூடும்.

சாதிய சமூக பேரகங்காரவாதம், ஆண் பேரகங்காரவாதம் ஆகிய இரண்டையும் மட்டும் வைத்துக்கொண்டு மதங்களை வகைப்படுத்தினால், பிராமணியக் குடும்ப மதங்களை ஒரு முனையிலும் ஏனைய அனைத்து மதங்களையும் மற்றோர் முனையிலும் வைத்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. சாதிய அடக்குமுறைக்கு எதிரான சமூக நடைமுறைகளைத் தளர்த்துவதிலும், சாதியத்திற்குத் துணைபுரியும் கருத்துக்கட்டுமானத்தைப் பலவீனப்படுத்துவதிலும் ‘அவைதீக’ மதங்களின் வளர்திசைப் பங்களிப்புகள் அளப்பரியவை. ஆண் பேரகங்காரவாத சமூக நடைமுறைகளைத் தளர்த்துவதிலும் அவ்விதமே. ஆனால், ஆண் பேரகங்கார வாதத்திற்கு எதிரான கருத்தியல்க் கட்டுமானத்தைப் பலவீனப்படுத்தும் விடயத்தில் ஜைனம், பெளத்தம் ஆகிய இரு மதங்களைத் தவிர பிற அவைதீக மதங்கள் எதுவும் எந்த வளர்திசைப் பங்கையும் வகிக்கவில்லை. பெண்களின் உரிமை தொடர்பான பார்ப்பனியக் கட்டுமானத்தை நவீனப்படுத்தி உள்ளார்கள் என்றே குறிப்பிடலாம். இருந்தும், தெற்காசிய சமூகம் அரைவேக்காட்டு முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளையாவது உள்வாங்கக் கூடிய அகச் சூழலை உருவாக்கியதில் அனைத்து அவைதீக சமயங்களுக்கும் பெரும் பங்குண்டு. அதுபோல் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அரங்கினில் இந்துப் பண்பாட்டுத்தேசியம்(இந்துத்துவம்) முற்றுமுழு அதிகாரம் செலுத்தும் நிலையை அடைவதைத் தடுத்து நிறுத்தும் சமூக சக்திகளில் ஒன்றாக இருப்பதுவும் இவ் அவைதீக மதங்களேயாகும்.

இந்தியாவில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்து வருவதில் அவைதீக மதங்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், இது அவர்களின் முற்போக்குக் குணாம்சத்தால் தீர்மானிக்கப் படவில்லை. இலங்கையிலும், மியான்மரிலும் பெளத்த பண்பாட்டுத்தேசியம் கொடுங்கோலாட்சி நடத்துகிறது. பங்காளாதேசிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இஸ்லாமியப் பண்பாட்டுத்தேசியம் அதிகாரம் செலுத்திவருகிறது. தாலாய்லாமாவின் தலைமையில் திபெத்திய – பெளத்த பண்பாட்டுத் தேசியம், பிலிப்பைன்சில் கிருஸ்துவ பண்பாட்டுத் தேசியம், தமிழீழத்தில் சைவ-வேளாள பண்பாட்டுத்தேசியம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. தேசப்பாதுகாப்பு அல்லது தேசாபிவிருத்தி என்ற பெயரில் இப்பிராந்தியம் பண்பாட்டுத் தேசியங்கள் எனும் தீய சக்திகளின் பாதுகாப்பு வனப்பிரதேசமாகவும் அவற்றின் மோதல் களங்களாகவும் மாறிவருகின்றது. ………………………………. இக்மோதலின் முற்போக்குஉள்ளடக்கம் பலவீனமானதாகவும், தற்காலிகமானதா கவுமே கணப்படுகின்றது. ஆகவே “ஆவைதீகம் எதிர் வைதீகம்” எனும் தலைப்பு பண்பாட்டரங்கிற்கு ஓரளவிற்குப் பெருந்திவந்தாலும், அரசியல் அரங்கிற்குப் பொருந்தாது.

ஏற்கனவே பார்த்ததுபோல், இப்பகுப்பு பண்பாட்டரங்கிற்கு ஓரளவு பொருந்தும். ஆனால், நூல் பண்பாட்டரங்கின் தத்துவார்த்தப் பின்னணிக்கே அழுத்தம் கொடுக்கிறது. கருத்தியல்க் கட்டுமானத்தில் நோக்கும்போது இப்பிராந்தியத்தில் காணப்படும் அனைத்து மதங்களின் உள்ளடக்கமும் முழுமையாகவே ஆன்மீகந்தான். தமது ஆன்மீக உள்ளடகத்தில் இம்மதங்கள் ஒன்றுகொன்று சளைத்தவைகளல்ல. பண்பாட்டு அரங்கினிலும், அரசியல் அரங்கினிலும், அவைதீக மதங்களுக்கும் லோகாயதவாதிகளுக்கும் இடையே காணப்படும் ஒத்துப்போகும் தன்மையைக் கொண்டு, தத்துவார்த்த அரங்கினில் சமயமைய சிந்தனைக்கும் லோகாயதவாதத்திற்கும் இடையே உள்ள எதிரும் புதிருமான தன்மையை மூடிமறைக்க முடியாது. ஆகவே இப்பெயரும் கைவிடப்பட்டது.

6)   எரிந்த கட்சி எதிர் எரியாத கட்சி

காமம் என்பது அருவம் மாத்திரமேயாகும். அது சூக்குமமானது. காதலும், காமவெறியுமே அதன் உருவங்களாகும். இவை இரண்டும் ஸ்தூலமானவை. சூக்குமான காமம் எரிக்கப்படக்கூடாது; அது எரிக்கப் படவும் முடியாதது. காமம் ஸ்தூலமான காதலாகவளர்வது ஊக்குவிக் கப்படவேண்டும். அதேவேளை காமம் ஸ்தூலமான காமவெறியாக சீரழிவது தடுக்கப்படவேண்டும். நூல் இப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கிறது. 
 
ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடுத்த பெயர் “எரிந்த கட்சி எதிர் எரியாத கட்சி” என்பதாகும். கிராமங்களில் இன்றும் நடைபெறும் காமன் கூத்தின் உள்ளடக்கம் இதுதான். காமன் எரிந்துவிட்டான் என்பவர்கள் உலக மறுப்பாளர்கள். அதாவது பிரம்மன் மட்டுமே நிஜம்., பிற அனைத்தும் மாயை என்பவர்களாகும் (ஆன்மீகவாதிகளென அழைக்கப்படும் கருத்துமுதல் வாதிகள்) காமனை எரிக்கமுடியாதென்பவர்கள் உலகம் நிஜம் எனும் லோகாதயவாதிகளாகும். இத்தலைப்பு பொருந்துகிறது.

தத்துவம் மக்களால் தொடப்படக்கூடாத புனிதப்பொருளல்ல என்பதற்கு காமன்கூத்து ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆகவே இப்பெயர் பொருத்தமானது எனக்கருதப்பட்டது. ஆனால், நூலின் மையக்கரு கூவம் நதியேயாகும். லோகாயதவாதிகளாலும், சிரமணர்களாலும் உருவாக்கப்பட்ட இனிமையான, அழகிய நதியே கூவமாகும். பிராமணியக் குடும்பமதங்களால் இந்நதி அசுத்தப்படுத்த ப்படுகிறது. லோகாயதவாதிகளும், சிரமண வாழ்முறை வழிவந்தவர்களும் (சமண, பெளத்த குடும்ப மதங்கள், சித்தர்கள்) கூவம் நதியை மீண்டும் தூய்மைப்படுத்தும்  பண்பாட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். அவர்களின் பங்களிப்பை மழுங்கடிக்ககூடாது. ஆகவே, “லொக்காயதம் எதிர் ஆன்மீகம்” எனும் தலைப்பு எதற்காகக் கைவிடப்பட்டதோ அதே காரணத்திற்காக இத்தலைப்பும் தவிர்க்கப்பட்டது.

மற்றோர் காரணம், காமம் என்பது அருவம் மாத்திரமேயாகும். அது சூக்குமமானது. காதலும், காமவெறியுமே அதன் உருவங்களாகும். இவை இரண்டும் ஸ்தூலமானவை. சூக்குமான காமம் எரிக்கப்படக்கூடாது; அது எரிக்கப்படவும் முடியாதது. காமம் ஸ்தூலமான காதலாக வளர்வது ஊக்குவிகப்படவேண்டும். அதே வேளை காமம் ஸ்தூலமான காமவெறியாக சீரழிவது தடுக்கப்பட வேண்டும். நூல் இப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கிறது.

ஆகவே, காமம் காமவெறியாக தரந்தாழ்ந்து செல்வது, சமூகச்சீரழின் பிரதான நிகழ்வுப் போக்குகளில் ஒன்றாக ஆகியுள்ள இவ்வேளையில் ”எரிந்த கட்சி எதிர் எரியாதகட்சி” எனும் தலைப்பு காமவெறித் தனத்திற்குத் துணைபோகக் கூடுமோ என்ற அச்சமும் அத்தலைப்பு தவிர்க்கப்பட்டதற்கான காரணமாக அமைந்தது. ஏனெனில், காமவெறி தொடர்பாக பகிரங்கமாக பட்டிதொட்டி எங்கணும் நடைபெற்றுவரும் வாதவிவாதங்களில் மிகப்பெரும்பான் மையானவை காமமெனும் அருவத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான, காமவெறியெனும் உருவத்தினை என்செய்வது என்பது பற்றியதாகவே அமைந்துள்ளது. காமமெனும் அருவம், காதலெனும் உருவமாக (ஸ்தூல உடல் எடுக்க) முடியாததுதான் காமவெறிக்கான காரணமென்பது புரிந்துகொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளாததுதான் பொதுப்புத்தியாக உள்ளது. “எரிந்தகட்சி எதிர் எரியாதகட்சி” எனும் தலைப்பு பொதுப்புத்திக்குத் தீனிபோடுவதாக அமைந்துவிடக்கூடாதென்பதில் எச்சரிக்கையாக இருக்கின் றோம். எரியாத கட்சிக்காக வாதாடும் இந்நூல் காமவெறிக்கான காரணத்தையும் ஆராய்கிறது.

தத்துவம் மக்களுக்கானது

சிரமணர்களின் மேலாண்மை இருந்த காலம் வரை – சிந்துவெளி நாகரிகக் காலம் வரை- தத்துவம் என்பது மக்களுக்கு அப்பாற்பட்ட, மக்களைக் குழப்பும் தன்மை பெற்றதொன்றாக, மக்களை ‘மலைக்கப் பண்ணும்’ குணாம்சம் உள்ளதொன்றாக இருக்கவில்லை. அது மக்களின் வாழ்நிலையின் அறிவியல்த் தொகுப்பாக இருந்தது. ஆகவே அது மக்களுக்குப் புரிந்தது. மக்களால்  பேசப்பட்டது.

மக்கள் தம் சிந்தையில் அளைந்து விளையாடிய தத்துவத்தை மக்களால் தொடப்படக்கூடாத புனிதப்பொருளாக மாற்றியதில் பிராமணியம் பெற்ற வெற்றிதான், கூவம்நதியை அசுத்தப்படுத்தும் கைங்காரியத்தில் வேதாந்தம்/ பிராமணியம் வெற்றி பெற்றமைக்கான அடிப்படையாகும். இதுபற்றி விவரிக்கும் இந்நூலின் நோக்கம் தத்துவம் மக்களால் தொடப்படக்கூடாத புனிதப்பொருளாக இருக்கும் நிலை மாற வேண்டுமென்பதேயாகும்.

சிரமணர்களின் மேலாண்மை இருந்த காலம் வரை – சிந்துவெளி நாகரிகக் காலம் வரை- தத்துவம் என்பது மக்களுக்கு அப்பாற்பட்ட, மக்களைக் குழப்பும் தன்மை பெற்றதொன்றாக, மக்களை ‘மலைக்கப் பண்ணும்’ குணாம்சம் உள்ளதொன்றாக இருக்கவில்லை. அது மக்களின் வாழ்நிலையின் அறிவியல்த் தொகுப்பாக இருந்தது. ஆகவே அது மக்களுக்குப் புரிந்தது. மக்களால்  பேசப்பட்டது. அந்த அறிவியலைத் தொகுப்பதற்காகப் பல சிரமங்கள் மத்தியில் அதையொரு முழுநேரப் பணியாகக்கருதிச் செயல்பட்டுவந்த ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் மக்களால் போசிக்கப்பட்டனர். அவர்களின் சொந்தச் செலவுகள் சொல்லக்கூடியவிதத்தில் எதுவுமே இல்லை என்ற அளவிற்கு மிகவும் குறைவானதாகவே இருந்தது. இவர்களே சிரமணர்கள் ஆவர். பெளத்த, ஜைனத் துறவிகளும், சித்தர்களும் சிரமணர்களின் வழித்தோன்றல்களே. இவர்கள்தான் மக்களின் ஆரம்பகால அறிவுப்பூர்வ அறநெறித்தொண்டர்களாகும்.

பிராமணியத்தின் எழுச்சிக்குப் பின்னர்தான் மன்னர்களால் அதிக செலவில் போசிக்கப்படும் மேட்டுக்குடிப் புத்திஜீவஅணி தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள்தான் பிரமணர்கள். பிரமணர்களின் தோற்றத்தின் பின்பு, சமூகஅனுபவங்களை மக்கள்மொழியில் தொகுத்த ரிஷிகள் தீண்டத்தகாதவர்க ளாகப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்கள். சூனியத்தில் இருந்தும், மாயையில் இருந்தும், பிரம்மத்தில் இருந்தும் தத்துவத்தை உருவாக்கும் பிராமணர்கள் மேட்டுக்குடிகள் ஆக்கப்பட்டனர். தத்துவம் தனிமனித மூளைகளால் உருவாக்கப்படுவதல்ல; அது தொகுக்கப்பட்டு, வளர்க்கப்படுவதாகும். மக்களின் சமூக நடைமுறை அனுபவங்கள் தொகுக்கப்பட்டு மீண்டும் மக்களிடம் வரும்போது மக்களுக்கு அது புரிந்தது. அப்புரிதலை மக்கள் தமது சமூக நடைமுறையில் பிரயோகித்தார்கள்.
ஆனால் சூனியத்தில் இருந்தும் மாயையில் இருந்தும் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் சூனியமாகவும், மாயையாகவுமே இருந்தன. மக்களுக்கு எதுவுமே புரியவில்லை. பிரம்மத்தை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியாது என்று கூறுவது போலவே, தம்மால் உருவாக்கப்பட்ட தத்துவத்திற்குஅப்பால் மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும், மக்கள் தமது அனுபவங்களைத் தொகுத்து தத்துவம் ஆக்கக்கூடாது எனவும் கூறப்பட்டது. தம்மால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் புனிதங்களாக்கப்பட்டன. இறைமறைகளாக்கப்பட்டன. தொகுக்கப்பட்ட தத்துவங்களை கூட வேதங்களாக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அரசு உருவாக்கம் என்ற பகுதியில் நூல் இதுபற்றி ஆராய்கிறது.

தத்துவார்த்த நூல்களைப் பொறுத்தவரையில் மூன்று விதமான வசகர்களை நாம் காண்கிறோம்.

1வது வகையினர்: தாம் எதிர்கொள்ளும் புறநிலைகளை, உள்ளதை உள்ளபடியே கண்டு, அவற்றை விருப்பு வெறுப்பின்றி அப்படியே பதிவு செய்பவர்கள். இவ்விதம் இனங்கண்ட பிரச்சனைகளுக்கான தீர்வை உலகமயமாக்கப்பட்ட சர்வவியாபக தத்துவத்தின் துணை

2வது வகையினர்: தத்துவத்தைக் கணக்கில் கொள்ளாமல் நடைமுறையிலேயே அதிக கவனம் செலுத்துபவர்கள். புறத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கத்தவறு பவர்கள். தமது அகத்தையே புறமாகப் பார்ப்பவர்கள். இவர்களைப் பொறுத்தளவில் புறம் ஒரு மாயை. அகமே நிஜம். புறத்துடன் தொடர்புபடாத தமது அகத்தை நியாயப்படுத்தத்தான் இவர்களுக்குத் தத்துவம் தேவைப்படுகிறது. இதனால், இவர்கள் தமது அகத்தை நியாயப்படுத்தக்கூடிய முறையில் உருவாக்கப்பட்ட தத்துவங்க ளையும் தேடிப்பறக்கிறார்கள். அனுபவத் தொகுப்பான தத்துவங்களைத் துண்டுதுண்டாகக் கத்தரித்து அத்துண்டுகளை உருவாக்கப்பட்ட தத்துவங்களாக வடிவமைத்துக் கொள்கிறார்கள். ஒரு தத்துவார்த்த நூல் தமது அகத்தை நியாயப்படுத்தவில்லையானால் அதில் ஒன்றுமேயில்லை என்பார்கள். சமூகக் குழுமங்களின் வர்க்க உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும், சமூகக் குழுமங்களால் நடத்தப்படும் போராட்டங்களின் வர்க்கத்தன்மையைப் புரிந்து கொள்ளாதவர்களும் இவ்விதமானவர்களே. முன்னையவர்கள் தேசிய இன வாதிகள், பின்னையவர்கள் நவீன திரிபுவாதிகள்.

3வது வகையினர்: நடைமுறை வேலைகளில் ஈடுபடுவதும் இல்லை. நடைமுறை சார்ந்து சிந்திப்பதும் இல்லை. அதாவது புறத்திலும் அகத்திலும் நடைமுறையை முற்றிலும் நிராகரித்தவர்கள். நடைமுறை அனுபவத்தில் இருந்து தொகுக்கப்பட்ட தத்துவார்த்த அறிவு எதுவுமேயின்றி, சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தத்துவ அறிவு மிக்கவர்கள். முன்கூறிய இரண்டாவது அணியினர், அக-புறத்தொடர்பை நிராகரித்த நடைமுறைவாதிகள். இம் மூன்றாவது அணியினர் புறத்தை நிராகரித்து அகத்தால் வாழும் அகநிலைவாதிகள்.

“தத்துவத்தையும், குறிப்பாக அதன் சகல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அதை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினால், தத்துவத்தை சரித்திரத்தில் இருந்து பிரித்துவைக்காமல் பரிசீலனை செய்யவேண்டும். தத்துவத்தை சமுதாய வாழ்விலிருந்து பிரிக்காமல் பரிசீலிக்கவேண்டும் என்று அர்த்தம். சமுதாயத்திலிருந்து தொடங்கி, சமுதாயத்துள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் காரணப்பொருளையும் வடிவங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும்.” (எங்கெல்ஸ், மேற்கோள்: பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.208.)

இந்தியத் தத்துவஞானத்தைப்பற்றி வியாக்கியானம் செய்பவர்கள் அனைவரும் சமுதாயத்தில் இருந்துத் தொடங்கி, சமுதாயத்துள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தை வியாக்கானம் செய்வதில்லை. சூனியவெளியில் இருந்த வண்ணமே வியாக்கியானம் செய்து வருகிறார்கள், அப்போதுதான் ஆன்மீகம் என்ற கருதியலை அவர்களால் நியாயப்படுத்த முடியும்.

இதற்கு மாறாக, அறத்துக்கான போராட்டங்களின் வரலாற்றையும், அதன் தத்துவார்த்தையும் இனங்காணமுற்படும் இந்நூல், புறத்தை நிராகரித்து அகத்தால் வாழ்வதைத் தவிர்ப்பதற்காக மார்க்சிய ஆசான்களில் ஒருவரான எங்கெல்சின் மேற்கூறிய அணுகுமுறையைப்பின்பற்றி, ராகுல்ஜி மரபினர் வழிநிற்க முயற்சி செய்துள்ளது. இம்முயற்சியில் நூல் வெற்றிபெற்றுள்ளதா என்பதை வாசகர்கள்தான் கூற வேண்டும்.

முன்னுரை முடிவுறுகிறது